இயக்குநரின் குரல்: மயக்கத்தை ஏற்படுத்தினா மட்டும் போதாது! - சிதம்பரம்

இயக்குநரின் குரல்: மயக்கத்தை ஏற்படுத்தினா மட்டும் போதாது! - சிதம்பரம்
Updated on
3 min read

புதிய கற்பனை, புதிய கதைக்களம், புதிய காட்சிப்படுத்தல் எனப் புதிய இயக்குநர்களால் மெல்ல சிலிர்த்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது தமிழ் சினிமா. இந்த வரிசையில் பதினெட்டாம் நூற்றாண்டின் அஞ்சல்காரர் ஒருவரின் வாழ்க்கையைத் திரையில் விரிக்க முயன்றிருக்கிறார் அறிமுக இருக்குநர் சிதம்பரம். ‘ஓட்டத் தூதுவன் 1854’ எனத் தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் படம் சென்னை சர்வதேசப் படவிழாவில் தமிழ்ப் படங்களுக்கான போட்டிப் பிரிவில் கலந்துகொண்டு ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றது. இருநூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தை எப்படித் திரையில் கொண்டுவந்தார் இயக்குநர்..? இந்தக் கேள்வியிலிருந்தே பேட்டியைத் தொடங்கினோம்…ஆர்வத்துடன் பதில் சொல்ல ஆரம்பித்தார் இயக்குநர்.

இன்னைக்கு எங்க பார்த்தாலும் செல்ஃபோன் டவர்ஸ். படமெடுத்த பின்னாடி இதுமாதிரி நவீனமான விஷயங்களையெல்லாம் கிராஃபிக்ஸ்ல அழிக்கிறது செலவுபிடிக்கிற வேலை. பீரியடைக் கொண்டுவர எங்களோட முதல் தேர்வு நவீன சாதனங்கள் நுழையாத லொக்கேஷன்கள்தான். அடுத்து அந்தக் காலகட்டத்தில் பயன்படுத்திய நிஜமான பொருட்களை ரெஸ்டோர் பண்ணியது.

முதல்ல படத்தோட கதையைச் சொல்லிடுங்களேன்…

நிச்சயமா… 1854-ல் வாழ்ந்த ஒரு சாமானியனுடைய கதைதான் ஓட்டத்தூதுவன். ஈஸ்ட் இன்டியா கம்பெனிக்காரங்கதான் முதன்முதல்ல இந்தியாக்குள்ள போஸ்டல் சிஸ்டம் கொண்டு வராங்க. அந்தக் காலகட்டத்துல ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டத்தூதுவர்கள் வெள்ளைக்காரங்களுக்காக வேலை செஞ்சாங்க. காடு, மலை, வழிப்பறிக் கொள்ளையர்கள், இயற்கைச் சீற்றங்கள், இருட்டுன்னு பல கஷ்டங்களை எதிர்கொண்டு மக்களுக்கும் வெள்ளைக்காரங்களுக்கும் கடிதங்களை ஒரு பகுதியில இருந்து இன்னொரு பகுதிக்கு எப்படிக் கொண்டுபோய்ச் சேர்த்து சேவை செஞ்சிருப்பாங்கன்னு கொஞ்சம் நினைச்சுப்பாருங்க.

உங்களுக்கு விதவிதமான கற்பனைகள் ஓட ஆரம்பிச்சிரும். நம்ம ஹீரோவும் முதல் போஸ்ட்மேன்கள்ல ஒருத்தன்தான். இவங்களை ஓட்டத் தூதுவர்கள்னு (Mail Runners) சொல்வாங்க. ஊருக்கு உழைச்சாலும் நம்ம நாயகனோட ஊருக்கு எதிரா வெள்ளைக்காரங்க என்ன பண்ணுறாங்க; அதை ஹீரோ எப்படி முறியடிக்கிறாரு? இதுதான் இந்தப் படத்தோட கதை.

இந்தக் கதையில் அந்தக் காலகட்டத்தைத் திரையில் கொண்டுவர என்ன முயற்சி எடுத்தீங்க?

