Last Updated : 17 Dec, 2021 10:33 AM

 

Published : 17 Dec 2021 10:33 AM
Last Updated : 17 Dec 2021 10:33 AM

சமூக நீதி நோக்கி மெல்ல நகரும் தமிழ் சினிமா

திரையரங்குகள், ஓ.டி.டி தளங்கள் என இரு வடிவங்களில் திரைப்படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவை ஆரோக்கியமான பாதைக்கு அழைத்துச் செல்லத் தொடங்கியிருக்கிறது. திரையரங்குகளில் வெளிப்படுத்த முடியாத கதை சொல்லல் முறை, மாற்று சினிமாவுக்கான அணுகுமுறை, பரிசோதனை முயற்சிகள் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்துவதற்கான களமாக ஓடிடி தளங்கள் அமைந்துள்ளன. அந்த ஆற்றல் திரையரங்குகளில் வெளியாகும் படங்களிலும் எதிரொலிக்கிறது. நாயக பிம்பத்தை நம்பாமல் கதையை, களத்தை நம்பி சமூகத்துக்கான விதையை ஊன்றும் திரைப்படங்கள் இரு வடிவங்களிலும் வெளியாகின்றன.

எஸ்.பி.ஜனநாதன், பா.இரஞ்சித், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்களின் வருகைக்குப் பிறகு சமூக ஏற்றத்தாழ்வுகளை காத்திரமாகப் பதிவுசெய்து சமத்துவம் பேசும் படங்கள், சமூக நீதி சினிமாக்கள் அதிகரித்து வருகின்றன. ‘மேற்குத்தொடர்ச்சி மலை’, ‘பரியேறும் பெருமாள்’, ‘அசுரன்’ என்று கடந்த சில வருடங்களில் சமூக நீதி சினிமாக்களுக்குக் கிடைத்த வெற்றியும், வரவேற்பும் இந்த ஆண்டும் அத்தகைய திரைப்படங்கள் வெளியாக, வலுப்பெறக் காரணமாக உள்ளன. 2021ஆம் ஆண்டிலும் திரையங்குகளிலும் ஓ.டி.டியிலும் வெளியான இப்படிப்பட்ட படங்கள் தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்ட பயணம் குறித்த நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கின்றன.

ஒடுக்குமுறைக்கு எதிரான கற்கள்

பேருந்து நிறுத்தத்துக்காக ஒரு ஊரே போராடும் வலியையும், ஒரு போலீஸ் அதிகாரியின் சாதித் திமிரால் ஒடுக்கப்பட்டவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையின் உச்சத்தையும் ‘கர்ணன்’ திரைப்படம் கடத்தியது. நாயகனான தனுஷை பலம் மிகுந்தவராகக் காட்டும் ஹீரோயிசக் காட்சிகள் படத்தில் இருந்ததும், நாயகனை ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்பராக முன்னிறுத்திய விதமும் பேசுபொருளானது. அதே சமயம் தனி மனிதனாகப் போராடாமல் ஊர் மக்களுடன் சேர்ந்து போராடியதும், உண்மைச் சம்பவத்தைக் காட்சிப்படுத்திய விதமும் நம்பகத்தன்மைக்கு வலு சேர்த்தது.

முடிதிருத்தும் கலைஞனை இளிச்சவாயன் என்று சொல்லி புறக்கணிக்கும் ஒரு கிராமம், தேர்தல் அரசியலில் வாக்குக்காக என்னென்ன அலப்பறைகளைச் செய்கிறது என்பதை நகைச்சுவை கலந்து சொன்ன விதத்தில் மடோன் அஸ்வினின் ‘மண்டேலா’ கவனம் பெற்றது. நாயகன் யோகி பாபுவைக் கழிப்பறை சுத்தம் செய்ய அழைக்கும்போதுகூட காரில் ஏற்றிச் செல்லாமல், பின்னாலேயே பல கிலோ மீட்டர் ஓடிவரச் செய்த விதத்தில் காட்டிய சாதிப் பாகுபாடு, புறவாசல் வழியாக வந்து முடிதிருத்தச் சொல்லும் ஆதிக்க மனப்பான்மை, கிராமத்துப் பெண்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவஸ்தைகள் ஆகியவற்றைப் போகிற போக்கில் சொன்ன விதம் அசரவைத்தது. ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு இந்திய அரசின் சார்பில் அனுப்பப்படும் திரைப்படத்துக்கான பரிசீலனைப் பட்டியலில் இப்படம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

வட சென்னையில் ஒரு காலகட்டத்தில் செழித்திருந்த குத்துச்சண்டை பரம்பரைகளின் கதையான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில். “கபிலா... நீயெல்லாம் இங்கு வந்து நிக்கவே கூடாது, போ’ என்று ஒருவர் நாயகனைப் பார்த்துக் கூறுவதன் மூலம், அவன் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தனக்கான அடையாளத்தை நிலைநிறுத்த, இழந்ததை மீட்கத் தனிப் பெரும் போராட்டத்தை நாயகன் மேற்கொள்வதோடு, அந்த காலகட்டதில் ஆட்சிசெய்துகொண்டிருந்த பிரதான அரசியல் கட்சிகளின் அரசியல் பின்புலத்தையும் பா.இரஞ்சித் நேரடியாக துணிச்சலுடன் காட்சிப்படுத்தியிருந்தார்.

