Published : 25 Feb 2022 11:13 AM
Last Updated : 25 Feb 2022 11:13 AM

கோலிவுட் ஜங்ஷன்: காவிய சமந்தா!

‘புஷ்பா’ படப் பாடல் ஒன்றுக்கு நடனமாடி பரபரப்பை ஏற்படுத்திய பிறகு, சமந்தா மென்மேலும் ஏற்றம் கண்டு வருகிறார். அவர் பெண் மையக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘சாகுந்தலம்’ என்கிற புதிய படத்தின் முதல் பார்வை வெளியாகி இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தை ‘ஒக்கடு’, ‘ருத்ரம்மாதேவி’ படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான குணசேகர் எழுதி, இயக்குகிறார். மணிசர்மா இசையமைக்க, சேகர் வி. ஜோசப் ஒளிப்பதிவு செய்ய, ‘புஷ்பா’ படப்புகழ் அல்லு அர்ஜுனின் மகள், அல்லு அர்ஹா குழந்தை நட்சத்திரமாக இதில் அறிமுகமாகிறார். மேலும் மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, ‘அருவி’ புகழ் அதிதி பாலன் ஆகியோர் நடிக்கின்றனர். தில்ராஜு தயாரிக்கும் படம் இது.

ஆக் ஷன் தேவா!
கோலிவுட்டில் தற்போது அதிக படங்களில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் இரண்டு பேர் விஜய்சேதுபதியும் பிரபுதேவாவும். ‘நடனப் புயல்’ பிரபுதேவா புதிதாக நடிக்கும் ‘முசாசி’ என்கிற படத்தின் முதல் பார்வையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் வெளியிட்டார். அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் இப்படத்தில் சவாலான போலீஸ் அதிகாரியாக முழுநீள ஆக் ஷன் வேடத்தை ஏற்றிருக்கிறாராம் பிரபுதேவா.

தேடிச் சென்ற மிஷ்கின்!
‘கடைசி விவசாயி’ படத்தை இயக்கிய, இயக்குநர், ஒளிப்பதிவாளர் மணிகண்டனை அவருடைய சொந்த ஊரான உசிலம்பட்டிக்கே சென்று சந்தித்து, ஆரத் தழுவிப் பாராட்டித் திரும்பியிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின். இதுபற்றி ஊடகங்களுக்கு அவர் அனுப்பியிருந்த செய்திக் குறிப்பில் “மிகச் சிறந்த படைப்பைத் தமிழுக்குத் தந்த மணிகண்டனுக்கு நன்றி கூறி, அவருடைய கரங்களை முத்தமிட்டேன். படத்தில், கதையின் நாயகனாக, ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் அடையாளமாக வாழ்ந்திருந்த, பெரியவர் நல்லாண்டியின் வீட்டுக்குச் சென்று, அவருடைய புகைப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினேன். மணிகண்டன் படப்பிடிப்பு செய்த இடத்துக்குச் சென்று மதிய உணவு உண்டோம். அந்த முழு நாளும் ஓர் அற்புத நாளாக மாறியது. மணிகண்டனின் பயணம் தொடரட்டும். அவரை இயற்கை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும். ” என நெகிழ்வுடன் தெரிவித்திருக்கிறார்.

கூட்டாக அளித்த விளக்கம்!
சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘வீரபாண்டியபுரம்’. லென்டி ஸ்டுடியோஸ் சார்பில், திரையுலகப் பின்புலம் கொண்ட எஸ்.ஐஸ்வர்யா படத்தைத் தயாரித்து புதிய தயாரிப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். சுந்தர்.சியின் ‘கலகலப்பு 2’ படத்துக்குப் பின், ஜெய் நாயகனாக நடித்திருந்ததுடன் இப்படத்தில் முதல் முறையாக இசையமைப்பாளராகவும் அறிமுகமாகியிருந்தார். படம் நஷ்ட மடைந்துவிட்டதாக செய்திகள் வெளி யான நிலையில், தயாரிப்பாளரும் இயக்குநரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதை திரையரங்குகளின் பட்டியலுடன் தெரிவித்தனர். படத்தை லாபத்துடன் விற்பனை செய்ததாகவும், திரையரங்கிலிருந்து வரும் வசூல் லாபத்தில், தயாரிப்பாளர், இயக்குநர், கதாநாயகன் ஆகியோர் சதவீத அடிப்படையில் பிரித்துகொள்ளும் முறையை இந்தப் படத்தில் கடைபிடிப்பதாகவும்’ கூட்டாக விளக்கம் அளித்தனர்.