முதலில் இந்திய அஞ்சல் துறையின் வரலாறு என்ற புத்தகம் கிடைத்தது. அது இந்திய தபால் துறை பற்றிய மிக முக்கியமான புத்தகம். பின்னர் ஜார்ஜ் போர்ஜியோ எழுதிய ‘பீக்கான் போஸ்ட்’ என்ற புத்தகம் வாங்கச் சென்றபோது அந்தப் புத்தகத்தை எழுதியவர் மூலம் கும்பகோணத்திலுள்ள அவரது அருங்காட்சியகத்துக்குச் சென்று ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய பொருட்களைக் கண்டுபிடித்தோம். அவர்கள் பயன்படுத்திய பழமையான விசிறி, ஈட்டி, லாந்தர் விளக்கு, தோல் பை முதலியவற்றைப் பயன்படுத்தியதால் தத்ரூபமாகப் படம் அமைந்தது. அதேபோல் இந்திய அஞ்சல் சேவையின் 150 -ம் ஆண்டு விழாவின்போது மெயில் ரன்னர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்தன. அது திரைக்கதைக்கு நிறையவே பயன்பட்டது. அப்புறம் ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய மின்விசிறி, பிரிண்டிங் மிஷின் தேடிப்பிடிச்சு அதைப் புதுசாக்கிப் பயன்படுத்தினோம்.

திரைப்பட விழாக்களில் படத்துக்கு வரவேற்பு இருந்ததா?

முதலில் கொல்கத்தாவில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகிய ஒரே தமிழ்ப் படம் இதுதான். இரண்டாவதாக சென்னை, புனே, பெங்களூரு உள்ளிட்ட நான்கு சர்வதேசப் படவிழாக்கள்ல திரையிடத் தேர்வானது. பொதுவா சர்வதேச படவிழாவுக்கு வரவங்க ஒரு சாய்ஸ்சோடதான் வருவாங்க. ஒரு படம் பிடிக்கலனா அடுத்த திரையரங்குக்குப் போய்யிடலாம்னு ரெடியா நிப்பாங்க, ஆனா ஓட்டத்தூதுவன் படத்துக்கு வந்த ரசிகர்கள் உட்கார இடம் இல்லாமல் நின்னுட்டுப் படத்தை பார்த்தது எங்களுக்கு ரொம்ப பிரமிப்பா இருந்துது.

நடிகர்கள் தேர்வு எந்த அடிப்படையில பண்ணீங்க?

இந்தக் கதைக்குப் புதுமுகங்கள்தான் பொருத்தமாக இருப்பாங்க. ராம் அருண், கவுதமி சௌத்ரி ஆகிய இரண்டு புது முகங்களை நாயகன் நாயகியா தேர்வு செஞ்சோம். இரண்டு பேருமே நவீன நாடக அனுபவம் உள்ளவங்க. நாங்க எதிர்பார்த்ததைவிட சிறப்பாக நடிச்சாங்க. பல காட்சிகள்ல கட் சொன்னாகூட சீன் மூட்லயே இருப்பாங்க.

தேனிக்கு மேல ஐம்பது கிலோ மீடர் தூரத்துல குரங்கினி மலைப் பகுதியில படப்பிடிப்பு நடந்துது. கேமரா போக முடியாத இடத்துக்குகூட நாங்க போய் எடுத்தோம். ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் பண்ணோம். அந்த ஊருக்காரங்களாம் கூட உதவி பண்ணாங்க. நாங்க குறைந்தது இரண்டு மணி நேரம் நடந்துபோனாதான் ஸ்பாட்டுக்கே போக முடியும்ன்ற நிலைமை. அதுல பாறை மேல இருக்குற மாரி ஒரு காட்சி. ஏறுவதற்கே ஒரு மணி நேரம் ஆகும், ஹீரோ முன்னாடி ஏறிட்டாரு. படப்பிடிப்பின்போது சாட்டிலைட் சிக்னல் இல்லாததால ஹெலிக்கேம் வேலை செய்யல. அதனால ஹீரோவுக்கும் எங்களுக்கும் எந்த கம்யூனிகேஷனும் இல்லாம போயிடுச்சு. இப்படி ரொம்பவே சவாலா இருந்துது படப்பிடிப்பு.

இப்படியொரு கதையைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?

வரலாறையும் மரபுகளையும் மறக்கிற சமூகம் ஒரு கட்டத்துல தன்னோட தனித்துவத்தை இழந்துடும். நாமளும் அந்த ஆபத்தான பாதையிலதான் ட்ராவல் பண்ணிகிட்டு இருக்கோம். சினிமா என்ற கலை பழசையும் மரபுகளையும் நினைவூட்ட நல்ல ஊடகம். இது ரசிகர்கள்கிட்ட மயக்கத்தை ஏற்படுத்துற அதேநேரம் மயக்கத்தையும் தெளியவைக்கனும். பழச நாம மறக்கக் கூடாது என்ற எண்ணத்தோடு எடுத்த படம். வரலாற்றுப் பின்னணியோடு படம் பண்ணுறது சுலபம் அல்ல. ஆனால் குறைந்த செலவிலும் ஒரு தரமான பீரியட் படம் தர முடியும்ன்னு ஓட்டத் தூதுவன் வழியா சொல்ல நினைச்சேன். அது சாத்தியமாகியிருக்கு.

சிதம்பரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in