சினிமா எடுத்துப் பார் 52: சண்டையில் தெரிந்த அன்பு!

சினிமா எடுத்துப் பார் 52:  சண்டையில் தெரிந்த அன்பு!
Updated on
3 min read

‘முரட்டுக்காளை’ படத்தில் ரஜினியைத் தன் காதல் வலையில் விழ வைக்க நினைத்து அவரைச் சுற்றி வரும் சுமலதாவின் காதல் விஷயம் சுருளிராஜனுக்கு தெரிந்துவிடும். ரஜினிக்கும், சுமலதாவுக் கும் திருமணம் முடிந்தால் முழு சொத்தையும் நாம் அபகரித்து விடலாம் என்று ஜெய்சங்கருக்கு சுருளி ஐடியா கொடுப்பார். சுமலதாவின் தோழிகள் ‘‘நீ ரஜினியைத் திருமணம் செய்தாலும் அவர் தனது தம்பிங்களுக்குத்தான் முதலிடம் கொடுப்பார்’’ என்பார்கள். அதற்கு சுமலதா ‘‘கல்யாணம் ஆனதும் அவர் களைப் பிரித்துவிடுவேன்’’ என்பார். தங்கைக்கு மாப்பிள்ளை கேட்டு ஜெய்சங்கர் வரும்போது ரஜினி மறுத்து விடுவதனால் இருவருக்கும் இடையே உள்ள பகை மேலும் அதிகரிக்கும். தன் கல்யாண விஷயத்தில் அண்ணன் தலையிட்டு கெடுத்துவிட்டதாக சுமலதாவும் வருத்தப்படுவார்.

மாடர்ன் வசதிகளோடு ஸ்பெஷல் எஃபெக்ட், ஆப்டிக்கல் சிஸ்டம் எல்லாம் இல்லாத காலகட்டம் அது. அப்போதெல்லாம் இதை முறையாக செய்யத் தெரிந்த ஆப்டிக்கல் கேமராமேன் பிரசாத் ஸ்டுடியோவில் பணியாற்றிய மதன் மோகன். எங்களுக்கு டெக்னிக்லாக எந்த சந்தேகம் என்றாலும் அவரிடம் கேட்டுத்தான் தீர்த்துக்கொள்வோம். அவருடைய மனைவி ரூபா மோகன். குடும்பத்துக்கு மிகவும் பக்கபலமாக இருந்தார். அவர்களுக்கு நாலு மகள்கள். ஒரு மகன். அவர்களில் ஒருவர்தான் சுமலதா. அவருக்கு ரேணுகா, ரோகிணி, கிருஷ்ணப்ரியா என்று மூன்று சகோதரிகள். ராஜேந்திர பிரசாத் என்கிற தம்பி. இவர்களில் ரோகிணியை சிறந்த புகைப்படக் கலைஞர் ‘ஸ்டில்ஸ்’ ரவி திருமணம் செய்துகொண்டார்.

‘முரட்டுக் காளை’யில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சுமலதா எங்கள் ‘ப்ரியா’ படத்தில் நடித்த அம்பரிஷை திருமணம் செய்துகொண்டார். கன்னட சினிமா உலகில் பெரிய நடிகராக வளர்ந்து, பின் அரசியலில் இறங்கி எம்.பி, மந்திரி என்று இன்றைக்கு மிக உயரத்தை அடைந்த அரசியல்வாதியின் மனைவியாக சுமலதா இருப்பது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி. அம்பரிஷ் வயலின் மேதை சவுடையாவின் பேரன் என்பது குறிப்பிட வேண்டிய செய்தி.

‘முரட்டுக்காளை’ படத்தில் ஒரு ஒத்தக் கொம்பு மாடு வரும். அதோடு சேர்ந்து நடித்தவர் சாந்தாராம். அவர் கன்னடத்தில் சிறந்த நடிகர். படத்தில் அவருக்கு சங்கிலின்னு பேரு. பார்க்கும்போதே முறைப்பாக இருப்பார். அந்த ஒத்தக் கொம்பு மாட்டையும், இவரையும் சேர்த்து பார்க்கும்போது ஏதோ தப்பு செய்யப் போகிறார் என்ற பாவனை தெரியும்.

படத்தில் கதாநாயகி ரத்தி மீது ஜெய்சங்கருக்கு ஆசை வரும். அவரிடம் தவறாக நடந்துகொள்ளும் முயற்சியிலும் இறங்குவார். ஒருவழியாக ரத்தி அவரிடம் இருந்து தப்பித்து நடந்ததை அப்பா ஜி.சீனிவாசனிடம் சொல்வார். அவருக்குக் கடுமையான கோபம் வந்து ஜெய்சங்கரோடு மோதுவார். அதன் விளைவு சீனிவாசனை அடியாள் சங்கிலி மடக்குவார். சீனிவாசனுக்கும், சங்கிலிக்கும் சண்டை. நீங்க சண்டை போட வேண்டும் என்றதும் சீனிவாசன் பயந்துவிட்டார். நாங்கள் அவருக்கு தைரியமூட்டி ‘‘உங்களால் முடியும். மாஸ்டர் சொல்லும்படி செய்யுங்கள்’’ என்றோம். அருமையாக சண்டை போட்டார். நாடகத் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். அதனால் சண்டையை முகபாவங்கள் மூலமே வெளிப்படுத்தி பேர் வாங்கினார். காட்சி சிறப்பாக அமைந்தது.

