

ஏப்ரல் 23 உலகப் புத்தக நாள்
புகழ்பெற்ற தனது படைப்புகளின் வழியே உலகின் பல மொழிகளிலும் வாழ்ந்துகொண்டிருப்பவர் வைக்கம் முகமது பஷீர். அவரது எழுத்துக்கள் வாசக நெஞ்சங்களால் எப்பொழுதும் கொண்டாடப்படுவதற்கு முக்கியக் காரணம், வாழ்வின் சுவடுகளை தனது படைப்புகள் எங்கும் பரிமளிக்கச் செய்த அவரது நேர்மையும் பாசாங்கற்ற மொழியும்தான்.
பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் ராஜத்துரோக வழக்கு சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பஷீர், அங்கு கிடைத்த அனுபவங்களையே ‘மதிலுகள்' கதையாக எழுதினார்.
மத்திய சிறைச்சாலைகளின் உயரமான மதிற்சுவர்கள் பார்ப்பதற்கே அச்சம் தரக்கூடியவை. அந்த மதிலின் இரண்டு பக்கத்திலும் சிறைவைக்கப்பட்ட இருவேறு ஜீவன்களின் இதயங்களை அந்தச் சுவர் பிணைத்தது. ஐம்பது, அறுபது பக்கங்களே கொண்ட இந்தச் சிறிய நாவலில் கண்ணுக்குத் தெரியாத காற்றலையாகக் காதல் மிதந்துகொண்டிருக்கிறது.
அனுமதி கொடுத்த பஷீர்
‘மதிலுகள்' (1989) கதையைத் திரைப்படமாக எடுக்கவேண்டும் என இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் யோசித்ததை நினைத்தாலே வியப்பாக இருக்கிறது.
மதிலுகளைத் திரைப்படமாக எடுக்கப்போகிறேன் என்று கூறி அனுமதி கேட்கச் சென்றபோது “அந்த நாராயணி கேரக்டருக்கு யாரை நடிக்கவைக்கிறதா உத்தேசம்?'' என்று பஷீர் கேட்க, அதற்கு அடூர் வாய்விட்டுச் சிரித்தார். அதுமட்டுமல்ல, நாவல் தனக்கு ஏற்படுத்திய அனுபவத்தை எழுத்தாளரிடம் பகிர்ந்துகொண்டார். “இதற்குச் சரியான ஆள் நீங்கள்தான்'' என்று தனது சம்மதத்தை ஆசியாக இயக்குநருக்குத் தெரிவித்தார்.
ஒரு திரைப்பட இயக்குநருக்கு இலக்கியத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடு இருக்க வேண்டும். அப்போதுதான் அதை எழுதிய எழுத்தாளனின்மீது மரியாதையும் இருக்கும். அந்த வகையில் அடூர் சிறந்த இயக்குநராக பஷீருக்குக் கிடைத்தது பெரும்பாக்கியம்தான். நாவலைச் சிதைக்காமல் அதன் நுட்பங்களைத் திரையில் அழகுபடுத்தியிருப்பார் அடூர்.
மதிலுக்கு அப்பால் ஒரு தோழி
முழுக்க முழுக்க சிறைச்சாலை வளாகம், ஒரு சிறிய நீதிமன்றம். இதை வைத்துக்கொண்டு ஒரு இயக்குநராக என்ன செய்துவிட முடியும்! ஆனால் இதில்தான் தனது படைப்பின் கலாபூர்வத் தருணங்களை நேர்த்தியாக வடித்துத் தந்தார் அடூர். எவ்வித சாகசங்களும் தேவைப்படாமல் மிக இயல்பாக ஒரு ஹீரோவை தனது திரைப்படத்துக்குப் பொருத்தமான பாத்திரத்தில் மம்முட்டியை நடிக்க வைத்தார்.
அதிகாலை தூக்கிலிடப்படப் போகும் கைதிக்குத் தேநீர் வேண்டுமென்று ஒரு சிறைக் காவலர் இவரின் சிறைக் கம்பிகளைத் தட்டிக் கேட்கிறார். உடனே எழுந்து தேநீர் போட்டுக் கொடுப்பதோடு அவர் மனநெருக்கடியைக் குறைக்க தன்னிடமிருந்து ஒரு பீடியையும் எடுத்துக்கொடுப்பார்.
தினந்தோறும் இவரின் உரையாடல்களைக் கேட்டுச் சிரிக்கும் ஆயுள்தண்டனை பெற்ற பெண்ணொருத்தியின் குரலும், ஆண்கள் சிறையின் மதிலுக்கு அப்பால் ஒலிக்கும். இவர் `யாரது?’ என்று கேட்க, இப்படியாக அவர்கள் உரையாடல் தொடங்க நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக் குரல்களின் வழியே சினேகம் தழைக்கும். அவர்கள் சிறைச்சாலை மருத்துவமனையில் சந்தித்துக்கொள்ள இருந்த நேரத்தில், மம்முட்டிக்கு விடுதலை கிடைக்கப் போகும் செய்தியைச் சொல்வார் ஒரு போலீஸ்காரர். அவரிடம், `யாருக்கு வேண்டும் விடுதலை?’ என்பார் மம்முட்டி.
மதிலுக்கு அந்தப் பக்கம் இருந்த பெண்ணை இயக்குநர் கடைசி வரை நமக்குக் காட்டவே மாட்டார். ஆனால் மம்முட்டி விடுதலையானது தெரியாமல் மதிலுக்கு அப்பால் வழக்கம்போல அந்தப் பெண் அங்கு வந்துவிட்டதற்கு அடையாளமாக அந்தப் பெரிய மரக்கிளையின் மதிலுக்கு மேலே மிளாறு எகிறிக்கொண்டேயிருக்கும். அக்காட்சி பார்வையாளரின் மன அரங்கில் ஒரு பெரும் ஆற்றாமையை மவுனமாய் விதைத்துவிட்டுத் திரைப்படம் நிறைவடையும்.
இசையும் ஒளியும்
ஒரு பலமான யோசனையோடு தனிமையில் சிறைக்கூடத்தின் வராந்தாவில் மம்முட்டி ஓயாமல் நடந்துகொண்டிருக்கும் காட்சி நம் மனதைப் பிசையக்கூடியது. இதற்குப் பின்னணியாய் இழையும் விஜயபாஸ்கரின் இசை, பல காட்சிகளில் நாவலை வாசிக்கும்போது நமக்குள் பரவும் ஆழ்ந்த மவுனத்தையே இசையாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. நீண்ட நேரக் காட்சிப்படுத்தலில் வாழ்வின் கணங்களைச் சிறைப்பிடிக்கும் மன்கட ரவிவர்மாவின் ஒளிப்பதிவும் இப்படத்திற்குப் பெரும் துணைபுரிந்துள்ளது. சிறைச்சாலையின் வெயிலையும் நிழலையும் மட்டுமே கொண்டு ஒளிப்பதிவில் பல்வேறு சாத்தியங்களை அவர் உருவாக்கியிருப்பதில் இயக்குநரின் கண்களாக அவர் வெளிப்பட்டு நிற்பது மதிலுகளை உலக சினிமாவாக்கிவிடுகிறது.