

தொண்ணூறுகளில் திரைப்பட ரசிகர்களிடையே இரண்டு சொற்கள் மிகவும் பிரபலமாயின. ஒன்று பிரம்மாண்டம், மற்றொன்று கிராஃஃபிக்ஸ் கலக்கல். ‘சந்திரலேகா’, ‘ஒளவையார்’ போன்ற பிரம்மாண்டமான படங்களை எடுத்தவர் எஸ்.எஸ். வாசன். பட்ஜெட் மட்டுமின்றிப் படத்தின் கதைக் களங்களும் பிரம்மாண்டமானவையாக இருந்தன. அடுத்தாற்போல் ஏ.பி. நாகராஜனின் புராணப் படங்களைச் சொல்லலாம். ஆனால் பிரம்மாண்டமான கதைக்களன் ஏதுமின்றி சாதாரணமான கதைகளைப் பெரும் பொருட் செலவுடன் தயாரிக்கும் படங்களின் வரத்து தொண்ணூறுகளில் நிகழ்ந்தது.
ஷங்கரின் ‘ஜென்டில்மேன்’ (1993) பிரம்மாண்டம் என்கிற சொல்லாடலை மீண்டும் புழக்கத்துக்குக் கொண்டுவந்தது. அதன் உடனடி பாதிப்பை அதே வருடம் வெளியான மணிரத்னத்தின் ‘திருடா திருடா’ தயாரிப்பில் காண முடிந்தது. அதுவரை தந்திரக் காட்சிகள் ஆப்டிகல் முறை மூலம் லேப்களில் உருவாக்கப்பட்டிருந்தன. தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு தந்திரக் காட்சிகள் 3டி வரைகலை மூலமாகத் திரைப்படத்துக்கு நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டன. அதுதான் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ். தந்திரக் காட்சிகளை மட்டுமல்ல; யதார்த்தமாகப் படம் பிடிக்காதவற்றையும் யதார்த்தம் போல் காணச் செய்வதில் முக்கியப் பங்காற்றியது கிராஃபிக்ஸ்.
படம் பார்ப்பவர்களுக்கு எது கிராஃபிக்ஸ் எது நிஜமான படப்பிடிப்பு என்பதே தெரியாத வகையில் கிராஃபிக்ஸ் பயன்படத் தொடங்கியது. ஆனால், தமிழ்ப் பட உலகம் இதில் ஆர்வம் காட்டவில்லை. இதோ இந்த இடத்தில் கிராஃபிக்ஸ் இப்படிப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது இதை எல்லோரும் பாருங்கள் என்று சுட்டிக்காட்டும் விதமாக கிராஃபிக்ஸை ஒரு விந்தைப் பொருளாக உணருமாறு தமிழ்ப் படங்கள் பயன்படுத்தின.
கதாநாயகர்களின் தீர்ப்பு
கிராபிக்ஸ் கலக்கல் என்கிற பிரயோகமே அந்த மனோபாவத்தையும் நடைமுறையையும் தெளிவாக்கியது. ‘ஜென்டில்மே’னைத் தொடர்ந்து ஷங்கரின் ‘காதலன்’, (1994) ‘இந்தியன்’ (1996) ‘முதல்வன்’ (1999) படங்கள் பிரம்மாண்டம் என்பதையே ஒரு பாடுபொருளாக்கியது. ‘இந்தியன்’, ‘முதல்வன்’ ஆகிய படங்கள், சட்டத்தால் இயலாதபோது தனிமனிதர்கள் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கிவிட முடியும் என்று மக்கள் கொள்ளும் நப்பாசையை நாயகர்கள் மூலம் நிறைவேற்றியதால் பெரும் வெற்றி பெற்றன. சிறு சிறு தவறுகளுக்குக்கூட மரண தண்டனைகள் வழங்குகிற கதாநாயகர்களை ஷங்கர் உருவாக்கினார். விறுவிறுப்பான திரைக்கதைகளை அமைத்துப் படத்தை நகர்த்துவதில் வல்லவரான ஷங்கருக்கு பாசிச இயல்புடைய கதாபாத்திரங்கள்தான் உதவின என்பது பெருமைப்படத்தக்க விஷயமல்ல.
பண்ணையார்களும் பஞ்ச் வசனங்களும்
குற்றமிழைத்தவர்களுக்கு ஜாதி தள்ளிவைப்பு, வஞ்சிக்கப்பட்ட பெண்ணை மணந்துகொள்ளுதல் போன்ற சமூக நியதிக்குட்பட்ட தண்டனைகளை வழங்குகிற பண்ணையார்களைத் திரையுலகம் பெரிய அளவில் மீட்டெடுத்தது. நிலப்பிரபுத்துவத்தின் வெறுக்கத்தக்க எச்சங்களான பண்ணையார், ஜமீன்தார் ஆகியோர் புனிதப் பிறவிகளாக மறுபிறப்பு எடுத்தனர். ஆர்.வி. உதயகுமாரின் ‘சின்னக் கவுண்டர்’ (1992), ‘எஜமான்’ (1993), பரதனின் ‘தேவர்மகன்’ (1992) கே. எஸ். ரவிகுமாரின் ‘நாட்டாமை’ (1994), ஆகியன சாதிப் பெருமை பேசிய பண்ணையார் படங்கள். வன்முறைக் காட்சிகளை நிறையத் திணித்துவிட்டு வன்முறை பயனளிக்காது என்பதை இப்படங்கள் ‘அறிவுறுத்தின’. ‘எஜமான்’ படத்தில் பண்ணையாரின் வாரிசான பச்சைக் குழந்தையின் காலை எடுத்து ஒரு பணியாளர் தலையில் வைத்து வணங்குகிற காட்சியைப் பார்த்தபோது சினிமா என்கிற ஊடகம் நம்மை எங்கே இழுத்துச் செல்கிறது என்கிற பதைபதைப்பும் பயமும் ஏற்பட்டன.
