சாப்பாடு, காதல் இரண்டுமே பிடிக்கும்: பிரகாஷ்ராஜ்

சாப்பாடு, காதல் இரண்டுமே பிடிக்கும்: பிரகாஷ்ராஜ்
Updated on
2 min read

குணசித்திர நடிகர், வில்லன், ஹீரோவிற்கு அப்பா இப்படிப் பல வேடங்களில் நடித்த பிரகாஷ்ராஜ், தற்போது 'உன் சமையலறையில்' படத்தினை இயக்கி, தயாரித்து, நடித்திருக்கிறார்.

எந்த ஒரு படமாக இருந்தாலும் அதில் தனது நடிப்பின் மூலம் தனி முத்திரை பதிப்பவர் அவர். சென்னைக்கு வந்திருந்தவரிடம், உச்சி வெயிலில் கையில் இளநீரோடு உரையாடியதிலிருந்து.

ஏன் ‘சால்ட் அண்ட் பெப்பர்' படத்தினை ரீமேக் பண்ணிருக்கீங்க. படத்துல என்ன ஸ்பெஷல்?

நான் அந்தப் படத்தை பாத்தப்போ நிறைய விஷயங்கள் ஒரே படத்துல இருக்கிறதா நினைச்சேன். உணவிற்கும், காதலுக்குமான ஒரு கொண்டாட்டம் இருந்துச்சு. ஒரு மனுஷனுக்குத் தேவை என்ன? உணவு, காதல். அந்த ரெண்டையும், ரொம்ப அழகா பதிவு பண்ணிய படம் ‘சால்ட் அண்ட் பெப்பர்'. எல்லோரையும் போல் நானும் காதலை சுவாசிப்பவன், தவிர நான் சாப்பாட்டுப் பிரியன். அப்புறம் காதல்ங்கிற விஷயம் ரொம்ப அழகா, எதார்த்தமா இருந்துச்சு. அதனால, ரெண்டையும் கொண்டாடலாம்னு நினைச்சேன். அதுதான் 'உன் சமையலறையில்'

ஒரே கதையைத் தமிழ், தெலுங்கு, கன்னடம்னு மூணு மொழிகளிலும் இயக்கி, தயாரிக்க என்ன காரணம்?

இது ஒரு புது முயற்சி. காதல், உணவு அப்படிங்கிறது தென்னந்தியாவில் ஒன்று தானே. அதனால தமிழ், தெலுங்கு, கன்னடம் மூணு மொழிகளையும் படத்தை உருவாக்கியிருக்கிறேன். பல நல்ல விஷயங்கள் இருக்கிற படத்தினை பல மொழிகளில் பண்றது தப்பில்லையே. மூணு மொழிகளிலும் எனக்குப் பற்று இருக்கிறதுனால, இலக்கியம், நடிப்பு மற்றும் தொழில் ரீதி யாகவும் நிறைய விஷயங்கள் கவனமா இருக்கணும்னு நினைச்சேன். அது என்னால முடியும்.

தமிழ்ல தம்பி ராமையா பண்ண ரோல்ல, தெலுங்குல, கன்னடத்துல அங்குள்ள நடிகர்கள் பண்ணியிருக்காங்க. ஒரு சீன்ல ஒவ்வொரு நடிகரும், வெவ்வேற மாதிரி நடிப்பை வெளிப்படுத்துவாங்க. ஒரே சீன்ல மூணு கலாச்சாரம் ரொம்ப சிறப்பா வந்திருக்கிறது மட்டுமல்லாம எனக்கு ஒரு புது அனுபவமாகவும் இருந்தது. ஒரே நேரத்துல மூணு மொழிகளிலும் வெளியிட என்னால முடியுது. இதுவரைக்கும் ஒரு படத்தை, வெவ்வேற மொழிகள்ல டப்பிங் பண்ணியிருக்காங்க. ஆனா, இம்மாதிரியான ஒரு விஷயம் இந்தியாவில இது தான் முதல் முறை அப்படினு நினைக்கிறேன்.

