

தலைப்பு செய்தியைவிட, மன்னிக்கப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையே முக்கியம் என்பதைச் சொல்லி, ஊடகங்களின் உண்மையான வலிமையையும் எடுத்துக்காட்டுகிறது ‘பிளட் மணி’ திரைப்படம். வாழ்வாதாரத்தைத் தேடி, முன்பின் பரிச்சயமில்லாத ஒரு புதிய நிலத்துக்குச் செல்லும் மனிதர்களின் புலம்பெயர் வாழ்க்கை, கொஞ்சம் தடம் புரண்டாலும் சிக்கல் கொண்டதாக மாறிவிடுவதை உணர்வுபூர்வமாக சித்தரிக்கிறது ஜீ5 ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கும் இப்படம்.
கொலைக் குற்றத்துக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, குவைத் சிறையில் அடைப்பட்டிருக்கிறார்கள் இரண்டு தமிழ் இளைஞர்கள். நிகழ்ந்த குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுகள் தான் மன்னிப்பதற்கும், தண்டிப்பதற்குமான இறுதி நீதிபதிகள். மன்னிப்பதாக இருந்தால், அவர்கள் ‘இரத்த ஈட்டு தொகை’யைப் பெற்றுக்கொள்ள அந்நாட்டின் ஷரிஅத் சட்டம் அனுமதி தருகிறது.
ஒரு கட்டத்தில் தண்டனையை நிறைவேற்ற நாள் குறித்து அறிவிப்பையும் வெளியிட்டுவிடுகிறது குவைத் அரசு. 30 மணி நேரம் மட்டுமே அவகாசம் இருக்க, சிறையில் இருப்பவர்களைக் காப்பாற்ற போராடுகிறார் இந்த செய்தியைக் கையாளும் ஒரு தொலைக்காட்சிச் செய்தியாளர்.
‘மன்னர் ஆட்சி நடக்கும் இடத்தில் ஒருவரது காலில் விழுந்தால் போதும், இந்தியா போன்ற நாடுகளில் ஒரு வேலையை நடத்திட பலருடைய காலில் விழ வேண்டும்’, ‘நம் நாட்டில் மனிதர்கள் தான் காணாமல் போவார்கள், இலங்கை போன்ற நாடுகளில் ஒரு கிராமமே காணமல் போகும்’ என்பது போன்ற வசனங்கள் உண்மையை உரத்துச் சொல்கின்றன.
கடந்த 2017-ல், சுமார் 30 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்க, குவைத் நீதிமன்றம் அறிவித்தது. குற்றத்தை இழைத்தவர்களின் குடும்ப சூழ்நிலை காரணமாக 5 லட்சம் மட்டுமே திரட்டிக் கொடுக்க முடிந்தது. மீதமுள்ள 25 லட்ச ரூபாயை கேரளா மாநிலத்தின் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் பாணக்காடு சையது முனவர் அலி சிகாப் வழங்கிய நிகழ்வு, மனிதநேயத்துக்கும் மதம் கடந்த சகோதரத்துவத்துக்கும் ஒர் எடுத்துக்காட்டு. இந்தச் சம்பவத்தின் சாயலுடன் உருவாக்கப்பட்டதுதான் ‘பிளட் மணி’.
நிஜ வாழ்க்கைச் சம்பவங்களுடன் கற்பனை கலந்து தருவது தான் சினிமா. சங்கர்தாஸ் திரைக்கதை, வசனம் எழுதி, சர்ஜுன் கே.எம் இயக்கியிருக்கும் ‘பிளட் மணி’யும் அதற்கு விதிவிலக்கு அல்ல. ஆனால், மிகைப்படுத்தல் அதிகமில்லாமல், நல்ல திரை அனுபவத்தைச் சாத்தியமாக்கியிருக்கிறார்கள். முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட நடிகர்களின் பங்களிப்பு படத்துக்கு முதுகெலும்பு.