

நடனத்திலிருந்து இயக்கம்!
பல மொழிகளில் நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு நடன இயக்குநராகப் பணிபுரிந்தவர் பிருந்தா. இவர், துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஆகிய மூன்று நட்சத்திரங்களைக் கொண்டு ‘ஹே சினாமிகா’ என்கிற படத்தை இயக்கியிருக்கிறார். முக்கோணக் காதல் கதையைக் கொண்டுள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. மார்ச் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது படம். மணிரத்னம் படம்போல் இருப்பதாக நெட்டிசன்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
மிகப் பெரிய தொடக்க விழா!
ஒரு புகழ்பெற்ற இயக்குநரின் கதை, வசனத்தை வாங்கி, அதை மற்றொரு புகழ்பெற்ற இயக்குநர் படமாக்குவது, தமிழ் சினிமாவில் மிக அரிதாகவே நிகழும். தற்போது வெற்றிமாறன், தங்கம் ஆகிய இரண்டு பேர் இணைந்து எழுதியிருக்கும் கதையைப் பெற்று, 9 வருட இடைவெளிக்குப் பிறகு ‘இறைவன் மிகப் பெரியவன்’ என்கிற தலைப்பில் புதிய படத்தை இயக்குகிறார் அமீர். ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் சார்பில் ஜாஃபர் தயாரிக்கும் இப்படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா. 15 வருடங்களுக்குப் பிறகு ஒளிப்பதிவாளர் ராம்ஜீ, அமீருடன் மீண்டும் இணைந்திருக்கிறார். மொத்த திரையுலகமும் திரண்டு வந்து வாழ்த்திய இப்படத்தின் தொடக்க விழாவில் கல்யாண வீடுபோல் பிரியாணி விருந்து களை கட்டியது.
விஜய் வீட்டு வாரிசு!
தயாரிப்பாளர், நடிகர், ஏ.எல்.அழகப்பனுடைய மகன் விஜய், முன்னணி இயக்குநராக இருக்கிறார்.மற்றொரு மகன் உதயா நடிகராக இருக்கிறார்.இவர்களுடைய சகோதரி மகன் ஹமரேஷ், ‘ரங்கோலி’ என்கிற புதிய படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக பிரார்த்தனா என்கிற புதுமுகம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக கே.பாபுரெட்டி, ஜி.சதீஷ்குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை வஸந்த் சாயிடம் உதவியாளராகப் பணிபுரிந்த வாலி மோகன்தாஸ் எழுதி இயக்கியிருக்கிறார்.
கதை சொல்லும் கட்டில்!
‘ஸ்ரீகாந்த் தன்னுடைய நண்பர்களுடன் ஊட்டிக்குச் சுற்றுலா செல்கிறார். அங்கே தங்கும் விடுதியில் நடக்கும் ஒரு கொலையும் அதைத் தொடர்ந்து அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும்தான் ‘தி பெட்’ படத்தின் கதை. ஸ்ரீகாந்தின் திரைப் பயணத்தில் இது முக்கியமான படமாக இருக்கும். அவருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். ஜான் விஜய் நகைச்சுவை ததும்பும் போலீஸ் அதிகாரியாக வருகிறார். இது ‘மர்டர் மிஸ்டரி’ கதையோ, ‘அடல்ஸ் ஒன்லி’ கதையோ அல்ல. நாயகன், நாயகி அல்லது வில்லனுடைய பார்வையில் படத்தின் கதையை விவரிப்பது வழக்கம். ஆனால், இதில், நண்பர்கள் தங்கும் விடுதியில் உள்ள படுக்கை (Bed) ஒன்று தன்னைத் தேடி வந்த மனிதர்களின் வாழ்க்கையை விவரிப்பதுபோல் திரைக்கதையை அமைத்திருக்கிறேன். இந்த உத்தி, கதைக் கருவுடன் நெருக்கமான தொடர்புடையது” என்கிறார் படத்தின் இயக்குநர் மணிபாரதி!
திரைவால் இசை வெளியீடு
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கும், தயாரிக்கும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களுக்கு முழுமையான திரை அனுபவத்தை வழங்கி வருகின்றன. தற்போது, யாழி நிறுவனத்தின் விக்னேஷ் சுந்தரேசனுடன், பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக் ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குதிரைவால்’. அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லினோனல் ஜேசன் - ஷ்யாம் சுந்தர் இணைந்து இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஜி.ராஜேஷ் குமார் எழுதியிருக்கிறார். கலையரசன் நாயகனாக நடித்திருக்கிறார். பாலிவுட்டின் மாற்று சினிமாக்கள் வழியாகப் புகழ்பெற்றிருக்கும் அஞ்சலி பாட்டீல் நாயகியாக நடித்திருக்கிறார். பிரதீப் குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் இசைத்தொகுப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் படத்தில் இடம்பெறும் அனைத்து பாடல்களும் ‘லைவ்’வாக இசைக்கப்பட்டன.