ஒரே கதை, முணு மொழிகளில் ரீமேக் என்ன சவால்கள் சந்திச்சீங்க?

தடைகள் நிறைய இருந்தது. ஆனால், எல்லா விஷயங்களுக்கும் ஹோம் வொர்க் பண்ணினா அதையெல்லாம் கடந்திடலாம். எனக்கு நல்ல நடிகர்கள், கவிஞர்கள் இருந்தாங்க. தமிழ்ல பழனிபாரதி, தெலுங்குல சந்திரமோகன், கன்னடத்துல என்னுடைய நண்பன் ஜெயந்த் இப்படி மூணு பேரும் மூணு கருத்துகளோட வந்தாங்க. மூணு வித்தியாசமான முகவரியோட, மூணு வித்தியாசமான ருசியோட வந்தாங்க. எல்லாத் தடைகளையும் தாண்டினாதான் வெற்றி என்னும் கோட்டை அடைய முடியும். நான் எல்லாத் தடைகளையும் தாண்டிக்கிட்டே இருக்கேன். வெற்றி கூடிய விரைவில் கிடைக்கும்.

உலகத்தில் சிறந்த பின்னணி இசையமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜாவிற்கு 9-வது இடத்தைக் கொடுத்திருக்கிறார்கள். அவர் உங்களுடன் பணியாற்றிய அனுபவத்தைச் சொல்லுங்கள் ?

உலகத்தில் என்ன வரிசை வேண்டுமானாலும் சொல்லுவாங்க. எனக்கு அவர் எப்பவுமே முதலிடம்தான். எனக்கு இளையராஜா சாரோட முதல் படம் ‘தோனி'. அந்தப் படத்துக்குப் பிறகு அவர்கூட இன்னும் நெருக்கமாயிட்டேன். அவர்கூட பேசிட்டு இருக்கும்போதே நான் நினைச்ச கதைக்கு ஒரு மியூசிக் உருவாகுற சந்தோஷம் கிடைக்குது. ஒரு சில காட்சிகளுக்கு, இசை முக்கியமான பங்கு வகிக்கும். அந்தக் காட்சியை எல்லாம் படமாக்கும்போது எனக்கே ஒரு வித பயம் வரும். பின்னணி இசை எல்லாம் சேர்ந்து, இது மக்களுக்குச் சரியா இருக்குமானு நினைப் பேன். அப்போ எல்லாம் எனக்குப் பின்னாடி இருந்து, நீ பண்ணு, நான் இருக்கேன்னு ராஜா சார் சொல்ற மாதிரி இருக்கும். அவர்தான் என்னை வழிநடத்தினார்.

நடிப்பு, இயக்கம், தயாரிப்பு இப்படிப் பல விஷயங்கள் பண்றீங்களே. கஷ்டமா இல்லையா?

எனக்கு எதுவுமே கஷ்டமா இல்லை. நான் எதையுமே இஷ்டப்பட்டுதானே பண்றேன். எப்படிக் கஷ்டமா இருக்கும்? நான் எத்தனை படம் தயாரிச்சிருக்கேன், நடிச்சிருக்கேன்னு கேட்டீங்கன்னா எனக்குத் தெரியாது. ஏன்னா, அது என்னோட வேலையில்லை, மத்தவங்களோட வேலை. நான் நடிக்கிற, தயாரிக்கிற, இயக்குற படங்களோட வெற்றி - தோல்வி இப்படி எதைப் பத்தியும் யோசிக்காம வந்த வேலையை மட்டும் பார்த்தாலே நினைச்சது எல்லாம் கிடைக்கும்னு நம்புற ஆள் நான்.

இனி வரும் காலத்திற்கு என்ன திட்டம் வச்சுருக்கீங்க?

நான் கடந்த காலத்தைப் பற்றியும் யோசிக்கிறதில்லை, வருங்காலத்தைப் பற்றியும் திட்டமிடுறதில்லை. வாழ்க்கையின் போக்கு எப்படி இருக்கிறதோ, அதன் போக்கில் போயிட்டு இருக்கேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in