

இலட்சிய வாழ்க்கைக்கும் உலகியல் வாழ்க்கைக்கும் இடையிலே சின்னதொரு கோடு. கயிற்றின் மேல் நடப்பது போல்தான். மனதில் சிறிது சலனம் வந்தாலும் இலட்சியத்தை விட்டுவிட்டு சம்சாரத்தில் உழல வேண்டிவரும். உலகியல் ஆசாபாசங்களும் உடலின் தேவைகளும் எப்போதுமே தூண்டிக்கொண்டிருக்கும். பற்றை அறுப்பது அத்தனை எளிதல்ல. அதனால்தான் நம்மாழ்வாரும் “அற்றது பற்றெனில் உற்றது வீடு” என்கிறார்.
பற்றை அறுப்பது அத்தனை எளிதா என்ன? முற்றும் துறந்த முனிவர்களும் ஒரு கணம் தடுமாறிய கதைகள் ஏராளம் உண்டு. அப்படி இருக்கையில் கன்னியாஸ்திரியாகச் சேவை செய்யும் இலட்சியம் கொண்டிருக்கும் பெண் பாதை மாறிச் செல்வதில் ஆச்சரியம் இல்லை. தேவனின் அழைப்புக்கும் காதலின் ஈர்ப்புக்கும் இடையே மாட்டிக்கொண்டு துடிக்கும் இளம் பெண்ணின் மனதை ‘அறுவடை நாள்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “தேவனின் கோயில் மூடிய நேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே” என்ற பாடல் படம் பிடிக்கிறது.
மருத்துவராகப் பட்டம் பெற்ற நிர்மலா கன்னியாஸ்திரியாக மாறுவதற்கு முன்பாக ஒரு கிராமத்துக்குப் பணியாற்ற வருகிறார். அங்கு நிலப்பிரபுவின் மகனான முத்துவேலிடம் மனதைப் பறிகொடுக்கிறார். காதலும் கடமையும் உந்தித் தள்ள அவர் பாடும் டைட்டில் பாடலாக இது இடம்பெறுகிறது. எழுதியவர் கங்கை அமரன். இசை இளையராஜா.
சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் ஒலித்து முடிந்ததும் பாடல் தொடங்குகிறது. இந்து இளைஞனுக்கும் கிறிஸ்தவப் பெண்ணுக்கும் இடையேயான காதல் என்பதால் இந்த இணைப்பு.
“இன்று என் ஜீவன் தேயுதே என் மனம் ஏனோ சாயுதே” என்று பாடுகையில் உயிரின் வேதனை தெரிகிறது. தன் மனம் தன் வயம் இல்லை என்கிறாள்.
பல்லவியும் அனுபல்லவியும் உற்சாகமான பின்னணி இசையில் தோய்க்கப்பட்டிருந்தாலும் பாடல் வரிகள் நெஞ்சைப் பிழிகின்றன.
நானொரு சோக சுமைதாங்கி
துன்பம் தாங்கும் இடிதாங்கி
பிரிந்தே வாழும் நதிக்கரை போலத்
தனித்தே வாழும் நாயகி.
இணைவது எல்லாம் பிரிவதற்காக
இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக
மறந்தால்தானே நிம்மதி
“சுமை சுமந்து சோர்ந்திருக்கிறவர்களே என்னிடம் வாருங்கள். உங்களுக்கு நான் இளைபாறுதல் தருவேன்” என்கிறது விவிலியம்.
கன்னியாஸ்திரீயாகப் பட்டம் பெற்று, பிறர் பொருட்டுச் சோகத்தையும் துயரையும் தாங்க வேண்டிய கதாநாயகி, தன்னுடைய நிலையை நதிக்கரைக்கு ஒப்பிடுகிறாள். திரைப்படங்களில் ரயில் தண்டவாளங்கள் இணையாத காதலின் உருவகமாகக் காட்டப்பட்டன. சலனம் வந்து காதல் உருக்கொண்ட பின் காதலனை அடைய முடியாத அவளும் நதிக்கரைதான். காதலன் அக்கரையில் நிற்கிறான். இவளோ இக்கரையில். அவர்களை இணைத்துக்கொண்டு நதி ஒடுகிறது.
அதன் பிறகு தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக்கொள்கிறாள். இறப்பும் பிறப்பும் எப்படி மாற்ற முடியாமல் மனித வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கிறதோ அதேபோல் இணைந்திருந்தவர்கள் ஒருநாள் பிரி்ந்தே ஆக வேண்டும். நெஞ்சில் துயரைத் தாங்கி நிற்பதில் அர்த்தமில்லை. மறதி என்பது மட்டும் இல்லையென்றால் துயரை நினைத்து நினைத்து மனித வாழ்வு துன்பக்கடலாகிவிடும்.
சரணத்துக்கு முன்பாக “ஏ ஏ தந்தன தந்தனா” என்று ஹம்மிங்கில் ஒரு சோகம் பொதிந்திருப்பதை உணர முடியும்.
ஒரு வழிப்பாதை என் பயணம்
மனதினில் ஏனோ பல சலனம்
கேட்டால் தருவேன் என்றவன் நீயே
கேட்டேன் ஒன்று தந்தாயா
ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்
அழுதிட கண்ணில் நீருக்குப் பஞ்சம்
நானோர் கண்ணீர்க் காதலி
கேட்டேன் ஒன்று தந்தாயா என்ற வரிகளை சித்ரா பாடியிருப்பதைக் கேட்பவர்கள் அவர் அந்த வரிகளை அவர் எந்த அளவுக்கு உணர்ந்து பாடியிருக்கிறார் என்பதை அறிவார்கள்.
தனியாகப் பயணிப்பவர்களுக்கு எப்போதுமே மனதில் எண்ணற்ற சலனங்கள் தோன்றி மறைகின்றன. ஆறுதல் தேடி மனம் அலைகிறது. அழுதற்கும் கண்ணீரில் நீர் இல்லை என்கிறாள் இக்கண்ணீர்க் காதலி.
பக்தி இலக்கியத்தில் தங்களைக் காதலிகளாக வரித்துக்கொள்பவர்கள் கண்ணீரை உகுக்கிறார்கள். “ஆடியாடி அகம் கரைந்து இசை பாடிப் பாடி கண்ணீர் மல்கி” என்று நம்மாழ்வார் பாடுகிறார்.
கண்ணனை நினைத்து “துணைமுலை மேல் துளிசோர” சோர்ந்து விழுகிறாள் திருக்குறுந்தாண்டகத்தில் பரகாலநாயகி. அழது அழுது அவள் மார்பகங்கள் ஈரமாகி்ப் போயின.
அறுவடை நாள் கதாநாயகிக்கு அழுது அழுது கண்ணில் நீர் வற்றிவிட்டதா அல்லது சோகத்தை வெளிப்படுத்த அழுவதற்குக் கண்ணீர் இல்லையா என்பது தெரியவில்லை.
தொடர்புக்கு: bagwathi@gmail.com
படங்கள் உதவி: ஞானம்