Published : 31 Dec 2021 11:34 AM
Last Updated : 31 Dec 2021 11:34 AM

விடைபெறும் 2021: பொழுதுபோக்கைத் தாண்டி நம்பிக்கை விதைத்த நடிகர்கள்

கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக 2021ஆம் ஆண்டுத் திரைப்படங்களில் பாதி ஓடிடியிலும் மீதி திரையரங்குகளிலுமாக வெளியாகின.

மேம்பட்டுக்கொண்டே இருக்கும் ரசனை மாற்றத்தாலும் ஓடிடி போன்ற தளங்களின் பெருக்கத்தாலும் முன்னணிக் கலைஞர்கள் நடிப்புத் திறமையின் புதிய பரிமாணங்களை வெளிப்படுத்துவதற்கும், புதிய திறமைசாலிகள் நடிகர்களாக முத்திரை பதிப்பதற்கும் வாய்ப்பும் வெளியும் விரிவடைந்திருக்கின்றன.

போற்றுதலுக்குரிய சமூக அக்கறை

இந்த ஆண்டு யாருக்கானது என்கிற கேள்விக்கு ஒரு நடிகரின் பெயரைத்தான் சொல்ல வேண்டும் என்றால், கண்ணை மூடிக்கொண்டு 'சூர்யா' என்று சொல்லிவிடலாம். தீபாவளியை ஒட்டி அவருடைய நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான ‘ஜெய் பீம்’, திரைப்படம் சர்வதேச அளவில் மிகப் பெரிய கவனத்தை ஈர்த்தது. காவல்துறை வன்முறைக்குப் பலியான இருளர் இளைஞரின் குடும்பத்துக்கு தன்னுடைய சட்டப் போராட்டத்தின் மூலம் நீதியைப் பெற்றுத்தரும் வழக்கறிஞராக ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துருவின் கதாபாத்திரத்தில் சூர்யாவின் நடிப்பு பிரமிக்க வைத்தது.. 'ரசிகர்களை திருப்திப்படுத்துவதற்காக' என்னும் பெயரில் காதல், சண்டைக் காட்சி என எந்த சமரசத்துக்கும் சூர்யா இடம் கொடுக்கவில்லை. பழங்குடி மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை பொதுச் சமூகத்தின் பார்வைக்குக் காத்திரமாகப் பதிவுசெய்யும் இயக்குநர் த.செ.ஞானவேலின் நோக்கத்துக்கு ஒரு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் தன்னை முழுமை யாக அர்ப்பணித்துக்கொண்டிருந்தார் சூர்யா.

திரைப்படம் என்னும் வெகுஜனக் கலை வடிவத்தை சமூக மாற்றத்துக்கான கருவியாகப் பயன்படுத்துவதில் ஒரு நட்சத்திர நடிகர் எவ்வளவு வலிமையான பங்களிப்பை ஆற்ற முடியும் என்பதை ’ஜெய் பீம்’ மூலம் செய்து காண்பித்திருக்கிறார் சூர்யா. படத்துக்கு அப்பால், இருளர் பழங்குடி மக்களுக்கும் நிஜ சம்பவத்தில் உயிரிழந்தவரின் மனைவியான பார்வதிக்கும் நிதியுதவி செய்தது ஒரு திரை நட்சத்திரம் என்பதைத் தாண்டி ஒரு சமூக அக்கறைமிக்க ஆளுமையாகவும் சூர்யாவின் மீதான நன்மதிப்பு அதிகரித்தது.

மாரி செல்வராஜ் இயக்கிய ‘கர்ணன்’ படத்தில் தென்மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியல் சாதி இளைஞராக, சாதியவாதிகளால் இழைக்கப்படும் அநீதியை எதிர்த்துத் திமிறி எழும் நாயகனாக தனுஷ் நடித்திருந்தார். இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களின் ஒன்றாக ‘கர்ணன்’ அமைந்ததற்கு தனுஷின் நட்சத்திர மதிப்பால் விளைந்த எதிர்பார்ப்பும் முக்கியப் பங்கு வகித்தது.

நகைச்சுவை நடிகராக அறியப்படும் யோகிபாபு ‘மண்டேலா’வில் கிராமத்தில் சாதி ஒடுக்குமுறைக்கு ஆளாகும் சிகை திருத்தும் தொழிலாளியாக மையக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தேர்தல் அரசியலின் காரணமாக கிடைக்கும் திடீர் “மரியாதை”யை எதிர்கொள்ளும் விதத்தில் படத்தின் இரண்டாம் பாதியைத் தோளில் சுமந்திருந்தார்.

