நிஜமும் நிழலும்: தொலைக்காட்சி உரிமைக்கு என்னதான் ஆச்சு?

நிஜமும் நிழலும்: தொலைக்காட்சி உரிமைக்கு என்னதான் ஆச்சு?
Updated on
2 min read

பண்டிகைக் காலங்களில் மறக்க முடியாத ஓர் அறிவிப்பு, “இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக…”. மிக விரைவில் இந்த அறிவிப்பு வெறும் வரலாறாக மாறிவிடலாம். திரைப்படங்களை ஒளிபரப்புவதற்கான உரிமையைத் தொலைக்காட்சி நிறுவனங்கள் வாங்குவது நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. அவை படங்களை முன்புபோல் வாங்குவதில்லை. ஒரு காலத்தில் படத்தின் லாபத்தில் முக்கியப் பங்கு வகித்த தொலைக்காட்சி உரிமைக்கு ஏன் இந்த நிலை?

முன்னணி நடிகர் ஒருவரின் படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றப் பலர் போட்டியிடும்போது படத்தின் ஒளிபரப்பு உரிமைக்கான விலை உயர்கிறது. இப்படித்தான் சில படங்கள் கோடிகளில் விற்பனையாகின்றன. முன்பெல்லாம் சில தொலைக்காட்சி சேனல்கள் மட்டுமே இருந்தன. ஆனால், இன்று பல தொலைக்காட்சி சேனல்கள் உள்ளன. அடுத்த ஆண்டுக்குள் மேலும் 6 தொலைக்காட்சி சேனல்கள் தொடங்கப்படவிருப்பதாகத் தெரிகிறது. அப்படியானால், படங்களுக்கான போட்டி அதிகரிக்க வேண்டும் அல்லவா? அதுதான் இல்லை. காரணம், தொலைக்காட்சி நிறுவனம் இதற்காக முதலீடு செய்யும் பணத்தைத் திரும்பப் பெறுவதில் சிக்கல் இருக்கிறது.

விளம்பர வருமானத்தில் சிக்கல்

தொலைக்காட்சிகளின் வருமானம் என்பது படங்களுக்கிடையே திரையிடப்படும் விளம்பரங்களின் மூலம் வருகிறது. பொதுவாக முன்னணி நடிகர்களின் படங்கள் ஒளிபரப்பாகும்போது பல முன்னணி நிறுவனங்கள் விளம்பரங்களை அளிக்கின்றன. மற்ற படங்களுக்கு வரும் விளம்பரங்கள் எண்ணிக்கையில் குறைவு. விளம்பரக் கட்டணமும் குறைவு. இதனால் முன்னணி நடிகர்கள் / இயக்குநர்கள் அல்லாத படங்களில் தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்ட பணத்தை எடுக்க முடியவில்லை. ஆனால், முன்னணி நடிகர்கள் / இயக்குநர்கள் சம்பந்தப்பட்ட படங்களிலும் போதிய வருமானம் இல்லை என்பதுதான் இன்றைய யதார்த்தம்.

அரசின் கொள்கை முடிவுதான் இதற்குக் காரணம். முன்பு ஒரு படம் ஒளிபரப்பப்படும்போது எவ்வளவு வேண்டுமானால் விளம்பரங்களை வெளியிட்டுக்கொள்ளலாம். ஆனால் இப்போது அப்படிச் செய்ய முடியாத வகையில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இரண்டரை மணி நேரப் படத்தை அதிகபட்சமாக 3 மணி நேரம்தான் திரையிடலாம் என்பது புதிய கட்டுப்பாடு. ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் 23 நிமிடங்கள் படம், 6 வணிக நிறுவனங்களின் நிமிடங்கள் விளம்பரங்கள், 1 நிமிடம் தொலைக்காட்சி சம்பந்தப்பட்ட விளம்பரங்கள் என ஆணையத்தின் விதிமுறை கூறுகிறது.

