

‘அசுரன்’, ‘கர்ணன்’ படங்களைத் தொடர்ந்து, கலைப்புலி எஸ்.தாணு வெளியிடவிருக்கும் படம் ‘செல்ஃபி’. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா நாயகன் நாயகியாகவும் கவுதம் மேனன் வில்லனாகவும் நடித்திருக்கிறார்கள்.வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த மதிமாறன் இயக்கி இருக்கிறார். ‘கேப்பிடேஷன்’ மூலம் பணம் பண்ணும் தனியார் கல்லூரிகளுக்கு மாணவர்களைப் பிடித்துவரும் வில்லனின் தொழிலில் குறுக்கிட்டு, சந்தையைக் கைப்பற்றும் ஒரு பொறியியல் பட்டதாரி மாணவனின் கதையாக இப்படம் உருவாகியிருக்கிறது. ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ளார். படத்தின் ட்ரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
கேமராவை வீசிவிட்டு...
‘மைனா’, ‘சாட்டை’ போன்ற படங்களைத் தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம், ஆண்ட்ரியாவின் நடிப்பில் உருவாக்கியிருக்கும் படம் ‘கா’. காட்டுக்குள் சென்று விலங்குகள், பறவைகளைப் படம் பிடிக்கும் கானுயிர் ஒளிப்படக் கலைஞராக நடித்திருக்கிறார் ஆண்ட்ரியா. காட்டுக்குள் வந்து சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடும் கும்பலோடு மோத வேண்டிய சூழ்நிலை உருவாகும்போது, கேமராவை வீசிவிட்டு கதாநாயகி கத்தியை எடுப்பதுதான் கதையாம். விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’ படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்த சலீம் கவுஸ் இதில் வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். ‘முழுவதும் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் படமாகியிருக்கும் இப்படம், ஆண்ட்ரியாவுக்கு முதல் முழுநீள ஆக் ஷன் படம்’ என்கிறார் அதை எழுதி இயக்கியிருக்கும் நாஞ்சில்.
அக் ஷராவுக்கு பரிட்சை!
மூன்று வருடத்துக்கு ஒரு படத்தில் நடித்தாலும் ஈடுபாட்டுடன் நடிக்க முயல்பவர் கமலின் இளைய மகளான அக் ஷரா ஹாசன். அவரைப் பெண் மையக் கதாபாத்திரமாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’. அதில், பழமைவாதக் குடும்பத்தைச் சேர்ந்த பவித்ரா என்கிற 19 வயதுப் பெண்ணின் நவீன உலகப் பாடுகளை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அக் ஷரா. இந்தப் படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ராஜா ராமமூர்த்தி. அக் ஷராவுடன் உஷா உதுப், அஞ்சனா ஜெயபிரகாஷ், மால்குடி சுபா, ஜானகி சபேஷ், சுரேஷ் சந்திர மேனன் நடித்துள்ள இப்படம் இன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. ‘கிட்டத்தட்ட இது எனக்கொரு பரிட்சை’ என்று கூறியிருக்கிறார் அக் ஷரா.