’ரைட்டர்’ படத்தில் குற்ற உணர்ச்சிக்குள்ளாகும் கடைநிலைக் காவலராக சமுத்திரக்கனி ஒரு நடிகராக் தன்னுடைய பன்முகப் பரிமாணத்தை மீண்டும் உறுதிபடுத்தினார்.

ஏற்றம் தந்த திருப்பங்கள்

ஓடிடியில்தான் வெளியாகும் என்று வெளியீட்டுத் தேதிகூட அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் திடீரென்று திரை யரங்கில் வெளியான ’டாக்டர்’ சிவகார்த்திகேயனுக்கு ஒரு நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் மிகப் பெரிய பூஸ்டர் ஷாட். நெல்சன் இயக்கத்தில் அவல நகைச்சுவையை அள்ளிக்கொடுத்த இந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றி, பெருந் தொற்றால் முடங்கி யிருந்த திரையரங்க வணிகம் மீண்டுவிடும் என்னும் நம்பிக்கையை ஆழமாக விதைத்தது. தன் திரை இயல்புக்கு மாறாகப் படம் முழுக்க சீரியஸான நபராக, ஒரே ஒரு நகைச்சுவை வசனம்கூட பேசாமல் தன்னைச் சுற்றி இருக்கும் அனைவரையும் நகைச்சுவை செய்ய விட்டு அமைதியாக அசத்தியிருந்தார் சிவகார்த்திகேயன்.

இறுதி நொடிவரை வெளியாகுமா ஆகாதா என்னும் பரபரப்புக்கு இடையே வெளியான ‘மாநாடு’ மூலம், சிலம்பரசன் எந்த நடிகருக்கும் சளைத்தவரல்ல என்பதை வலுவாக நிலைநிறுத்தியது. டைம் லூப் கான்செப்டை தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் புரியும் வகையில் தொடக்கம் முதல் இறுதிவரை சுவாரஸ்யமான தருணங்களுடன் வெங்கட் பிரபு அமைத்திருந்த திரைக்கதையில், ஒரு மதக் கலவரத்தைத் தடுக்கும் பொறுப்பை ஏற்கும் அப்பாவி இளைஞன் 'அப்துல் காலிக்'காகவே மாறியிருந்த சிலம்பரசனை அனைவருக்கும் பிடித்திருந்தது.

இந்த ஆண்டு நேர்மறையான திருப்பு முனையைச் சந்தித்த இன்னொரு நாயக நடிகர் ஆர்யா.ஆண்டின் தொடக்கத்தில் ஓடிடியில் வெளியான ‘டெடி’ நம்பிக்கை அளிக்கும் விதமாக விமர்சனங் களைப் பெற்றது. 1970களில் வட சென்னையில் செழித்திருந்த பாக்ஸிங் பரம்பரைகளைச் சுற்றி பா.இரஞ்சித் இயக்கி ஓடிடியில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’யில அங்கீகாரத்துக்காகப் போராடும் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பாக்ஸராக முற்றிலும் உருமாறி அனைவரையும் ஈர்த்திருந்தார் ஆர்யா.. தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியான ‘எனிமி’ படத்தில் எதிர்நாயகனாகவும் ரசிகர்களைக் கவர்ந்தார்.

நம்பிக்கை அளித்த நாயகிகள்

ஓடிடிகளின் பரவலாக்கத்தால் நாயகியை மையப்படுத்திய திரைப் படங்களுக்கான வெளி மேலும் விரிவடைந்திருக்கிறது. பல முன்னணி நட்சத்திர நடிகைகள் ஓடிடியில்வெளியாகும் திரைப் படங்கள், வெப் சிரீஸ்களில் கால்பதிக்கத் தொடங்கியுள்ளனர். திரை யரங்குகளில் வெளியான படங்களின் மூலம் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்னும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள நயன்தாரா, ‘நெற்றிக் கண்’ படத்தின் மூலம் ஓடிடியிலும் தன் நட்சத்திர மதிப்பை நிலை நாட்டினார். விபத்தில் கண் பார்வையை இழந்து விட்ட பின், பெண் களைச் சிறைப் படுத்தி சித்திர வதை செய்யும் வில்லனைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும் நாயகியாகச் சண்டைக் காட்சிகள், பஞ்ச் வசனங்களுடன் ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தார்.

