

முரட்டுக்காளை’ படத்தில் கிரா மத்தை ஒரு முக்கிய கதா பாத்திரமாக்க நினைத்தோம். அதற்காக ஒரே இடத்தில் வயல், வரப்பு, காடு, மலை, நதி ஆகியவைச் சேர்ந்த மாதிரி லொக்கேஷன் தேவைப்பட்டது. அப்போதுதான் பொள்ளாச்சியைச் சுற்றி யுள்ள பகுதியில் கிராமம் சம்பந்தப்பட்ட எல்லா காட்சிகளையும் படம்பிடிப்பதற்கு ஏற்ற இடங்கள் இருப்பதை அறிந்தோம். அங்கு போய் பார்த்தபோது 25 கி.மீ. தொலைவுக்குள்ளேயே வயல், நதி, புல்வெளி, மலை, காடு எல்லாமும் இருந் தது.
அங்கே போனதும் சமத்துவபுரம் ஜமீன்தார் குடும்பத்தார், பெரிய வானவ ராயர், சின்ன வானவராயர், அவர்களு டைய பணியாளர்கள், ஊத்துக்குளி ஜமீன் அங்குசாமி, பொள்ளாச்சி கிருபாகரன், திரையரங்க அதிபர் கோபாலகிருஷ் ணன், வேட்டைக்காரன்புதூரைச் சேர்ந்த சிவாஜியின் நண்பர் முத்துமாணிக்கம், குப்புசாமி, டிரைவர் சிவராமன் (இவர் தான் லொக்கேஷன் வழிகாட்டி) உள் ளிட்ட பல நண்பர்களும் ஏவி.எம் படத்துக் காக முழு மனதோடு உதவி செய்தார்கள்.
பொள்ளாச்சி லொக்கேஷனில் எடுக் கப்பட்ட முதல் படம் ‘முரட்டுக்காளை’. அப்போது அங்கு தங்குவதற்கு வசதி யான ஹோட்டல்கள் இல்லை. அதனால் ஜமீன்தார் வீட்டிலேயே ரஜினியை தங்க வைத்தோம். அவர்கள் சந்தோஷத்தோடு விருந்தோம்பல் செய்தார்கள். மற்ற நடிகர்களை பொள்ளாச்சியில் இருந்த இரண்டு ஹோட்டல்களில் தங்க வைத்தோம்.
நானும், கேமராமேன் பாபுவும் அரசினர் தங்கும் விடுதியில் தங்கினோம். மற்ற குழுவினர் திருமண மண்டபத்தில் தங்கினார்கள். இன்றைக்கு பொள்ளாச்சி அதிக படப்பிடிப்பு நடக்கிற ஷூட்டிங் நகரமாக மாறிவிட்டது. அன் றைக்கு இரண்டே ஹோட்டல்கள்தான். இன்றைக்கு பல பெரிய ஹோட்டல்கள். இதற்கு ஏவி.எம் எடுத்த ‘முரட்டுக்காளை’ படம்தான் காரணம்.
படத்தில் ரஜினியும் அவரது சகோதரர் களும் தனியாக வாழும் சூழலில் கதா நாயகி ரதி அவர்களிடத்தில் வந்து சேர் கிறார். ரஜினி சகோதரர்களின் அப்பாவித் தனம் அவருக்கு ரொம்ப பிடித்துப்போகி றது. சகோதரர்களுக்கும் அவரை பிடித் துப்போகிறது. மூத்த சகோதரர் ரஜினி, ரதியைப் பார்க்கும் பார்வையில் வித்தி யாசம் தெரியும். உடனே ரதி பாட, ரஜினியின் சகோதரர்கள் பின்னணியில் பணியாற்ற, ‘எந்தப் பூவிலும் வாசமுண்டு… எந்த பாட்டிலும் ராகம் உண்டு...’ என பாடல் இசைக்கும்.
அதற்காக நாங்கள் தேர்ந்தெடுத்த இடம் பசுமை நிறைந்த வயல்கள் சூழ்ந்த இடம். காற்றில் வயல்களில் இருந்த நாற்றுகள் நடனம் ஆடும். அந்த நாற்று நடனத்தை படம்பிடித்து ரதி நடனத் தோடு சேர்த்துக்கொண்டோம். அந்தப் பாடல் காட்சியில் அப்படியொரு பசுமைப் படர்ந்து கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. அந்த அழகை மேலும் அழகு படுத்தியவர் ஒளிப்பதிவாளர் பாபு.
கிராமப்புறங்களில் நடைபெறும் ரேக்ளா பந்தயத்தில் கலந்துகொண்டு ரஜினி வெற்றி பெறுகிற மாதிரி ஒரு காட்சி. அந்த ரேக்ளா பந்தயத்தைப் பற்றி விசாரித்தபோது, அந்தப் பகுதி யில் ரேக்ளா பந்தயத்துக்கே சின்ன வானவராயர் அத்தாரிட்டி என்றார்கள். வானவராயரைப் போய் சந்தித்தோம். ‘அந்தப் பொறுப்பை என்கிட்ட விட்டுடுங்க. நான் பார்த்துக்குறேன்’என்று அவர் சந்தோஷப்பட்டார். பக்கத்து கிராமங்களில் எல்லாம் ‘பொள்ளாச்சி யில் ரேக்ளா பந்தயம் நடைபெறவுள் ளது’ என்று தண்டோரா போட்டு விளம்பரம் செய்துவிட்டார். அவர் சொன்ன தேதியில் ரேக்ளா வண்டிகளும், மாடுகளும் வந்து குவிந்துவிட்டன. ரேக்ளா பந்தயத்தில் ரஜினி பங்கேற்க, அவரை துரத்திக்கொண்டு பல ரேக்ளா வண்டிகள் பின் தொடர்வதைப் பல கோணங்களில் படம்பிடித்தோம். திடீ ரென்று ஒளிப்பதிவாளர் பாபு சாருக்கு ஓர் ஐடியா.
