

இந்தியாவைக் கதைக்களமாகக் கொண்டு எழுத்தாளர் ருட்யார்ட் க்ளிப்பிங் படைத்த ‘தி ஜங்கிள் புக்’ கதையின் ஒரே மனிதக் கதாபாத்திரமான காட்டில் வளரும் சிறுவன் மோக்ளி. மோக்ளியாக நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுவன் இந்தியாவைச் சேர்ந்த நீல் சேத்தி. உலகெங்கும் இருக்கும் இத்திரைப்படம் வெளியாவதற்காக ஜங்கிள் புக்கின் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்தியாவில் இம்மாதம் மாதம் வெளியாகவிருக்கும் இத்திரைப்பட வெளியீட்டையொட்டி நீல் சேத்தி தனது பூர்வீக நாடான இந்தியாவில் தற்போது சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
இந்தியர்களைப் பொருத்தவரை, ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படம் மிகவும் நெருக்கமானது. மோக்ளி கதாபாத்திரத்தில் நடிக்க 2000 சிறுவர் நடிகர்களை நடிக்க வைத்து சோதித்துப் பார்த்தபிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகன்தான் நமது நீல் சேதி. நீல் சேதிக்கு ஒரு நடிகனாக இது முதல் திரைப்படம்.
“எனது பாட்டி, தாத்தா வழியாக இந்தியக் காடுகளைப் பற்றிப் பல கதைகளைக் கேட்டுள்ளேன். அதனால் மீண்டும் எனது தாய்நாட்டுக்கு இத்திரைப்படத்தையொட்டி வந்தது சந்தோஷமாக உள்ளது. இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட கதையில் மோக்ளி கதாபாத்திரத்தில் நடிப்பது எனது பெற்றோருக்குக் கூடுதல் சந்தோஷம்” என்கிறான் அந்தக் குட்டிப் பையன்.
நியூயார்க்கை வாழ்விடமாகக் கொண்ட நீல் சேத்தி, பாகீரா, பாலூ போன்ற விலங்குக் கதாபாத்திரங்களுடன் நடித்த அனுபவம் பரவசம் தந்ததாகக் குறிப்பிடுகிறான். நீலுக்குப் பிடித்த கதாபாத்திரம் கரடியாக வரும் பாலூதானாம்.
“மோக்ளி கதாபாத்திரத்திற்குப் பொருத்தமான குழந்தை நட்சத்திரத்தைத் தேடுவதுதான் முக்கியமான பணியாக இருந்தது. ஏற்கனவே அனிமேஷன் படத்தில் வந்த மோக்ளி கதாபாத்திரத்தின் அதே உடல் மற்றும் மன உணர்வுகளை வெளிப்படுத்துபவனாக நீல் சேத்தி இருந்தான். அத்துடன் வேடிக்கையும் நகைச்சுவை உணர்வும் இயற்கையாக அந்தப் பையனுக்குள் இருந்தது. இத்திரைப்படம் மோக்ளியின் நடிப்புத் திறனை மட்டுமே நம்பியுள்ளது. அவனைப் பார்த்தவுடன் நாங்கள் எங்கள் மோக்ளியைக் கண்டுவிட்டதாக உணரந்தோம்.” என்கிறார் இப்படத்தின் இயக்குனர் ஜான் பேவ்ரியு.
இப்படத்தின் டிரைலரைப் பார்த்தே உலகம் முழுவதும் உள்ள ஜங்கிள் புக் ரசிகர்கள் நீல் சேத்தியின் ரசிகர்களாகிவிட்டனர்.