இதன்படி 3 மணி நேரத்தில் அதிகபட்சம் 36 நிமிடங்கள் வணிக விளம்பரங்களைப் போட்டுக்கொள்ளலாம். ஒரு விளம்பரம் 10 நொடிகள் என்று வைத்துக்கொண்டால் மொத்தம் 216 விளம்பரங்களை 3 மணி நேரத் திரையிடலுக்கு இடையே ஒளிபரப்பலாம். முன்னணி நடிகரின் படம் முதல்முறை திரையிடப்படும்போது 10 நொடி விளம்பரத்துக்குப் பெரும் தொகை கிடைக்கும். ஆனால் அதே படத்தை 2-ம் முறை திரையிடும்போது ஃபில்லர் என்ற பிரிவில் வருவதால் விளம்பரத் தொகையைக் குறைத்துவிடுவார்கள். அதே 3, 4, 5-ம் முறை என்று ஆகும்போது விளம்பரத்தால் வரும் தொகை மிகவும் குறைந்துவிடும். இந்த வருமானத்தில் 14.5% வரி கட்ட வேண்டும்.

முதல்முறை ஒரு பெரிய நடிகரின் படம் திரையிடப்படும்போது, ‘முன்னணி நிறுவனம் வழங்கும்’ என்று போடுவார்கள். அதற்கு ஒரு பெரிய தொகை கிடைக்கும். படத்துக்கிடையே போடப்படும் விளம்பரங்கள் மூலமாகவும் வருவாய் கிடைக்கும். அதே படத்தை 8 முறைக்கு மேல் திரையிடும்போது ‘இன்றைய நிகழ்ச்சிகளை வழங்குவோர்’ என்ற பிரிவுக்குக் கீழ் அது வந்துவிடுகிறது. அப்போது விளம்பரங்கள் குறைந்துவிடும்.

படங்களை வாங்கும்போது 99 வருடங்களுக்கு ஒப்பந்தம் போடுகிறார்கள். ஒரு படத்தின் உரிமையை 10 கோடிக்கு வாங்குகிறார்கள் என்றால் முதல் முறை திரையிடும்போது வருமானம் 1 கோடி, 2-வது முறை 60 லட்சம், 3-வது முறை 40 லட்சம், 4-வது முறை 25 லட்சம் எனக் குறைந்துகொண்டேவருகிறது. இந்நிலையில் 99 வருடங்களில் 10 கோடி எடுக்க முடியுமா என்பதும் கேள்விக்குறியாகிறது.

நெருக்கும் தயாரிப்பாளர் சங்கம்

படங்களை வாங்கச் சொல்லித் தயாரிப்பாளர் சங்கம் நெருக்கடி கொடுத்துவருவதால் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் படங்களை வாங்க ஆரம்பித்திருக்கின்றன. ஆனால், மிகவும் சொற்பமான பணத்துக்கே வாங்குகின்றன. தற்போதெல்லாம் முன்னணி நடிகர்களின் படங்களைக்கூட அவை வெளியாவதற்கு முன்பே தொலைக்காட்சிகள் வாங்குவதில்லை. படம் வெளியாகி மக்களிடையே வரவேற்பைப் பெற்ற பிறகே போட்டிபோட்டு தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றுகிறார்கள். 100 நாட்கள் கழித்துத்தான் படங்களைத் திரையிட வேண்டும் என்பது விதி. ஆனால், தொலைக்காட்சி நிறுவனங்கள் நாட்களைக் குறைத்து எழுதி வாங்கிக்கொள்கின்றன. பல படங்கள் 100 நாட்களுக்குப் பிறகு எந்தப் பரபரப்பையும் ஏற்படுத்துவதில்லை என்பதே இதற்குக் காரணம்.

இதையெல்லாம் பார்க்கும்போது படம் வெளியான 10 நாட்களில் டி.வி.டி., டி.டி.ஹெச்., இணையம் ஆகியவை மூலம் வெளியாகும் நிலை உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.

என்றும் குறையாத வசீகரம்

படங்களுக்கான விளம்பரங்கள் பொதுவாகக் குறைந்துவந்தாலும் சில படங்களின் மவுசு மட்டும் குறைவதே இல்லை. இந்தப் படங்களை எப்போது திரையிடுவார்கள் என்று விளம்பரதாரர்கள் காத்திருக்கிறார்கள். அந்தப் படங்கள்: நாடோடி மன்னன், தில்லானா மோகனாம்பாள், பாட்ஷா, தேவர் மகன், கில்லி, தீனா, துப்பாக்கி, மங்காத்தா முதலான சில. இப்படங்களை எப்போது ஒளிபரப்பினாலும் விளம்பரங்கள் மூலமாக வருமானம் வரும். கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கணக்கு இப்படங்களுக்கு விதிவிலக்கு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in