அந்த ஜி.சீனிவாசன் நான் இயக்கிய பல படங்களில் நடித்திருக்கிறார். எங்கள் குழுவின் நடன இயக்குநர் புலியூர் சரோஜாவின் கணவர். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள்.

திருமணத்தன்று நானும், என் குழுவினரும் வாழ்த்தச் சென்றோம். மணக்கோலத்தில் அமர்ந்திருந்த புலியூர் சரோஜா, எங்களைப் பார்த்ததும் வரவேற்க ஓடி வந்துவிட்டார். ‘‘என்ன புலி, நீ மணப் பொண்ணு. இப்படி வரலாமா?’’ என்றதும் ‘‘ முக்கியமான நீங்க எல்லாம் வரும்போது நான் எப்படி உட்கார்ந்திருக்க முடியும்’’ என்று கூறி எங்களை அமர வைத்துவிட்டு, மணமேடையில் போய் உட்கார்ந்தார். திருமணம் சிறப்பாக முடிந்தது. நான் இருவரிடமும் கேட்டேன். ‘‘உங்கள்ல யாரு முதல்ல காதலை சொன்னது?’’ உடனே புலி ‘‘அவர்தான் சொன்னார்’’ என்று சொல்ல, உடனே சீனிவாசன், ‘‘இவதான் என்னைச் சுற்றி சுற்றி வந்து காதலைச் சொல்லாமச் சொன்னா’’ என்றார். இருவரும் ‘‘நீ.. தான்.. நீங்கதான்’’ என்று சண்டை போட்டுக்கொண்டார்கள். இந்த சண்டையிலே அன்பு தெரிந்தது.

புலியூர் சரோஜா செட்டில் இருந்தால் அங்கே ஒரே கலகலப்பாக இருக்கும். சிரிப்போ சிரிப்பு. வாழ்க்கை முழுவதும் சிரித்துக்கொண்டிருந்தவருக்கு அப்படி ஒரு பெரிய துக்கம்! அவர்களுக்கு ஒரே பையன் சத்யா. அவனுக்கு 24 வயது இருக்கும்போது, ஒரு கார் விபத்தில் தஞ்சாவூரில் இறந்துவிட்டான். வெளியூர் ஷூட்டிங்கில் இருந்த எனக்கு தகவல் வந்து தஞ்சாவூருக்கு துக்கம் விசாரிக்க போனேன். புலி சுய நினைவே இல்லாமல் மருத்துவமனையில் ஐசியூ வார்டில் இருந்தார். டாக்டர் என்னிடம், ‘‘இன்னும் சில மணி நேரத்துல அவங்களுக்கு உணர்வு வரலைன்னா, கோமா நிலைக்குப் போய்டுவாங்க’’என்றார். அவர் பக்கத்துல போய், ‘’ புலி.. புலி.. நான் முத்துராமன் வந்திருக்கேன்’’என்று சொன்னேன். என் குரலைக் கேட்டதும் புலியின் முகத்தில் ஒரு சலனம். அதைப் பார்த்த டாக்டர், ‘‘உங்க குரலை கேட்ட பிறகுதான் இந்த அசைவே வந்திருக்கு. நீங்க பக்கத்திலேயே இருங்க. 10 நிமிஷத்துக்கு ஒரு முறை அவங்களைக் கூப்பிடுங்க’’ என்று சொன்னார்.

நானும் சரி என்று ஒப்புக்கொண்டு திரும்பத் திரும்ப ‘‘புலி.. முத்துராமன் வந்திருக்கேன்.. வந்திருக்கேன்’’ என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். அவ ரோட நினைவு கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பியது. என்னைப் பார்த்ததும், ‘‘நம்ம சத்யா போய்ட்டான் சார்’’ என்று துக்கம் பொங்க கத்தினார். இப்போ நினைச்சாலும் எனக்கு உடம்பு சிலிர்க்குது. அன்னைக்கு புலியூர் சரோஜா நினைவு திரும்புவதற்கு என்னோட குரல் பயன் பட்டது என்று நினைக்கும்போது, எந்த அளவுக்கு நாங்கள் பாசத்தோடு இருந் திருக்கிறோம் என்பது புரியும். நாங்கள் யாரும் டெக்னீஷியன்களாக மட்டும் பழக வில்லை. குடும்பமாகத்தான் பழகினோம்.

அன்று பெற்றோரோடு சிரித்துக் கொண்டிருந்த சத்யா, அந்த பெற்றோர் உருவாக்கிய பள்ளியில் இன்று சிலையாக இருக்கிறான். அவன் பெற்றோர் கல்விச் சேவையை அவனது பிறந்தநாள் வாழ்த்தாக அர்ப்பணிப்போம். இந்த மனநிலையோடு இந்த வாரத்துக்கான நினைவுகளை முடித்துக்கொள்கிறேன்...

- இன்னும் படம் பார்ப்போம்…

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in