

‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் பாலாஜி தரணிதரன். ஒரு இடைவெளிக்குப் பிறகு 'ஒரு பக்க கதை' படத்தின் மூலம் மீண்டும் வந்திருக்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து..
‘ஒரு பக்க கதை' படத்தின் டீஸரைப் பார்த்தால் ஆன்மிகம் பக்கம் போய்விட்டதுபோலத் தெரிகிறதே...
எனது முதல் படத்தைப் போலவே, இப்படத்தின் கதையும் தலைப்பில்தான் இருக்கிறது. குடும்பப் பின்னணியில் நடக்கும் கதைதான் இது. சாமானியமான மனிதர்கள் சில நேரம் அசாதாரணமான சம்பவங்கள் நடைபெறும்போது அதை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. அதை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள், புரிந்துகொள்கிறார்கள், கையாள்கிறார்கள் என்று திரைக்கதையில் சொல்லியிருக்கிறேன். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட விஷயங்களும் படத்தில் இருக்கிறது. முழுக்க அது மட்டுமே அல்ல.
எதற்காகப் புதுமுகம் காளிதாஸை நாயகனாகத் தேர்வு செய்தீர்கள்?
இது ஒரு நாயகனுக்கான கதை கிடையாது. நாயகன் ஏதோ ஒரு பிரச்சினையைச் சந்தித்திப்பார், அதை எப்படி நாயகன் முடிக்கிறார் என்பதுதான் நாயகனை மையமாகக் கொண்ட கதைகளின் அடிப்படை. இது அப்படியான கதை கிடையாது. இக்கதையை இரண்டு நாயகர்களிடம் சொன்னேன். அவர்களின் எதிர்வினையே இக்கதை பிரபல கதாநாயகர்களிடம் செல்லுபடியாகாது என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது.
‘கதை நன்றாக இருக்கிறது, நான் நடித்தால் மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லையே’எனத் தயங்கினார்கள். இப்படத்தின் கதைக்கு உண்மையிலேயே கல்லூரி செல்வது போல ஒரு பையன் வேண்டும். ஒரு விருது வழங்கும் விழாவில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் மிமிக்ரி பண்ணியதைப் பார்த்த உடனே, இவர் சரியாக இருப்பார் என நினைத்தேன். தயாரிப்பாளர்கள் சூப்பர் என்றார்கள்.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்' படத்தின் ரீமேக் படங்கள் போதிய வரவேற்பு பெறவில்லையே என்ன காரணம்?
அந்தப் படங்கள் எதையுமே நான் முழுமையாகப் பார்க்கவில்லை. யூ-டியூப் உள்ளிட்ட இணையங்களில் பார்த்தேன். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்' பட வெளியீட்டுக்கு முன்பு வியாபாரம் பேசும்போது கொஞ்சம் பாடல்கள், காதல் காட்சிகள், எப்படி நட்பு உண்டானது இதெல்லாம் சேர்த்தால் நன்றாக இருந்திருக்கும் என்றார்கள். படத்தின் நீளத்தைக் குறைக்க வேண்டும் என்றார்கள். இந்தக் கருத்துக்களை எல்லாம் நான் ஏற்கவில்லை. ஒரு கட்டம் வரைக்கும் படத்தின் நீளத்தைக் குறைத்தேன், இவை அனைத்தையுமே ரீமேக் படங்களில் பண்ணியிருந்தார்கள். எந்த ஒரு படமுமே ஓடவில்லை, ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்' படம்போலவே. 'ஒரு பக்க கதை'யும் உண்மைக் கதையா?
