அமைதியே இவரது அடையாளம்

அமைதியே இவரது அடையாளம்
Updated on
2 min read

விஜய் பிறந்த நாள்: ஜூன் 22

‘தலைவா' படம் ரிலீஸாவதில் மிகுந்த சிக்கல் நிலவிய நேரம். ஒருபுறம் ரசிகர்கள் கொந்தளிக்க, மறுபுறம் தயாரிப்பாளர் தத்தளிக்கிறார். அப்போது ஆளும்கட்சிக்கு மிக நெருக்கமான ஒரு அரசியல் கட்சித் தலைவர் விஜய்க்குத் தகவல் அனுப்புகிறார். ''முக்கியமான அதிகாரி மூலமா முதல்வர்கிட்ட பேசிப் பார்ப்போம். இல்லைன்னா உடனே உங்களுக்கு ஆதரவா களத்தில் இறங்கி நானே போராடுறேன்” எனச் சொல்லி அனுப்புகிறார் அந்தத் தலைவர். அதற்கு விஜய் அனுப்பிய பதில் என்ன தெரியுமா? “எனக்கு நீங்கள் உதவி செய்வதாக இருந்தால் தயவுசெய்து அமைதியாக இருங்கள்!”

விஜய் எந்த அளவுக்குத் தெளிவானவர் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டியது இல்லை. குழந்தைகள் முதல் இளைய தலைமுறைவரை பெருமளவில் ரசிகர்களை ஈர்த்து வைத்திருக்கும் விஜய்க்கு வரும் 22-ம் தேதி பிறந்த நாள். முழுக்க முழுக்க வணிக சினிமாவுக்கான நட்சத்திரமான விஜய் தனிப்பட்ட விஷயங்களில் மிகத் துல்லியமான அணுகுமுறை கொண்டவர். எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற பாணியில் அவருக்கு எப்போதுமே உடன்பாடு இருந்ததில்லை. மிக நிதானமாக யோசிப்பார். எவ்வளவு காலம் எடுத்தும் மனதுக்குள் ஒரு விஷயத்தை அசைபோடுவார். ஆனால், எடுத்த முடிவு தவறாக இருந்தாலும் முடிவெடுத்துவிட்டால் உண்மையிலேயே அவர் பேச்சை அவரே கேட்க மாட்டார்.

ஐம்பதாவது படமாக ‘சுறா'வை அவர் ஒப்புக்கொண்ட பிறகு, “அவசரப்பட்டுட்டீங்க சார்... சுறா உங்களுக்கு வழக்கமான கமர்ஷியல் படமாத்தான் இருக்கும். ஐம்பதாவது படம் அப்படி இருக்கக் கூடாது. நீங்க இப்போ ஓகேன்னு சொன்னாகூட இன்னொரு பெரிய கம்பெனி ரெடியா இருக்கு. அதில பண்ணினால் ஐம்பதாவது படம் பெரிய மாஸா இருக்கும்” என்றார்கள். என்றாலும் சுறாவை விட்டுக் கொடுக்கவில்லை விஜய். காரணம், தயாரிப்பாளர் சங்கிலி முருகனுக்கும் இயக்குநர் எஸ்.பி. ராஜ்குமாருக்கும் அவர் கொடுத்திருந்த வாக்கு.

தனக்கான பாதையை மிகக் கவனமாகச் செதுக்கும் விஜய் மிக எளிமையான மனிதர். அவருக்கான எதிர்காலத் திட்டங்களை வகுப்பது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் என்றாலும், விஜய் எப்போதுமே அம்மா பிள்ளைதான். அம்மா சொல்லிவிட்டால், அதுதான் அவருக்குத் தெய்வ வாக்கு. பிறந்த நாளன்று முதல் ஆசியை அம்மாவிடம் பெறுவதுதான் அவர் வழக்கம்.

சக நடிகர்களுக்கான மரியாதையைக் கொடுப்பதில் விஜயை யாராலும் விஞ்ச முடியாது. ''நடிப்புன்னு வந்துட்டா எல்லாருமே நடிகர்கள்தான். அதுல என்ன சின்ன நடிகர் பெரிய நடிகர்?” எனச் சொல்லி சின்ன கேரக்டர் செய்யும் ஆர்டிஸ்டுகள் மீது தோள் மீது தோள் போட்டு நட்பு பாராட்டுவார். அந்தஸ்து பார்க்காமல் அனைவரிடமும் சகஜமாகப் பழகுவது அவர் சுபாவம்.

