

கடந்த ஆண்டில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைச் சட்டென்று ஈர்த்த படங்களின் பட்டியலில், வெற்றி இலக்கை எட்டிய படம் ‘ஈட்டி’. அதர்வாவை வைத்து, அறிமுக இயக்குநர் ரவிஅரசு மாறுபட்ட விளையாட்டுத் திரைப்படமாக அதைக் கொடுத்திருந்தார். தற்போது இவர் இயக்கவிருக்கும் இரண்டாவது படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார்.
‘ஈட்டி’ படத்தின் தெலுங்கு மறுஆக்கத்தை நீங்கள் இயக்கப்போவதாகச் செய்திகள் வெளியானதே. இப்போது மீண்டும் தமிழில் இறங்கியுள்ளீர்களே?
‘ஈட்டி’யை தமிழை அடுத்து தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்வதற்கான வேலைகள் நடந்துவருகின்றன. சமீபத்தில் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீனா பன்சாலி என் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியதும் இந்தியில் ‘ஈட்டி’யின் ரீமேக் உரிமைக்கு போட்டி உருவாகியிருக்கிறது. ஆனால், என் இரண்டாவது படம் தமிழில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தப் படமும் ஈட்டியைப் போல இந்திய அளவில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினை சார்ந்த களம்.
திரைப்பட விழாக்கள் மற்றும் விருதுகளைக் குறி வைத்து உருவாகும் படங்கள் அதிகரித்துவரும் சூழலில் கமர்ஷியல் படம் எடுக்க விரும்புகிறீர்களே?
மாற்று சினிமா பண்ண ஆசைதான். ஆனால், அதை நானே தயாரிப்பாளராக மாறிச் செய்ய வேண்டும். அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. அதை அடையும் வரை கமர்ஷியல்தான் என் பாணி. இன்றைய சினிமா சூழலில் வெற்றிப் படம் கொடுத்தே ஆக வேண்டும். அது, பத்துப் படங்கள் இயக்கிய இயக்குநராக இருந்தாலும், முதல் பட இயக்குநராக இருந்தாலும் சரி. வெற்றி ஒன்று மட்டுமே நம் இடத்தை நிலைநிறுத்தும். ‘ஈட்டி’ படத்தை என் முதல் பட வாய்ப்பாக நினைக்காமல் கடைசிப் பட வாய்ப்பாக நினைத்து முனைப்போடு வேலை பார்த்தேன்.
ஒரு வெற்றிப் படம் கொடுத்துவிட்டோம் என்பதற்காக இயக்குநர் என்ற மனநிலைக்குப் போகவில்லை. குறைந்தது மூன்று படங்களாவது ஹிட் கொடுக்க வேண்டும். அதை நோக்கித்தான் என் பயணம் இருக்கிறது. ‘ஈட்டி’ படம் எந்த விருதையும் குறி வைத்து உருவாக்கப்படவில்லை. தயாரிப்பாளரையும் அதர்வாவையும் அடுத்த கட்ட இலக்கு நோக்கிப் பயணிக்க வைக்க வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி உருவாக்கப்பட்டது. அதைச் சரியாகச் செய்தோம் என்றே நினைக்கிறேன்.
மீண்டும் அதர்வாவோடு கூட்டணி என்று செய்தி வெளியானதே?
இல்லை. புது இயக்குநரான என்னை நம்பி இறங்கியவர், அதர்வா. அந்த நம்பிக்கையைச் சரியாகப் பிரதிபலிக்க வேண்டும் என்று படப்பிடிப்பில் தினமும் நினைத்துக்கொள்வேன். அதற்குச் சரியான பலன் கிடைத்தது. நாங்கள் இருவரும் பேசி வைத்துவிட்டோம். அடுத்து இருவருமே தனித்தனியாக இரண்டு படங்கள் முடித்துவிட்டுத்தான் இணையப்போகிறோம்.
முன்னணி நடிகர்கள் இளம் இயக்குநர்களைப் பெரிதாக நம்புகிறார்களே?
ஆரோக்கியமான விஷயம்தானே. பெரிய ஹீரோக்களுக்கு என்றுமே கதைதான் முக்கியமானதாகப் படுகிறது. ரஜினி சார் - ரஞ்சித் கூட்டணி உருவானது நம் சினிமாவில் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முன்பு போல ஒரு இயக்குநர் 50 படம், 100 படம் எடுக்கலாம் என்ற நிலை இப்போது இல்லை. 15 படங்கள் எடுத்தாலே போதும். அதைச் சரியானதாக எடுக்க வேண்டும். அவ்வளவுதான். நான்கு படம் ஹிட் கொடுத்து ஒரு படம் தோல்வி அடைந்தாலும் இங்கே எழுந்து ஓடுவது சிரமமாக இருக்கிறது. அதையெல்லாம் மனதில் வைத்தே படம் கொடுக்க வேண்டியிருக்கிறது.
உழைப்பைக் கொட்டி உருவாக்கும் படம் ஒரு வாரம் மட்டுமே ஓடும் நிலை இருப்பதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?
முன்பு 35, 40 நாட்களில் படத்தை முடித்து 100, 150 நாட்கள் ஓட்டினார்கள். இப்போது அந்த நிலை இல்லை. ஆனால், 90-களில் பெரிய ஊர்களில் உள்ள 70 திரையரங்குகளில் ஒரு படம் ரிலீஸாகும். இன்றைக்கு கோயம்புத்தூர் என்றால் அங்கே சுற்றியுள்ள கிராமங்களையும் சேர்த்து 60 தியேட்டர்களில் ரிலீஸாகிறது. அன்றைக்கு 70 தியேட்டரில் 100 நாட்கள் ஓடியது. இன்றைக்கு 400 திரையரங்குகளில் 25 நாட்கள் ஓடுகிறது. இது ஓ.கேதான். எங்களோட ‘ஈட்டி’ படத்தை 350க்கும் மேலான திரையரங்கில் ரிலீஸ் செய்தோம். 40 நாட்களைத் தாண்டி 160 திரையரங்கில் ஓடியது. இது மிகப் பெரிய வெற்றிதானே.
சரி, ஜி.வி.பிரகாஷுடன் கூட்டணி எப்படி உருவானது?
என்னுடைய இரண்டாவது திரைக்கதையை எழுதி முடித்துவிட்டு யோசித்தபோது கதைக்குப் பொருத்தமான நாயகனாக ஜி.வி. பிரகாஷ் இருந்தார். ஜி.வி.யை தேசிய அளவில் ஹீரோவாக அடையாளப்படுத்தும் களம் இது. தயாரிப்பாளர், மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன. விரைவில் படத்தை அறிவிக்க இருக்கிறோம்.
ரவிஅரசு