‘ஒரு பக்கக் கதை’ முழுக்க கற்பனைதான். இப்படி நடக்கிற விஷயம், இப்படி நடந்தால் என்னவாகும் என்று ஒரு யோசனை வரும் இல்லையா அதைத்தான் படமாகப் பண்ணியிருக்கிறேன். உதாரணத்துக்கு, சென்னையில் செவ்வாய்க்கிழமை இரவு வரைக்கும் மழை பெய்து கொண்டிருந்தது, புதன்கிழமை காலை நின்றுவிட்டது. அதையே நம்மால் தாங்க முடியவில்லை. அத்தனை நாட்கள் பெய்த மழை புதன்கிழமை முழு நாளும் பெய்திருந்தால் நம்முடைய நிலைமை என்னவாகி இருக்கும்?
தமிழில் நல்ல சிறுகதைகள் இருக்கின்றன. அதையெல்லாம் ஏன் நீங்கள் படமாக பண்ணக் கூடாது?
‘அகம் புறம்' என்ற தகழி சிவசங்கரன் பிள்ளை கதை ஒன்றைத் தமிழில் படித்தேன். புதிதாகக் கல்யாணம் ஆன இருவரின் கடந்த கால வாழ்க்கை என்ன, இப்போது அவர்கள் மனதிற்குள் என்னவெல்லாம் ஓடுகிறது என்பதுதான் கதை. ரொம்ப அற்புதமான, உணர்வுபூர்வமான கதை. உண்மையை உண்மையாகச் சொல்கிற படமாக இருக்கும். அதைப் படமாகப் பண்ண வேண்டும் என்பது என் ஆசை. அதற்கு ஒரு கதாசிரியராகவும், இயக்குநராகவும் ஒரு பக்குவம் தேவைப்படுகிறது. ஆனால், அது ஒரு ஜனரஞ்சகமான படமாக இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை.
ஒரே மாதிரியான களத்திலேயே படங்கள் வருகின்றனவே...
குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டாமல் வேறு வேறு களத்தில் கதை பண்ண வேண்டும் என்பதுதான் என் ஆசை. இன்னும்கூட தமிழில் வித்தியாசமான களங்களில் படம் வரும். ஆனால், யாராவது ஒரு புதிய களத்தில் படம் பண்ணி, அப்படி மூன்று படங்கள் வெற்றியடைந்தால் போதும். உடனே அக்களத்தில் படம் பண்ண முதலீட்டாளர்கள் வருவார்கள். இங்கு சினிமாவுக்கு தேவை முதலீட்டாளர்கள்தான்.
நீங்கள், கார்த்திக் சுப்புராஜ் எல்லாம் ஜெயித்தீர்கள். இப்போது ஒரு பெரும் கூட்டமே உங்கள் வழியில் முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களுக்கு என்ன சொல்கிறீர்கள்?
நான் உதவி இயக்குநராக இல்லாமல்தான் நேரடியாகப் படம் பண்ணினேன். உதவி இயக்குநராக இல்லையென்றாலும் படப்பிடிப்பில் என்ன நடக்கும் என்பதை நான் தெரிந்து வைத்திருந்தேன். எதுவுமே தெரியாமல் வந்து படம் பண்ணினால் கஷ்டப்பட வேண்டியதிருக்கும். எது பண்ணினாலும் உண்மையாக, முழு உழைப்பையும் போட்டு பண்ண வேண்டும். அதுதான் முக்கியம். அதற்குப் பயிற்சி இருந்தால்தான் நல்லது.
- பாலாஜி
ஒரு குறும்படம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறீர்களா?
எந்தவொரு படமாக இருந்தாலும் பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தலாம். பெரிய அளவுக்கு மாற்றம் ஏற்படுமா என்று எனக்குத் தெரியவில்லை. அப்படி மாற்றங்கள் நிகழ்ந்திருந்தால் பயங்கரமான மாற்றங்கள் நிறைய நிகழ்ந்திருக்க வேண்டுமே. சின்னச் சின்ன மாற்றங்கள் நிகழலாம். கலை, இலக்கியம் என்பது சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்தப் பொறுப்போடு படம் பண்ண வேண்டும் என்பது என் அபிப்ராயம்.