

கட்… கட்…’’ என்று சொன்ன பாலசந்தர் சார் ரஜினியை நோக்கி ஓடி வந்தார். அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, ‘‘என்னப்பா... முகத்துல தீ எதுவும் பட்டுச்சாப்பா…’’ என்று அதிர்ச்சியோடு கேட்டார். திரும்பி என்னைப் பார்த்து, ‘‘என்ன முத்துராமன்… இப்படி பண்ணிட்டீங்க? நாலு பேர் சேர்ந்து ரஜினி முகத்துல தீ பந்தத்தால அடிக்கிற மாதிரியா ஷாட் வைப்பீங்க. இந்த ஃபைட்டும் வேணாம் ஒண்ணும் வேணாம். எனக்கு ரஜினிதான் வேணும்!’ என்றார்.
ரஜினிக்கு ஏதாவது ஆகிடுமோ என்ற பதற்றத்தில்தான் ‘கட்’சொல்லியிருக்கார் என்பது அப்போதுதான் எனக்குத் தெரிந்தது.
நான் பாலசந்தர் சாரிடம், ‘‘இல்லை சார்… ஒண்ணும் ஆகாது. பாதுகாப்போடதான் ஷூட் பண்றோம். அவர் மேல சின்ன காயம்கூட படாது. ஜூடோ ரத்தினம் மாஸ்டர் அதை சரியா பிளான் பண்ணி வெச்சிருக்கார்’’ என்றேன். ரஜினியும் பாலசந்தர் சாரிடம் ‘‘பயப் பட வேண்டாம் சார். பாதுகாப்பா பண்ணுவாங்க’’ என்றார். ‘‘இல்லப்பா.. எனக்கு பயமா இருக்கு!’’ என்று தள்ளிப் போய் அமர்ந்துகொண்டார். அப்போது தயாரிப்பு நிர்வாகி நடராஜன், ‘‘பாலசந்தர் சார் எமோஷனல் பார்ட்டி. இங்கே இருந்தார்னா… இந்தச் சண்டைக் காட்சியை எடுக்கவே விடமாட்டார். நான் அவரை அழைச்சுக் கிட்டு போய்டுறேன். நீங்க வேலையைக் கவனிங்க’’ என்று சொல்லி பாலசந்தர் சாரை அங்கிருந்து அழைத்துச் சென்றார்.
போகும்போது பாலசந்தர் சார் என்னிடம், ‘‘முத்துராமன்… ரஜினியை ஜாக்கிரதையா பார்த்துக்க… ஜாக்கிரதையா பார்த்துக்க’’ என்று பதற்றத்துடன் சொல்லிவிட்டுப் போனார். அவர் போனதும் நாங்கள் அந்தக் காட்சியைத் தொடர்ந்து படமாக்கி முடித்தோம். பாலசந்தர் சார் ஏன் தன் படங்களில் சண்டைக் காட்சிகள் வைக்கவில்லை என்பது இப்போது உங்களுக்குப் புரிகிறதா?
‘நெற்றிக்கண்’ படத்தைத் தொடங்குவதற்கு முன்பே பாலசந்தர் சார் ‘‘முத்துராமன், ரஜினியின் ஒட்டுமொத்த நடிப்பையும் கொண்டுவரணும்; அதுவும் ரஜினியோட அப்பா கேரக்டர்ல அவரோட நடிப்பு சிறப்பா இருக்கணும்’’ என்று சொல்லியிருந்தார். படம் முடிந்து பாலசந்தர் சாருக்கு படத்தை போட்டுக் காட்டினேன். ‘‘சூப்பர் ஸ்டார் ரஜினி, சூப்பரா பண்ணியிருக்கார். அப்பா கேரக்டர் நடிப்பு சூப்பரோ சூப்பர்…’’ என்றார். அந்தப் பாராட்டு எங்களுக்கு கிடைத்த விருது. நகைச்சுவை கலந்து மைனராக நடித்த ரஜினியின் அப்பா கேரக்டர் நடிப்பு இன்றைக்கு பார்த்தாலும் பிரமிப்பூட்டும். ‘பீடி… குடி… லேடி… இல்லாதவன் பேடி!’ன்னு ரஜினி பஞ்ச் வசனம் பேசுவார். அந்த இடத்துக்கு தியேட்டரில் அப்படி ஒரு கிளாப்ஸ். அது மாதிரி பல இடங்களுக்கும் கைதட்டல். அதனாலேயே ‘நெற்றிக்கண்’ கவிதாலயாவின் ‘வெற்றிக் கண்’ ஆனது.
‘நெற்றிக்கண்’ படத்தில் ரஜினிகாந்த் (1981).
நான் சினிமாவில் பழகியவர்களில் முக்கியமான புள்ளிகளில் ஒருவர் மணி ஐயர். விநியோகஸ்தர், நிதி, தயாரிப்பு ஆலோசகர் என்று சினிமாவின் பல துறைகளிலும் பங்குபெற்றவர். நான் இயக்கிய, ‘கனிமுத்து பாப்பா’ முதல் என்னோடு பழகி வந்தார். மோரீஸ்மைனர் காரை வைத்துக்கொண்டு சினிமா வட்டாரத்தையே வலம் வந்து, ‘சினிமா உலகில் எங்கே, என்ன நடக்குது?’ என்பதை விரல்நுனியில் வைத்திருப்பார். அவர் ஒருமுறை, ‘‘படம் பண்ணணும் சார். அதை நீங்கதான் டைரக்ட் செய்யணும்’’னு சொன்னார். ‘‘இப்போ நான் இயக்கிக்கொண்டு இருக்கும் படங்களை எல்லாம் முடிச்சிட்டு… உங்க படத்தை பண்ணுவோம் சார்’’ என்று சொல்லியிருந்தேன்.
