

ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் ‘கே.ஜி.எஃப்’, ‘கே.ஜி.எஃப் 2’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார் விஜய் கிரகந்தூர். கடந்த 2018-ல்முதல் பாகம் வெளியாகி வசூல் சாதனை படைத்திருந்த நிலையில், அதன் இரண்டாம் பாகமான ‘கே.ஜி.எஃப் 2’ வரும் 14-ம் தேதியன்று, இந்தி உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகிறது. பட வெளியீட்டை முன்னிட்டு, மும்பை, சென்னை, ஹைதராபாத், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களிருந்து பத்திரிகையாளர்களை அழைத்து பெங்களூரூவில் ‘கே.ஜி.எஃப் 2’ படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவை நடத்தினார்கள். படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நாயகன் யாஷ், நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ரவீணா டாண்டன் உள்பட படக் குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது, “இந்திய சினிமாவின் பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்றை தமிழ்நாட்டில் வெளியிடுவது எங்களுடைய ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்துக்குக் கிடைத்த கௌரவம். நாடு முழுவதும் ‘கே.ஜி.எஃப் 2’ மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. யாஷ் பெரும் பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார். அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்புக்கான வெற்றியாக இந்த படத்தின் வெற்றி அமையும்.” என்றார்.
படத்தை கேரளத்தில் வெளியிடும் நடிகரும் இயக்குநருமான பிருத்வி ராஜ்: “தென்னிந்திய சினிமாவுக்கு இது பெருமையான தருணம். இந்தியத் திரையுலகினர் ஒன்றிணைய வேண்டிய நேரமும் கூட. பாலிவுட், மோலிவுட், கோலிவுட், டோலிவுட் என எல்லா ‘வுட்’களும் இருக்கட்டும். மொழி உள்ளிட்ட எல்லா தடைகளையும் கடந்து, கைக்கோத்து, கே.ஜி.எஃப் 2’ போன்ற இந்தியாவுக்கான திரைப்படங்களைத் தொடர்ந்து படைப்போம்.” என்று பேசினார்.
இயக்குநர் பிரசாந்த் நீல் பேசுகையில், “நாங்கள் ‘கே.ஜி.எஃப்’ பயணத்தைத் தொடங்கி எட்டு வருடங்கள் நிறைவடைகின்றன. சொல்ல முடிந்த அனைத்தையும் கதையாகச் சொல்லி இருக்கிறேன். முதல் பாகத்துக்கு பெரிய வெற்றியைக் கொடுத்து, கன்னட சினிமாவுக்கு இந்தியத் திரையுலகில் முக்கிய இடத்தைப் பெற்று தந்ததற்காக அனைவருக்கும் நன்றி. என்னுடன் சிறந்த தொழில்நுட்பக் குழுவினர் இருக்கிறார்கள். அவர்களின் துணை இல்லாமல் ‘கே.ஜி.எஃப்’ போன்ற ஒரு படம் உருவாகச் சாத்தியமேயில்லை. இப்படத்தின் நாயகன் யாஷ் அனைத்து அம்சங்களும் அடங்கிய நவீன ஸ்மார்ட்போன் போன்றவர். அவருடைய பன்முகத் திறன் இந்தப் படத்தை இன்னும் உயர்த்தியது. படத்தில் பல இடங்களில் வசனம் கூட எழுதினார். மறைந்த புனித் ராஜ்குமாருக்கு இப்படத்தை அர்ப்பணிக்க விரும்புகிறேன். அவர் எங்களின் பெருமை” என்றார்.
இறுதியாகப் பேசிய படத்தின் நாயகன் யாஷிடம், ‘ஏப்ரல் 14 அன்று தமிழ்நாட்டில் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படம் ரிலீஸ் ஆகிறது. அதனுடன் ‘கே.ஜி.எஃப் 2’ மோத வேண்டுமா?’ எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த யாஷ்: “யார் வெற்றி பெறுவார்கள் என்பதைப் பார்க்க இது தேர்தல் அல்ல. இது சினிமா. ‘கே.ஜி.எஃப்’, ‘பீஸ்ட்’ இடையில் போட்டி என்பதே கிடையாது. விஜய் சார் மிகப்பெரிய நட்சத்திரம். அவர் நீண்ட காலமாக மக்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகிறார். அவர் எனக்கு சீனியர். சீனியர்களை விட நான் உயர்ந்தவன் என்ற எண்ணம் எழும்போது உங்கள் சரிவு தொடங்கும். எனக்கு அப்படியொரு எண்ணம் இல்லை. நான் ‘பீஸ்ட்’ படம் பார்ப்பேன். விஜயின் ரசிகர்களும் ‘கே.ஜி.எஃப் 2’ படத்தைப் பார்த்துக் கொண்டாடுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.” என்று முடித்தார். ஐந்து மொழிகளில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் இதுவரை 22 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது.