

த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா வரிசையில் காஜல் அகர்வாலும் முப்பது வயதைத் தாண்டிவிட்டார். அதனால் என்ன, முன்பைவிட இந்த நான்கு கதாநாயகிகளுமே செம பிஸி. தற்போது விக்ரம் ஜோடியாக ‘கருடா’ படத்தில் கோயம்புத்தூர் பெண்ணாக நடிக்கும் காஜல், அடுத்து ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். ‘கோ’ படத்தைத் தந்த ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றிய ஜீவா, தற்போது இதே நிறுவனத்தின் கூட்டணியில் ‘கவலை வேண்டாம்’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில்தான் ஜீவாவுக்கு ஜோடி காஜல். இது தவிர ஜூனியர் என்.டி.ஆர். நடித்த தெலுங்குப்படமான ‘டெம்பர்’ தமிழில் மறு ஆக்கம் செய்யப்படுகிறது. இந்தப் படத்தில் மீண்டும் போலீஸ் வேடமேற்கும் சிம்புவுக்கு ஜோடியாகவும் காஜல் ஒப்பந்தமாகியிருக்கிறார். இது தவிர விஷால் படமொன்றுக்கும் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் காஜல்.
மே சிவா
காஞ்சனா 2-ன் வெற்றியைத்தொடர்ந்து சாய்ரமணி இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்கும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க, வேந்தர் மூவீஸ் மே மாத வெளியீடாக ரிலீஸ் செய்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இருப்பினும் இன்னும் நான்கு பாடல் காட்சிகளைப் படமாக்க வேண்டியிருக்கிறதாம்.
திகில் நரேன்
‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’ படங்களின் மூலம் கிடைத்த வெற்றிகளை ‘முகமூடி’யில் வீணடித்த நரேன், பெரும் போராட்டத்துக்குப் பின் ‘கத்துக்குட்டி’ படத்துக்குக் கிடைத்த கவனத்தால் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறார். மிகக் கவனமாகப் படங்களைத் தேர்வு செய்துவரும் அவர், தற்போது ஒப்புக்கொண்டு நடித்துவரும் படம் ‘ரம்’. இது அவர் நடிக்கும் முதல் திகில் படமாம். இந்தப் படத்தில் விவேக்குடன் இணைந்து நடிப்பது பற்றிப் பெருமைப்பட்டுக்கொள்கிறார் நரேன்.
கே.வி. ஆனந்தின் வில்லன்
ஏ.ஜி.எஸ் படநிறுவனத்தின் தயாரிப்பில் தனது அடுத்த அதிரடியைத் தொடங்கிவிட்டார் கே.வி.ஆனந்த். விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் இருவரையும் சமமான கதாபாத்திரங்களில் நடிக்க வைக்கிறாராம் இந்தப் படத்தில். இதில் டி. ராஜேந்தருக்கு வில்லன் வேடம். வழக்கம்போல தனது ஆஸ்தான எழுத்தாளர்கள் சுபாவுடன் இணைந்து கே.வி.ஆனந்த் கதையை எழுத, பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து என்பது மட்டுமே தற்போதைக்கு முடிவாகியிருக்கும் செய்தி.
ஏ.ஆர். ரஹ்மானின் இயக்குநர்
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் திரைக்கதை எழுதிவருகிறார் என்ற செய்தியை முந்தித் தந்தது இந்து டாக்கீஸ். தற்போது அவர் கதை, திரைக்கதை எழுதி இசையமைத்து, தயாரிக்கும் இந்திப் படம் ‘99 சாங்ஸ்’. இந்தப் படத்துக்கு மும்பையைச் சேர்ந்த பாடகர், இசைக் கலைஞர், விளம்பரப்பட இயக்குநர், ஆவணப்பட இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தியை இயக்குநராக நியமித்திருக்கிறார். முன்னணி பிராண்டுகளுக்கு இவர் இயக்கிய விளம்பரப் படங்களும், திரையிசைக்கு வெளியே இயங்கும் இசைக் கலைஞர்கள் பற்றி இவர் இயக்கிய ஆவணப்படமும்தான் ரஹ்மானைக் கவர்ந்த அம்சங்களாம்.
ஏஞ்சலினா வேடத்தில் எமி
‘கபாலி’ படத்தில் நடித்து முடித்த ரஜினி தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ‘எந்திரன் 2.0’ படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார். ஆனால் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடந்துவருகிறது. டாக்டர் ரிச்சர்ட் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல இந்திப் பட நாயகன் அக்ஷய் குமார் நடிக்கும் காட்சிகளை தற்போது இயக்குநர் படமாக்கி வருகிறார்.
அடுத்து இந்தப் படத்தின் நாயகியாக நடித்து வரும் எமி ஜாக்சன் நடிக்கும் காட்சிகளைப் படமாக்க இருக்கிறாராம் இயக்குநர். ஹாலிவுட்டின் மிக அதிக ஊதியம் பெற்ற கதாநாயகியான ஏஞ்சலினா ஜோலி நடித்த பிரபல வீடியோ கேம் கதாபாத்திரமான ‘டாம்ப் ரைடர்’ (Tomb Raider) சாயலில் அமைந்த வேடத்தில் நடிக்கிறார் எமி என்ற தகவல் பட வட்டாரத்திலிருந்து கிடைக்கிறது.