

பெரிய சந்தையும் அதற்கான பல சூத்திரங்களையும் சமூக அரசியல் பண்பாட்டு அளவிலான தாக்கங்களையும் கொண்டது தமிழ் சினிமா. அதை ஒப்பிடும்போது மலையாள சினிமாவுலகம் தென்னகத்தைப் பொறுத்தவரை சந்தை அளவிலும், பண்பாட்டுத் தாக்கத்திலும் குட்டிப் பையன் போலத்தான். ஆனால் தீவிர சினிமா, மாற்று சினிமா, வித்தியாசமான வணிக சினிமா என எல்லா அம்சங்களிலும் கடந்த 40 ஆண்டுகளாக நல்ல சினிமா ரசிகன் பொறாமைப்படும் வகையில் அங்கே நல்ல திரைப்படங்கள் வந்துகொண்டேயிருக்கின்றன. புதிய இயக்குநர்கள், புதிய கதைக்களங்கள், புதிய நடிகர்களால் 2010-ம் ஆண்டுக்குப் பிறகு திரும்ப உயிரூட்டப்பட்ட மலையாள சினிமாவுலகின் முக்கியமான திரைப்படங்கள் குறித்த இந்த நூல் மலையாள சினிமா ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டக்கூடியது.
மதுரையைச் சேர்ந்த கவிஞரும் சிறுகதையாசிரியருமான சாம்ராஜ், இந்நூலில் பிராஞ்சியேட்டன், பிரம்மரம், லெஃப்ட் ரைட் லெஃப்ட், த்ருஷ்யம், அயூபிண்ட புஸ்தகம் உள்ளிட்ட 15 திரைப்படங்கள் பற்றி எழுதியுள்ளார். இக்கட்டுரைகளில் மலையாளிகளின் வாழ்க்கை, அரசியல் நோக்கு, நகைச்சுவை மற்றும் பண்பாட்டுத் தகவல்கள் இயல்பாகப் பதிவாகியுள்ளன. மலையாள சினிமாவையும், அதன் மாறிவரும் தன்மைகளையும் ஏக்கத்துடன் பார்க்கிறார் சாம்ராஜ். அதேவேளையில் தமிழர்களை மோசமான கதாபாத்திரங்களாகத் தொடர்ந்து சித்தரிக்கும் மலையாளத் திரைப்படங்களைப் பட்டியல் போட்டுக் கண்டிக்கிறார்.
மலையாளத்தில் நல்ல சினிமா வருவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக மலையாள சினிமாவுக்குச் சென்னை போல, மையப்படுத்தப்பட்ட ஒரு ஊர் இல்லாதது தான் காரணம் என்கிறார். சென்னை போன்ற சினிமா மையம்தான் தமிழ் சினிமாவைக் கட்டுப்படுத்துவதாகச் சொல்லும் பார்வை கவனத்துக்குரியது.
உரையாடல் தன்மையும் எள்ளலும் உணர்வு ததும்பும் கதைசொல்லலும் சேர்ந்த இப்புத்தகம் அபூர்வமாக வாசக சந்தோஷத்தையும் வைத்திருக்கிறது. சினிமா ரசிகர்களும் சினிமாத் துறை சார்ந்தவர்களும் படிக்க வேண்டிய புத்தகம் இது.
நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்
சாம்ராஜ்
நற்றிணைப் பதிப்பகம், 6/84, மல்லன் பொன்னப்பன் தெரு
திருவல்லிக்கேணி, சென்னை-05
விலை: ரூ. 70. தொடர்புக்கு: 044-2848 2818