ரஜினிகாந்த், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ‘அண்ணாமலை’ (1992), ‘பாட்ஷா’ (1995) ஆகிய படங்களில் நடித்தார். ரஜினியின் பஞ்ச் வசனங்களை அரசியல் அறிக்கைகள்போல் மக்கள் கேட்டு ரசித்தனர். அவரது அரசியல் பிரவேசம் பற்றிய ஊகங்கள் அரசியலாக்கப்பட்டன.
பாரதிராஜாவின் முத்திரை
எழுபதுகளில் கிராமப்புறக் கதைகளைத் தொடர்ந்து படமெடுத்துப் பல திருப்புமுனைகளைத் தமிழ் சினிமாவுக்கு அளித்த பாரதிராஜா தொண்ணூறுகளிலும் தனது முத்திரையைப் பதித்தார். ‘என்னுயிர்த் தோழன்’ (1990) ‘கருத்தம்மா’ (1994) இரண்டும் அவரது குறிப்பிடத்தக்க படங்கள். ‘என்னுயிர்த் தோழன்’ வசூலில் தோல்விப் படம். ஆனால் தொண்ணூறுகளின் குறிப்பிடத்தக்க சில படங்களில் ஒன்று. படம் முழுவதும் மைக்கும் ஒலிபெருக்கிகளும் பொய்களின் பரப்புரைகளாகித் தலைவர்களை உருவாக்குகின்றன. அவர்களை வாழவைக்கத் தங்களை அழித்துக்கொள்ளும் அப்பாவித் தொண்டர்களில் ஒருவன் தருமன். அசோகமித்திரனின் ‘காத்திருத்தல்’கதையைப் படம் பலமாக நினைவூட்டுகிறது. தொண்டனின் பார்வையில் சொல்லப்படுகிற படம் என்பதைவிடத் தொண்டனைப் பற்றிச் சொல்லப்படுகிற படம். கதாநாயகி சிட்டு, கண்ணகியாய் மாறி வஞ்சிக்கப்பட்ட கட்சித் தொண்டனான தனது கணவன் தருமனின் மரணத்துக்குத் தீர்வாக சூலாயுதம் ஏந்திப் பழிதீர்க்கிறாள். படத்தின் செய்தி அது தரும் அரசியல் தெளிவு.
பெண் சிசுக்கொலைக்கு எதிரான அர்த்தமுள்ள படம் ‘கருத்தம்மா’. படத்தின் பெயருக்குத் தமிழில் பெயரை வைத்தாலே கேளிக்கை வரியை நீக்கிவிடுகிறது அரசாங்கம், அது கேலிக்குரியது. அந்தச் சலுகை ‘கருத்தம்மா’ போன்ற படங்களுக்குத்தான் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
பரிசோதனை முயற்சி
வழக்கம் போல தொண்ணூறுகளில் குறைந்த பட்ஜெட் படங்கள் நம்பிக்கையளித்தன. கே.பாலசந்தரின் ‘ஒரு வீடு இரு வாசல்’ (1990) தனித்தனி கதைகள் கொண்ட இரண்டு படங்கள். இரண்டுமே பெண்கள் மீது ஆண்கள் இழைக்கும் தவறுகள் பற்றியவை. பெண் விடுதலை பற்றிப் பேசுபவை. இரண்டு கதைகளைப் படமாக எடுத்து அவற்றை இணைப்பது என்பது இன்றேகூட அரிதாக இருக்கும்போது 25 வருடங்களுக்கு முன்னர் அவ்வாறு ஒரு படம் வந்தது பாராட்டத்தக்க பரிசோதனை முயற்சி. பரதனின் ‘ஆவாரம் பூ’ (1992) அவரது மலையாளப் படமான ‘தகரா’வின் தமிழ்ப் பதிப்பு. படத்தில் மலையாளச் சாயல் தூக்கலாக இருந்தாலும் ரசிக்கும்படி காட்சிகள் இருந்தன. படத்தை மீண்டும் பார்க்க நேரிட்டால் நாசரின் மிகச் சிறந்த நடிப்பு இப்படத்தில்தான் வெளிப்பட்டதோ என்கிற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. நாசரின் நடிப்பிலும் இயக்கத்திலும் வந்த ‘அவதாரம்’ (1995) நம் மண்ணின் குணங்களைப் பெற்றிருந்தது.
(தி இந்து ‘சித்திரை மலர்’ 2016-ல் வெளியான அம்ஷன் குமாரின் தொண்ணூறுகளின் தொழில்நுட்பப் புரட்சி கட்டுரையின் ஒரு பகுதி.)