நான் சொல்லியிருந்தபடியே அந்தப் படங்கள் எல்லாம் முடிந்ததும், மணி ஐயருக்காக சப்ஜெக்ட் யோசிக்க ஆரம்பிச்சோம். அப்போது மணி ஐயர் என்னிடம் வந்து, ‘‘விசு சாரோட ‘குடும்பம் ஒரு கதம்பம்’னு ஒரு நாடகம் பார்த்தேன். ரொம்ப நல்லா இருந்தது. நீங்களும் அதை ஒருதடவை பாருங்க. அந்தக் கதையை வாங்கி படம் பண்ணிடுவோம்’’ என்றார். விசு சாரோட நாடகங்கள் எப்போதும் பிரமாதமாக இருக்கும். ராஜா அண்ணாமலை மன்றத்தில், பாலசந்தர் சாரோட நாடகங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் போர்டு போட்டது விசு சார் நாடகத்துக்குத்தான். நகைச்சுவை, சென்டிமென்ட் எல்லாம் சேர்ந்து அவரது நாடகம் குடும்பப் பாங்கா இருக்கும். ஆனா, அவர்கிட்ட எப்போ கேட்டாலும் ‘‘அந்தக் கதையை சினிமாவுக்கு கொடுத்துட்டேனே’’ன்னுதான் சொல்வார் என்று மணி ஐயர்கிட்ட சொன்னேன். அவர், ‘‘நான் விஷயத்தை விசு சார்கிட்டே பேசிட்டேன். நீங்க வந்து நாடகத்தை பாருங்க’’ன்னு அழைச்சுட்டுப் போனார். நாடகம் பார்த்தேன். ரொம்பவும் பிடிச்சுப் போச்சு. விசு சார்தான் அந்த நாடகத்தில் நாயகன். அவரையே சினிமாவிலும் நடிக்க வைப்பது என்று முடிவெடுத்தோம். புதியவரை நடிக்க வைத்தால் எப்போதும் ஒரு எதிர்ப்பு வரும். அதையெல்லாம் மீறி அந்த பாத்திரத்தில் விசுதான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்.
ஒரு வீட்டுக்குள் நாலு குடித்தனம் இருக்கிற மாதிரி கதை. படத்தில் விசு, கமலா காமேஷ், எஸ்.வி.சேகர், பிரதாப் போத்தன், சுஹாசினி, சுமலதா, கிஷ்மு, ரங்கா, நித்யா, சாமிக்கண்ணு, ஓமக்குச்சி இப்படி நிறையப் பேர் நடித்தார்கள். கற்பகம் ஸ்டுடியோவில்தான் நாங்கள் எதிர்பார்த்தது மாதிரி அப்படி ஒரு வீடு எங்களுக்கு அமைந்தது. அந்த வீட்டை நான்கு போர்ஷன்களாக்கி படப்பிடிப்பைத் தொடங்கினோம். இதனால் செட்டுப் போடும் செலவு மிச்சம்.
சுஹாசினி நாயகியாக வளர்ந்து வந்த நேரம். ஐந்து தேசிய விருதுகள் வாங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இன்றைக்கும் சிறந்த நடிகைகளில் ஒருவர். அவர் இந்தப் படத்தில் உணர்ச்சிபூர்வமான கதாநாயகியாக நடித்தார். அவருக்குக் கணவராக எஸ்.வி.சேகர். இதில் எஸ்.வி.சேகருக்கு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம். எமோஷனலாக நடித்தார். பிரதாப் போத்தன் தன் பெரிய கண்களேலேயே நடித்துவிடுவார். சுமலதா எங்களுடைய ‘முரட்டுக்காளை’படத்தில் சிறப்பாக நடித்தவர். கிஷ்மு, ரங்கா, கமலா காமேஷ், நித்யா இவர்கள் எல்லாம் விசுவின் நாடக அணியினர். ஆகவே, நடிப்புக்கு எந்தக் குறையும் இல்லை.
அந்தக் காலத்தில் நாடகங்கள் நடக்கும்போது நாடகக் குழுக்கள் தங்குவதற்கும் ஒத்திகை பார்ப்பதற்கும் ‘கம்பெனி வீடு’ என்ற ஒன்று வைத்திருப்பார்கள். அதைப் போல ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் நடித்த எல்லோரும் தங்களுக்கான படப்பிடிப்பு முடிந்துவிட்டால் கூட அங்கேயே இருந்து உரையாடிக் கொண்டிருப்பார்கள். அதனால் இயக்குநரான எனக்குப் பல சவுகர்யங்கள். அது என்ன?
இன்னும் படம் பார்ப்போம்…
படங்கள் உதவி: ஞானம்