‘‘ரேக்ளா வண்டியின் அடியில் கேமராவை கட்டி வைத்து ஷூட் செய்தால், வண்டியின் இரண்டு சக்கரங்களும் உருள்வதும் முன்னால் போகிற வண்டிகள் வேகமாக ஓடுவது மாக ஷாட் த்ரில் ஆக இருக்கும்’’ என்றார். அவர் சொன்ன மாதிரி கேமராவை ரேக்ளா வண்டியின் அடிப் பாகத்தில் கட்ட, அவுட்டோர் யூனிட்காரர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. சென்னையில் இருந்த ஏவி.எம்.சரவணன் சாரிடம் இந்த விஷயத்தைச் சொன்னோம். அவர், அவுட்டோர் யூனிட் முதலாளியிடம் பேசி ‘கேமராவுக்கு எதாவது ஆச்சுன்னா, அதுக்கு நாங்க பொறுப்பேத்துக்குறோம்’ என்று உறுதிகொடுத்து அனுமதி வாங் கிக் கொடுத்தார். ரேக்ளா வண்டியின் அடிப்பாகத்தில் கேமராவை கட்டி வைத்து ஷூட்டிங் எடுத்தோம். படத்தில் அந்த ரேக்ளா சேஸ் அவ்வளவு விறுவிறுப்பாக அமைந்திருந்தது.
‘முரட்டுக்காளை’ படத்தில் பண்ணை யார் ஜெய்சங்கருக்கும் விவசாயி ரஜினிக் கும் எப்போதும் போராட்டம்தான். ஏழைகளுக்கு ஆபத்து சமயங்களில் பணம் கொடுத்து உதவுவதைப் போல பணத்தைக் கொடுத்து, அவர்களுடைய நிலங்களை அபகரித்துவிடுவார் ஜெய் சங்கர். அதைப் போலவே ரஜினியின் நிலத்தையும் அபகரிக்க பல முயற்சி களை செய்வார். ஆனால், ஜெய்சங்கரு டைய பணக்காரத் திமிர் ரஜினியிடம் எடுபடாது.
மஞ்சு விரட்டு என்பது பழமை யான ஒரு வீர விளையாட்டு. ‘முரட்டுக் காளை’யில் ரஜினி மாட்டை வீரத்துடன் அடக்குவது போன்று காட்சி அமைத்திருந் தார் பஞ்சு அருணாசலம். மஞ்சு விரட்டு மாட்டை அடக்குகிற வீரனுக்கு பெண்ணை திருமணம் செய்துகொடுப் பது என்பது அந்த வீரத்துக்குக் கொடுக்கும் விருது. இந்த மஞ்சு விரட்டு இன்றைக்கும் அலங்காநல்லூர், பாலமேடு, வாடிவாசல், சிராவயல் போன்ற இடங்களில் நடைபெறுகிறது. அந்த ஊர்களுக்குப் போய்ப் பார்த்தோம்.
மஞ்சு விரட்டு முடிந்துவிட்டது என்றும், அடுத்த மாதம் பாகனேரியில் நடக்கும் என்றும் சொன்னார்கள். பாகனேரிக்குப் போனோம். அங்கு காங்கிரஸ் தியாகி உ.சுப்ரமணியம், திராவிட இயக்கத்தைச் சேர்ந்த திருஞானம், உ. பில்லப்பன், கிருஷ்ணவேணி தியேட் டர் தியாகராஜன் போன்றவர் களைச் சந்தித்தோம். ‘‘மஞ்சுவிரட்டை படம் எடுக்க எல்லா உதவிகளும் செய்து தருகிறோம்’’ என்றார்கள். ‘‘எங்க ஊர்ல ஏவி.எம். ஷூட்டிங் நடக்குறது எங்களுக்கு பெருமை. ரஜினி வருவது எங்க ஊருக்கே பெருமை’’ என்று மகிழ்ந்து போனார்கள். அவர்களுடைய செட்டிநாட்டு விருந்தோம்பலை இன்றைக்கும் நாங்கள் மறக்கவில்லை.
மஞ்சு விரட்டை படம் பிடிக்கத் தயாரா னோம். தாரை தப்பட்டை முழங்க கொட்டடியில் இருந்து காளைகளைத் திறந்துவிட்டார்கள். ஆக்ரோஷத்தோடு காளைகள் திடலுக்கு ஓடி வந்தன. அதனை வீரர்கள் மரித்து, அடக்குவதற் குப் போராடினார்கள். சில காளைகள் வீரர்களின் வயிற்றில் குத்த, அவர்கள் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். சில இளைஞர்களை காளைகள் பந்தாடின. இந்தக் காட்சிகளை ஒளிப்பதிவாளர் பாபு சாருடன் இணைந்து கேசவன் மற்றும் பிரசாத்தும் ஆளுக்கொரு கேமரா மூலம் படம்பிடித்தனர். எந்த நேரத்திலும், எதுவும் நடக்கலாம் என்ற சூழலில் ரஜினியை களத்தில் இறக்கினோம். சீறிப் பாயும் காளைகளோடு ரஜினியும் சீறிப் பாய்ந்தார்.
ரஜினி காளையை அடக்கினாரா? காளை ரஜினியைக் குத்தியதா?
- இன்னும் படம் பார்ப்போம்…
படங்கள் உதவி : ஞானம்