28 வருடத்துக்குப் பிறகு அமலா!: இயக்குநரின் குரல்

28 வருடத்துக்குப் பிறகு அமலா!: இயக்குநரின் குரல்
Updated on
2 min read

யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றாமல் படம் இயக்கியவர்கள் லிஸ்ட்டில் புதிதாக இணைந்திருக்கிறார், ஸ்ரீ கார்த்திக். ‘கணம்’ படம் மூலம் அறிமுகமாகும் இவர், 28 வருடங்களுக்குப் பிறகு, நடிகை அமலா அக்கினேனியைத் தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார். ‘உதவி இயக்குநராக வேலை பார்க்கலைன்னாலும் குறும்படங்களும் விளம்பர படங்களும் பண்ணியிருக்கேன்.‘ஹேப்பி டு பி சிங்கிள்’ என்கிற தென்னிந்தியாவின் முதல் வெப்சீரிசை இயக்கி இருக்கேன். கரோனா காலகட்டத்துல, ‘ஐ ஹேட் யூ- ஐ லவ் யூ’னு ஒரு சீரிஸ் பண்ணி, யூடியூப்ல வெளியிட்டோம். அதுக்கும் நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு’ என்கிறார் ஸ்ரீ கார்த்திக்.

‘கணம்’ எப்படி உருவாச்சு?

குறும்படம், வெப்சீரிஸ் தந்த உற்சாகம், படம் இயக்கும் ஆசையில கொண்டுவந்து நிறுத்துச்சு. எனக்கு கதை சொல்றது ரொம்ப பிடிக்கும். ஒரு எமோஷனல் கதைக்கான தேடல்ல இருக்கும்போதுதான், என் அம்மாவை இழந்தேன். கேன்சர்ல அவங்க இறந்துட்டாங்க. எனக்கு என் அம்மாவைத் திரும்ப பார்க்கணும்னு ஆசை வந்தது. அதை எழுத்துல கொண்டு வந்தேன். உணர்வுபூர்வமான ஒரு கதையா கிடைச்சது. அதை டெவலப் பண்ணினப்ப, சயின்ஸ் பிக்சன் டிராமாவா அமைஞ்சது. ட்ரீம்வாரியர் நிறுவனத்துல அந்தக் கதையைச் சொன்னேன். இதை சின்ன பட்ஜெட் படமா பண்ணலாம்னுதான் முதல்ல நான் நினைச்சேன். அவங்க, ‘இல்ல, இந்தக் கதை எல்லாருக்கும் பொருந்துற மாதிரி இருக்கு. இரண்டு மொழியில பண்ணலாம்’னு சொன்னாங்க. தமிழ்ல ‘கணம்’, தெலுங்குல, ‘ஒகே ஒக ஜீவிதம்’ங்கற பெயர்ல தொடங்கினோம். இப்ப முடிச்சாச்சு.

2 மொழிங்கறதால சர்வானந்த் ஹீரோவா நடிக்கிறாரா?

இல்ல. அவரும் ட்ரீம்வாரியர் நிறுவனத்துல தொடர்ந்து பேசிட்டிருந்தார். ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’படத்துக்குப் பிறகு தமிழ்ல நல்ல கதையில நடிக்கணும்னு காத்திட்டிருந்தார். அவர் நடிச்ச ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை இப்பவும் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டாங்க. ‘கணம்’ கதையை சொன்னதும், அவருக்கு அந்தக் கதை மேல பிடிப்பு வந்தது. கண்டிப்பா பண்ணலாம்னு சொன்னார். ரிது வர்மா ஹீரோயினா நடிக்கிறாங்க. தமிழ்ல சதீஷ், ரமேஷ் திலக் பண்ணியிருக்கிற கேரக்டரை, தெலுங்குல பிரியதர்ஷினி, வெண்ணிலா கிஷோர் பண்றாங்க.

28 வருடத்துக்குப் பிறகு அமலாவை தமிழுக்கு அழைச்சுட்டு வந்திருக்கீங்க...

இந்தக் கதையை எழுதும்போது, அம்மா கேரக்டர் முக்கியம்னு நினைச்சேன். அப்பவே அமலா மேடம்தான் இதுக்குச் சரியா இருப்பாங்கன்னு முடிவு பண்ணி, அவங்களை நினைச்சுதான் எழுதினேன். அவங்கிட்ட நடிக்கிறதைப் பற்றிக் கேட்டதும் கதை சொல்லுங்கன்னாங்க. சொன்னேன். கதை கேட்கும்போதே சில இடங்கள்ல சிரிச்சாங்க, சில இடங்கள்ல அழுதாங்க... அப்படியே கதையில ஒன்றிப் போயிட்டாங்க. அம்மா - மகன் கதைன்னாலும் ஜாலியான, வித்தியாசமான, சுவாரஸ்யமான திரைக்கதை இருக்கு. இவ்வளவு வருஷம் கழிச்சு நடிக்க வர்றாங்கன்னா, அவங்களுக்கு முக்கியத்துவம் இருக்கணுமில்ல. அது கதையில இருக்கு. கதை சொன்ன பிறகு என்ன சொல்லப் போறாங்களோன்னு தவிச்சுட்டே இருந்தேன். ‘ஒரு நாள் வெயிட் பண்ணுங்க சொல்றேன்’னாங்க. அதே போல ஒரு நாள் கழிச்சு, ‘நடிக்கிறேன்’னு சொன்னதும் மகிழ்ச்சி தாங்க முடியல. இப்படித்தான் அவங்க இந்தக் கதைக்குள்ள வந்தாங்க.

அம்மா - மகன் கதைன்னாலும் டீசர்ல வேற விஷயங்கள் தெரியுதே?

அம்மா சென்டிமென்ட் இருக்கிற, டைம் டிராவல் கதை இது. சர்வானந்தும் அவர் நண்பர்களும் அம்மாவைத் தேடி, எங்க போறாங்க, என்ன பண்றாங்க அப்படிங்கறது சுவாரஸ்யமா இருக்கும். இதுல நாசர் சார் மிரட்டியிருக்கார். ‘பாகுபலி’க்குப் பிறகு அவர் திறமையை முழுமையா இதுல பயன்படுத்திருக்கோம்.

எடிட்டர், ஒளிப்பதிவாளர், இசை அமைப்பாளர் எல்லாரும் உங்க டீம்தானாமே?

ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங், இசை அமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய், எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் எல்லாருமே நண்பர்கள்தான். குறும்படம், விளம்பரப் படங்கள்ல சேர்ந்து பண்ணியிருக்கோம். அதே டீம் உற்சாகமாக இந்தப் படத்துல இணைஞ்சிருக்கோம். எனக்கு இது முதல் படம்னாலும் அவங்க ஏற்கனவே சில படங்கள் பண்ணியிருக்காங்க.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in