பலிகடாவாகும் சாமானிய மக்கள்

தமிழ் சினிமாவில் புறக்கணிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை இவ்வளவு உண்மையும் உருக்கமுமாகப் பதிவு செய்யப்படவில்லை என்ற குறையை போக்கிய திரைப்படங்களில் த.செ.ஞானவேலின் ‘ஜெய் பீம்’ முதன்மையானது. ராஜாக்கண்ணு- செங்கேணி வாழ்க்கையின் ஊடே இருளர் இன மக்கள் மீதான அடக்குமுறைகள், திருட்டுப் பட்டம் சுமத்தி, பொய் வழக்கு புனைந்து, காவல்துறை செய்த அதிகார துஷ்பிரயோகத்தைக் கண்ணீரோடு பதிவுசெய்துள்ளது இந்தப் படம். ‘இந்தக் காசு ஏதுன்னு என் புள்ள கேட்டா, உன் அப்பனை அடிச்சே கொன்ன போலீஸ்காரங்க கொடுத்த காசுன்னு சொல்லவா சார், அந்தக் கேவலத்தைவிட நான் போராடித் தோத்தேன்னு சொல்லிக்கறேன்’ என்று அழுகையும் ஆவேசமுமாக செங்கேணி கேட்கும் ஒற்றைக் கேள்வி சமூகத்தின் மீது விழுந்த சவுக்கடி.

கார்ப்பரேட் லாபத்துக்காக சாமானிய மக்களின் வாழ்க்கை எப்படி பலிகடா ஆக்கப்படுகிறது என்பதை வலுவாகப் பதிவுசெய்தது கணேஷ் விநாயகனின் ‘தேன்’. ஆதார் அட்டை வாங்க முடியாமல் திணறுவது, மருத்துவமனை- மருத்துவர்கள்- அரசு அதிகாரிகளின் அலட்சியம், மனைவியின் சடலத்தை அமரர் ஊர்தியில் கொண்டுசெல்ல லஞ்சம் கொடுக்க முடியாமல் தோளில் சுமந்து மலை கிராமத்தில் தனிநபராக அடக்கம் செய்வது போன்ற காட்சிகள் மூலம் அரசு இயந்திரத்தையும், அரசு அதிகாரிகளையும் சுய பரிசோதனை செய்துகொள்ளத் தூண்டும் அளவுக்கு ‘தேன்’ கசப்பான உண்மையைப் பதிவுசெய்தது.

வசந்தபாலனின் ‘ஜெயில்’ சென்னையிலிந்து வெகுதூரத்துக்கு அப்புறப்படுத்தப்படும் பூர்வகுடி மக்களின் வாழ்வு சின்னாபின்னமாகச் சீர்குலைவதை, அவர்களில் சிலர் திசை மாறிச் செல்லும் ஆபத்தை, அங்கு நிகழும் குற்றங்களின் பின்னணியை உணர்த்தியது. திரைக்கதையின் போக்கில் சிக்கல்கள் இருந்தாலும் படத்தின் நோக்கத்தைப் புறந்தள்ளிவிட முடியாது.

முஸ்லிம் வெறுப்பு அரசியல்

வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு அரசியலை, அதனால் பீடிக்கப்பட்ட பொதுப்புத்தியைக் கேள்விக்குட்படுத்தி, விஷ விதையைத் தூவுபவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது. அப்துல் காலிக் கதாபாத்திரத்தில் நடித்த சிம்பு, ‘‘அமெரிக்காவில் பொது இடத்துல பல பேர சுட்டுக் கொல்றவன சைக்கோன்னு சொல்றாங்க. ஆனால், இந்தியாவில் முஸ்லிம் தீவிரவாதின்னு மதச்சாயம் பூசுறாங்க. தீவிரவாதியில் ஏது சாதி, மதம்?’’ என்று நியாயம் கேட்கிறார். இதே கேள்வியைத்தான்‘ஜெய் பீம்’ படத்தில் சூர்யா, ‘‘திருடன் இல்லாத சாதி இருக்கா... உங்க சாதி என் சாதின்னு எல்லா சாதிலும் பெரிய பெரிய திருடங்க இருக்காங்க’’ என்று உரக்கச் சொல்கிறார். காலங்காலமாகச் சுமத்தப்படும் இத்தகைய பழிகளிலிருந்து சம்பந்தப்பட்டவர்களை விடுவிப்பதில் தமிழ் சினிமா ஆற்ற வேண்டிய பங்கை இதுபோன்ற படங்கள் தொடங்கியிருக்கின்றன.

தமிழ் சினிமாவில் இஸ்லாமியரை நாயகனாகச் சித்தரித்துப் பல ஆண்டுகள் ஆகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு வெளியான சில படங்கள் சமத்துவம், சகோதரத்துவம், சமூக நல்லிணக்கத்தைப் பேசி, புண்பட்ட சமூகத்துக்கான ஆறுதலாகத் திகழ்ந்தன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருப்பதுதான் அறம் என்பதைச் சொல்ல தமிழ் சினிமா தவறவில்லை. இனி வரும் ஆண்டுகளிலும் தமிழ் சினிமா, இதேபோல் மக்களின் பக்கமாக நின்று பேசும் என்று எதிர்பார்ப்போம்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: nagappan.k@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x