

தேசியத் தடகளப் போட்டியில் சாம்பியன் ஆக வேண்டும் என்கிற லட்சியத்துடன் ஆடுகளம் தெறிக்க ஓடிக்கொண்டிருந்த மாநில சாம்பியன் கதிர் (ஆதி). விபத்தொன்றில் ஒரு காலையும் தன்னை செதுக்கி வார்த்த தந்தையையும் இழந்துவிடுகிறார். இதனால் வாழ்வில் பிடிப்பில்லாமல் உழன்றுகொண்டிருந்தவர், வேறு சில காரணங்களால் முடங்கிக் கிடக்கும் பாக்யலட்சுமி (க்ரிஷா குருப்) எனும் வீராங்கனையைக் கண்டுகொள்கிறார். அவர் மூலம் தனது கனவை கதிரால் வென்றெடுக்க முடிந்ததா என்பது சோனி லிவ் தளத்தில் வெளியாகியிருக்கும் ‘கிளாப்’ படத்தின் கதை.
விளையாட்டுத் துறையில் மலிந்திருக்கும் அரசியல், நிறுவனம், சாதி, மதம் எனப் பல தடைகளை முதன்மைக் கதாபாத்திரங்கள் எதிர்கொள்வதாகவே ‘ஸ்போர்ட்ஸ் டிராமா’ வகைப் படங்கள் இருக்கும். இதிலும் அவை கொஞ்சம் இருந்தாலும் உளவியல் ரீதியான சிக்கல், கடந்த காலத்தில் தனிப்பட்ட பகையால் மூண்ட வன்மம், எதிர்காலத்தின் மீது நிழலாகக் கவிழ்ந்து தடையை ஏற்படுத்துவது, அதிலிருந்து மீண்டெழுவது ஆகியவை பார்வையாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.
லட்சியமும் அதை வென்றெடுப்பதற்கான திறமையும் இருக்கலாம். ஆனால் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் தேர்வுபெற வீரர்களும் வீராங்கனைகளும் நடத்தும் போராட்டம் எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது என்பதை உணர்ச்சிகரமான நாடகமாக்கியிருக்கிறார் இயக்குநர். அதற்குத் தன்னம்பிக்கை தெறிக்கும் வசனங்கள் முதுகெலும்புபோல் உதவியிருக்கின்றன. அதேபோல், கதிருக்கும் அவருடைய காதலியும் மனைவியுமான மித்ராவுக்கும் இடையில் ஊடாடும் உறவுச் சிக்கலை இன்னொரு உளவியல் இழையாகக் கோத்திருப்பதும் எடுபடுகிறது.
ஒரு ஸ்போர்ட்ஸ் படத்துக்கான நடிகர்கள் தேர்வு, அவர்கள் தரும் நம்பகமான நடிப்பு, ஆடுகளத்தையும் வீரர்களையும் பின்தொடரும் ஒளிப்பதிவு, போலித்தனமற்ற உரையாடல், உணர்வைக் கிளர்த்தும் இசை (இளையராஜா) என தொழில்நுட்ப அம்சங்கள் அழகாகக் கூடிவந்திருப்பதில் இயக்குநர் பிருத்வி ஆதித்யாவின் ஒருங்கிணைப்பு முழுமையாக வெற்றி பெற்றிருக்கிறது. திரைக்கதை விறுவிறுப்பாக நகர்ந்தபோதும், படத்தின் குறையாகப் பளிச்சென்று தெரிவது ஊகிக்கக்கூடிய பாதையிலேயே கதையோட்டம் நகர்வது.
‘யூ டேர்ன்’ படத்துக்குப் பிறகு, வலிமையான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள ஆதிக்கு இது பெயர் சொல்லும் படங்களில் ஒன்றாகிவிடுகிறது. கிராமத்துப் பின்னணியிலிருந்து வந்து, விளையாட்டு அரசியலை எதிர்கொள்ளமுடியாமல் முடங்கி, பின் கதிரின் பயிற்சியைப் பற்றிக்கொண்டு எழும் பாக்யலட்சுமியாக க்ரிஷா குரூப் நடிப்பில் அபாரம்! அகான்க்ஷா சிங், நாசர், ராம்தாஸ் உள்ளிட்ட மற்ற முக்கிய துணை நடிகர்களின் நடிப்பும் யதார்த்தம். ஒட்டுமொத்தமாக உற்சாகமும் தன்னம்பிக்கையும் தரும் விளையாட்டுப் படமாக வசீகரிக்கிறது ‘கிளாப்’.