

மீண்டும் இணைந்த விஜய், ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாக்கி வரும் ‘கத்தி’ படத்தின் முதல் பார்வை மோஷன் போஸ்டர், விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 22-ம் தேதி யூடியூப் இணையத்தில் வெளியானது. ‘கத்தி’ படக் குழுவினர் உருவாக்கியுள்ள இந்த மோஷன் போஸ்டர் ஒரு அமெரிக்க விளம்பரத்தின் அப்பட்டமான காப்பி என்று ஒரு புறம் சர்ச்சை சலசலப்பைக் கிளப்பினாலும், விஜய் ரசிகர்கள் வழக்கம்போல பெரும் வரவேற்பை வாரி வழங்கியிருக்கிறார்கள். இந்த முதல் பார்வை வெளியானதிலிருந்து, கடந்த 5 நாட்களில் இதுவரை சுமார் 7 லட்சம் பேர் அதைப் பார்த்திருக்கிறார்கள். கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’ மோஷன் போஸ்டருக்குக் கிடைத்த வரவேற்புக்குச் சற்றும் குறையாமல் தற்போது விஜயின் கத்திக்கும் கிடைத்திருக்கிறது.
இதற்கிடையில் சத்தமில்லாமல் மற்றொரு காணொளி சாதனை படைத்துவருகிறது. பெரிய நடிகர், இசையமைப்பாளர், இயக்குநர் என்ற பிரம்மாண்டக் குழுவில்லாமல் ஒரு பாடல் கடந்த மூன்று நாட்களாய் வைரல் ஆகப் பரவிக்கொண்டிருக்கிறது. பாஸு பாஸு எனத் தொடங்கும் இப்பாடல் கேபிள் சங்கர் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் ‘தொட்டால் தொடரும்’ என்ற படத்தின் ப்ரொமோ பாடல். இப்பாடலை வெளியிடுவதற்கு முன் ஜி.வி. பிரகாஷ், பார்த்திபன், சி.வி. குமார், விஜய் சேதுபதி, தனஞ்செயன், மனுஷ்யபுத்திரன், சாருநிவேதிதா போன்ற திரைப் பிரபலங்களிடம் போட்டுக் காட்டி அவர்களின் கருத்துக்களையும் பெற்றிருக்கிறார்கள். க்ளாஸிக்கல் ஜாஸ் இசையில் பக்கா லோக்கல் தத்துவப் பாடலாக உருவாகியிருக்கும் இதன் வரிகளைக் கேட்ட அடுத்த நிமிஷமே முணுமுணுக்க வைத்துவிடுவது இசையமைப்பாளர் பி.சி. ஷிவன், இயக்குநர் கேபிள் சங்கர் இருவருக்கும் கிடைத்த தொடக்க வெற்றி. இதே துள்ளல் படத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்க வைத்திருக்கிறார்கள்.