

பெண்களின் கண்களும் பார்வையும் ஒன்றல்ல. நெருங்கிய தொடர்பு டைய ஒரு அம்சத்தின் இரண்டு வெவ்வேறான அங்கங்கள் அவை. ஒரு பூச்செடியும் அதில் இருக்கும் அழகிய மலரும் போல உள்ள இந்த நுண்ணிய வேறு பாடு தமிழ்த் திரைப்பாடல்களைவிடத் துல்லியமாக இந்தித் திரைப் பாடல்களில் வெளிப்படுவதற்குச் சில முக்கிய வரலாற்றுப் பின்னணி உள்ளது.
தமிழ்த் திரைப்படக் கதாநாயகிகளின் மூலப் படிவங்களான தமிழ் இலக்கியப் பெண்கள் போலன்றி இந்தித் திரைப்பட நாயகிகளின் கலாச்சார முன்மாதிரிகள் முகலாயர், பாரசீக அரசவை மாதர்களாகவே இருந்தனர். இவர்கள் அழகைப் புகழ்ந்து கவிதை பாடிய உருதுக் கவிஞர்கள் வழி வந்த இந்தித் திரைப்படப் பாடலாசிரியர்களும் பர்தா என்ற முகமூடி அணிந்த பெண்களின் முகத்தில் வெளியே தெரியும் கண்களைப் பற்றி மிகச் சிறந்த பல இந்திப் பாடல்களை இயற்றியிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட அமரத்துவப் பாடல் ஒன்றை யும் அதற்கு இணையான கவிதை ஆழம் மிக்க, ஆனால் அதிகம் பேருக்குத் தெரிந்திராத ஒரு தமிழ்ப் பாடலையும் காண்போம்.
முதலில் இந்திப் பாட்டு. சுனில் தத், ஆஷா பாரே நடித்து, மதன்மோகன் இசையில் மஜ்ரூர் சுல்தான்பூரி எழுதியுள்ள இந்தப் பாடலைப் பாடியவர் முகமது ரஃபி. 1969-ம் ஆண்டின் சிராக் (விளக்கு) என்ற படத்தின் அந்தப் பாட்டு:
தேரி ஆங்கோன் கே சிவா, துனியா மே ரக்கா கியா ஹை
யே உட்டே சுஃபஹா சலே, யே ஜுக்கே ஷாம் டலே
மேரா ஜீனா, மேரா மர்னா
இன்ஹீ பலகோன் கே தலே
பல்கோன் கீ கலியோ மே, ஃபஹாரோன் கே ஹஸ்தே ஹுவே
ஹான், மேரே காபோ கே கியா-கியா நஜர் ஃப்ஸ்தேஹுவே
யே உட்டே
இதன் பொருள்.
உன்னுடைய கண்களைத் தவிர்த்து உலகில் என்ன உள்ளது?
இவை உயரும்போது காலை எழுகிறது
இவை தாழும்போது மாலை சாய்கிறது
என் வாழ்வும் என் சாவும்
இவற்றில் (எழும் அல்லது தாழும்) பொழுதில் அடக்கம்
வசந்தத்தின் சிரிப்பு தவழும் வனப்பின் அந்தத் தருணத்தில்,
ஆம், என் கனவுகளின் எந்தப் பார்வை (அதில்) இனைந்திருக்கும்
(இவை உயரும்போது)
இவற்றில் என் வருங்காலத்தின் ஓவியமுள்ளது
விருப்பமான இந்த இமைகளின் மேல் என் தலைவிதி எழுதப்பட்டுள்ளது.
உன்னுடைய கண்களைத் தவிர்த்து உலகில் என்ன உள்ளது.
முற்றிலும் மறக்கப்பட்டுவிட்ட தமிழ் வித்தகர் தெள்ளூர் தர்மராசன் கவி வரியிலும் தமிழ் அறிஞர் மா.ரா என்ற மா. ராமநாதன் இயக்கத்திலும் அமைந்த, 1965-ல் வெளிவந்த, ரவிச்சந்திரன், மாலதி, கே.ஆர் விஜயா நடித்துள்ள கல்யாண மண்டபம் என்ற படத்தின் பாட்டு இனி.
பூத்திருக்கும் விழியெடுத்து
மாலை தொடுக்கவா
புன்னகையில் செண்டமைத்து
கையில் கொடுக்கவா
மாங்கனியின் தீஞ்சுவையை
இதழிரண்டில் தரலாமா
மாதுளையைப் பிளந்தெடுத்தே
காதலை அளந்து தரலாமா.
தேமதுர செவியினிலே
மணியாய் ஒலிக்கவா
செம்பவள நாவினிலே
தேனாய்க் குளிக்கவா
தேமதுரச் செவியினிலே
மணியாய் ஒலிக்கவா
பனிக்குளிரின் மொழியினிலே
படையெடுத்தாய் தளிர்க்கொடியே
அமுத இசை மயக்குதடி.
அருவியில் இன்பம் சுரக்குதடி.
ஆசைமுகம் அருகிருந்தால்
ஆவல் தணியுமா
அன்பு வெள்ளம் கரை கடந்தால்.
இன்பம் குறையுமா
இந்த இரு பாடல்களுக்குள் உணர்வு ஒற்றுமை அதிகம் வெளிப்படாவிடினும் இப்பாடலுக்கு இந்திப் பாடலுடன் ஒப்பிடப்படக்கூடிய கவித்திறம் மட்டுமின்றி முகமது ரஃபியின் மென்மையான குரலை இந்தக் காட்சியில் முழுவதுமாகப் பிரதிபலிக்கும் பி.பி. னிவாஸ் முத்திரையும் உள்ளது.
தற்பொழுது முழு ஆவணங்கள் கிடைக்காத இப்படத்தின் கதாநாயகி எம்.எஸ் மாலதி, தமிழக செய்திப் பத்திரிகைகளின் முன்னோடியும் ஜாம்பவானுமான சிவந்தி ஆதித்தனின் இரண்டாவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
படம் உதவி: ஞானம்