திறமையான நடிகையரில் ஒருவராகப் பெயர்பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘திட்டம் இரண்டு’, ‘பூமிகா’ ஆகிய இரண்டு திரைப் படங்களும் ஓடிடியில் வெளியாகிப் பரவலான கவனத்தை ஈர்த்தன. இவ்விரு படங்களில் முறையே காவல்துறை அதிகாரியாகவும் குழந்தைகளுக்கான உளவியல் ஆலோசகராகவும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

‘கசடதபற’, ‘‘ஓ மணப்பெண்ணே’, வெளிநாட்டில் வாழும் தமிழர்களை மரணதண்டனையிலிருந்து காப்பாற்றும் பத்திரிகையாளராக நடித்த ‘பிளட் மணி’ என ஓடிடி வெளியீடுகளின் மூலம் இந்த ஆண்டு பரவலான கவனத்தை ஈர்த்தார் பிரியா பவானி சங்கர்.

‘ஜெய் பீம்’ படத்தில் காணாமல் ஆக்கப்பட்ட கணவனை மீட்பதற்கான சட்டப் போராட்டத்தைத் தொடங்கி அதிகார வர்க்கத்தின் மிரட்டல்களுக்கு அடிபணியாமல், சுயமரியாதையுடன் சலுகைகளைப் புறம்தள்ளி இறுதியில் தனக்கான நீதியைப் பெறும் பழங்குடிப் பெண்ணைக் கண்முன் நிறுத்திய செங்கேணியாக லிஜோ மோள் ஜோஸ் அனைவரையும் வியந்து பாராட்டவைத்தார்.

அசத்தலான அறிமுகங்கள்

மூன்று சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்டுவஸந்த் எஸ்.சாய் இயக்கியிருந்த ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்னும் ஆந்தாலஜி படத்தில் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்த காளீஸ்வரி (அறிமுகம்), பார்வதி, லட்சுமிப்ரியா ஆகிய மூவருமே பாராட்டத்தக்க வகையில்நடித்திருந்தனர். குறிப்பாகக் கணவனின் ஆதிக்கத்தை எதிர்க்கத் துணியும் எளிய பெண்ணாக காளீஸ்வரி மூவரில் முதலிடம் பிடித்தார்.

‘சார்பட்டா பரம்பரை’யில் மாரியம்மாவாகக் கணவனுக்கு அன்பைப் பொழிந்து தோள்கொடுக்கும் துணைவியாகவும் அதட்டி நல்வழிப்படுத்தும் தோழியாகவும் துஷாரா விஜயன் சிறப்பான நடிப்பைத் தந்திருந்தார்.

மையத்தைத் தாண்டி

ஒட்டுமொத்தமாகத் தமிழ் சினிமாவில் வலுவான துணைக் கதாபாத்திரங்கள் அதிகரித்துவிட்டன. ‘கர்ணன்’ படத்தில் ‘ஏமராஜாவாகா’ லால், ‘தலைவி’படத்தில் எம்,ஜி,ஆரின் தோற்றத்தையும் உடல் மொழியையும் உண்மைக்கு நெருக்கமாக வெளிப்படுத்திய அரவிந்த்சுவாமி, ‘சார்பட்டா பரம்பரை’ குத்துச்சண்டை வாத்தியாராக வாழ்ந்து காட்டிய பசுபதி, ‘ஜெய் பீம்’ படத்தில் தன் சமூகத்தினர் கல்வி பெறுவதற்காகப் போராடி செய்யாத தவறுக்காக சிறையில் அடைக்கப்பட்டு காவல்துறை வன்முறைக்கு பலியாகும் இருளர் சமூக இளைஞனாக மணிகண்டன், ‘மாநாடு’ படத்தில் நாயகனுக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த வில்லனாக எஸ்.ஜே.சூர்யா என முக்கியமான துணைக் கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் ‘டாக்டர்’ படத்தில் ‘என் அம்மா திட்னாண்டா’ என்று ஒரே காட்சியில் விழுந்துவிழுந்து சிரிக்கவைத்த பிஜார்ன் சுர்ராவ் வரை பல நடிகர்கள் இந்த ஆண்டில் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்தனர்.

இப்படியாக பெருந்தொற்றுக் காலத்தின் இழப்புகள், அச்சங்கள், அவநம்பிக்கைகளுக்கு இடையேசினிமாவின் வாயிலாக ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் மலர்ச்சியையும் அளித்த கலைஞர்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில்இன்னும் சிறப்பாகப் பரிணமிப்பார்கள்என்றும் இந்த ஆண்டைத் தவறவிட்ட கலைஞர்கள் வரும் ஆண்டுகளில் ரசிகர்களை மகிழ்விப்பதற்கான வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள் வார்கள் என்றும் நம்பிக் கையுடன் புத்தாண்டைத் தொடங்குவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x