மக்கள் தொடர்பாளர்களின் விழா!
மூத்த திரைப்பட மக்கள் தொடர்பாளர்களும் தேசிய சினிமா சேம்பரும் இணைந்து நடத்திய 2021-ம் ஆண்டுக்கான திரைப்பட விருது வழங்கும் விழா, சமீபத்தில் சென்னையில் நடந்தது. நீதியரசர், முனைவர். எஸ். கே. கிருஷ்ணன் தலைமையேற்றார். திரைக்கதைத் திலகம் கே. பாக்யராஜ், தேசிய விருது பெற்ற இயக்குநர் ஞான ராஜசேகரன் ஐஏஎஸ் உள்ளிட்ட பலருடன், முன்னணி, வளரும் கலைஞர்கள் பலரும் விருதுபெற்றனர். தேசிய சினிமா சேம்பர் தலைவர் அன்பு சுந்தரம், விருது விழாவின் ஒருங்கிணைப் பாளர், ‘கலைமாமணி’ நெல்லை சுந்தரராஜனும் சிறப்பு விருந்தினர்களுடன்
இணைந்து விருதுகளை வழங்கினார்கள்.

மூன்று நண்பர்களின் சினிமா!
கப்பலில் ஊழியர்களாகப் பல நாடுகளுக்கு சுற்றிவந்து பணியாற்றியிருக்கிறார்கள் விக்னேஷ்வரன், கோபிநாத், சுந்தர் ஆகிய மூவரும். கிடைக்கும் விடுமுறையில் குறும்படங்கள் எடுப்பதை ஆர்வத்துடன் செய்து வந்திருக்கிறார்கள். அடுத்த கட்டமாக நெப்ட்டியூன் செய்லர்ஸ் புரொடக் ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, ‘ஃபாரின் சரக்கு’ என்கிற முழுநீளத் திரைப்படத்தைத் தயாரித்து, இயக்கி, நாயகர்களாக நடித்தும் இருக்கிறார்கள். ‘குஜராத்தில் தொடங்கும் கதை, தமிழகத்தில் முடிவடைவதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. காதல், பாடல் என்கிற வழக்கமான பாணியைத் தவிர்த்துவிட்டு, வெளியே தெரியாத பிரச்சினை ஒன்றைப் படத்தில் கையாண்டிருக்கிறோம். ஆக் ஷன் கலந்த சஸ்பென்ஸ் படமாக உருவாகியிருக்கிறது. இது எங்கள் வாழ்க்கையுடன் தொடர்புடைய கதையும் கூடத்தான்’ என்கிறார்கள் மூவரும்.

பாலாவின் ‘விசித்திரன்’!
இயக்குநர் பாலாவின் பி.ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்துள்ள படம் ‘விசித்திரன்’. அதன் இசை வெளியீட்டு விழாவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் திரண்டு வந்திருந்தனர். மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘ஜோசப்’ என்கிற படத்தின் தமிழ் மறுஆக்கம்தான் இந்த ‘விசித்திரன்’. மலையாளப் படத்தை இயக்கிய எம்.பத்மகுமாரையே அழைத்துத் தமிழ்ப் பதிப்பையும் இயக்க வைத்திருக்கிறார் இயக்குநர் பாலா. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் ஆர்.கே.சுரேஷுக்கு ஜோடியாக மது ஷாலினி, பூர்ணா என இரண்டு கதாநாயகிகள்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x