நண்பர்கள், இயக்குநர்கள் யாராவது அற்புதமான படம் என்று கூறிவிட்டால், உடனே பார்த்துவிடுவார். அவருக்குப் பிடித்துவிட்டால் இயக்குநருக்கு போன் செய்து பாராட்டிப் புகழ்ந்துவிடுவார். சமீபத்தில் இவரது பாராட்டைப் பெற்ற படம் ‘பாண்டிய நாடு'. தனக்காக ஒரு கதை பண்ணும்படி இயக்குநர் சுசீந்திரனைக் கேட்டிருக்கிறார்.

இப்போதும் விஜய் நடனத்திற்குப் போட்டி விஜய்தான். ஒவ்வொரு படத்திலும் அவரது நடனம் பேசப்படும். இதைப் பற்றி நடன இயக்குநர்களிடம் விசாரித்தால், “எவ்வளவு கஷ்டமான மூவ்மெண்ட் கொடுத்தாலும், நடனமாடிக் காட்டும் போது பார்ப்பார். ஒரு டேக், அதிகபட்சம் இரண்டு டேக் அவ்வளவுதான். அதற்கு மேல் போகிறது என்றால் அது உடன் ஆடுபவர்களால் மட்டுமே இருக்கும்” என்கிறார்கள்.

பெரும் ரசிகர் வட்டம், இளமையான தோற்றம், நடனத் திறமை, நகைச்சுவை நடிப்பு, சண்டைக் காட்சிகளில் தூள் கிளப்புவது என்று பல சாதகமான அம்சங்கள் இருந்தாலும் விஜயை வித்தியாசமான வேடங்களிலோ வித்தியாசமான கதைகளிலோ பார்க்க முடிவதில்லை. முன்னணியில் இருக்கும் எல்லா நடிகர்களுமே ஓரிரு படங்களிலாவது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் விஜயைப் பொறுத்தவரை ஹேர் ஸ்டைல்கூட மாறுவதில்லை. இது விஜய் மீது பொதுவாக உள்ள விமர்சனம். வணிக வெற்றியை இழக்காமல் வித்தியாசமான வேடங்களை ஏற்பது அசாத்தியமான காரியம் அல்ல. அத்தகைய வேடங்களை ஏற்றுத் தன் திரை ஆளுமையில் புதிய பரிமாணங்களைச் சேர்க்கும் விருப்பம் விஜய்க்கு இருக்கிறதா என்று தெரியவில்லை.

விஜயை முழுக்க முழுக்க கமர்ஷியல் பக்கம் திருப்பியது ‘திருமலை'தான் என்று சொல்லலாம். அதிரடி ஆக் ஷன், பஞ்ச் வசனங்கள் கொண்ட அந்தப் படத்தின் வெற்றி, ஒரு சில சறுக்கல்களுக்குப் பின் வந்தது. அதைத் தொடர்ந்து, ‘கில்லி', ‘திருப்பாச்சி', ‘சிவகாசி' என இவரது கமர்ஷியல் பாதை நீண்டுகொண்டேதான் இருக்கிறது. ‘நண்பன்', ‘துப்பாக்கி' போன்ற சில படங்களே வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்கள். முருகதாஸ் இயக்கத்தில் இவர் நடித்துவரும் ‘கத்தி', சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படம் ஆகியவை வித்தியாசமான கதைக்களமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

ராகுல் சந்திப்பு, நாகப்பட்டினம் ஆர்ப்பாட்டம், மோடி சந்திப்பு என இவர் நிகழ்த்துகிற அரசியல் ஆட்டங்கள் யாருக்கும் புரிபடாதவை. ‘தலைவா' படத்துக்குப் பிரச்சினை வந்தபோது ஒரு பத்திரிகையாளர் விஜயைச் சந்தித்திருக்கிறார். தமிழக முதல்வருக்கு எதிரான பரபரப்பான பேட்டியை வாங்கிவிட வேண்டும் என்பது அவருடைய எண்ணம். ஆஃப் தி ரெக்கார்டாக அவரிடம் பல விஷயங்களை பேசிய விஜய், “இப்போ இருக்குற நிலைமையைவிட கடந்த ஆட்சியில நான் பட்ட கஷ்டம் இன்னும் அதிகம். யார் எப்படிப்பட்ட மூஞ்சியைக் காட்டினாலும் என்னோட முகத்தில அமைதிய மட்டும்தான் காட்டுவேன். பதிலே சொல்லாத ஒருத்தன்கிட்ட நீங்க எவ்வளவு நேரம் சண்டை போட முடியும்? எதுக்குமே பதில் சொல்லாம நான் அமைதியா இருக்கிறதுக்கு காரணம், நான் யாரோடவும் சண்டை போட விரும்பலைங்கிறதுதான்!”

அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்தே புகழ்பெற்றவர் இப்படி ஒரு சாதுவான முகம் காட்டுகிறார் என்றால் நம்ப முடிகிறதா? அதான் விஜய்!

கா. இசக்கி முத்து- தொடர்புக்கு: esakkimuthu.k@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in