

“ஒன்னுவிடாம எல்லாப் பொருட்களும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துடுச்சுன்னு சொல்லுவாங்க. அதை ஆர்ட் டைரக்டரே சொன்னாலும் கண்ணாலப் பார்த்தா மட்டுமே நம்பணும். இயக்குநருக்கு உதவியாளரா இருக்குறதைக் காட்டிலும் ஸ்கிரிப்ட்டுக்கு உதவியா இருக்குற பாணியை நான் பின்பற்றியதால் தான் ரெண்டாவது படத்துலயே அசோசியேட் ஆக முடிஞ்சது “ - படபடவெனப் பேசத் தொடங்கினார் ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா - 3’ படத்தில் அவருக்கு உதவியாளராகப் பணிபுரிந்துள்ள விவேகா ராஜகோபால். கீழத் தஞ்சையின் மன்னார்குடியிலிருந்து கோலிவுட்டில் துளிர்த்து வளர்ந்து கொண்டிருக்கும் துறுதுறுப்பான பெண்.
அதன்பிறகு கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா நடித்து முடித்துள்ள ‘சூர்ப்பனகை’, இப்போது கின்ஸ்லின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ படப்பிடிப்பில் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தார்.
“ ‘காஞ்சனா - 3’ படத்துல ரோஸி கேரக்டர் லாரன்ஸ் சார் உடம்புல புகுந்துடும். அப்போ ஆண் குரல் வராம, பெண் குரல் வந்தா நல்லா இருக்கும்னு சொன்னேன். சரின்னு என் ஐடியாவை ஏத்துக்கிட்டு பாராட்டினார். படத்துல பெண் குரல்தான் வந்தது. அது நல்லா வொர்க் அவுட் ஆச்சு” என்கிற விவேகாவின் குரலில் பெருமிதம் தெரிந்தது. படப்பிடிப்பில், சரிசெய்ய முடியாத தவறு ஏதும் செய்ததுண்டா எனக் கேட்டதும் ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.
“லாரன்ஸ் சார் மூக்குல ரெட் கலர்ல ஒரு மார்க் இருக்கணும். அது இல்லாம 10 ஷாட் எடுத்துட்டோம். அப்புறம்தான் அந்த மார்க் இல்லைங்கிறதைப் பார்த்தேன். கன்டினியூட்டிபடி மார்க் இருந்தே ஆகணும். எனக்கு முதல் படம். எப்படி அவர் கிட்ட தப்பு நடந்துச்சுன்னு சொல்ல முடியும். யாராவது சொல்வாங்கன்னு பார்த்தேன். யாரும் சொல்ல முன்வரலை. பயத்தை உள்ளே வெச்சுக்கிட்டு நானே நிதானமா சொன்னேன். கோ டைரக்டர் உட்பட எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தார். என் நெஞ்சு திக் திக்குன்னு அடிச்சது.
‘கிராஃபிக்ஸ்ல பார்த்துக்கலாம்’னு லாரன்ஸ் சார் சொன்னபிறகுதான் எனக்கு உயிரே வந்தது. ‘தப்பு பண்றது இயல்புதான். இனிமே கவனமா இரு’ன்னு சொன்னார். ரொம்பப் பதறிட்டேன்” என்று சொல்லி முடித்தார்.
பெண் உதவி இயக்குநரை, கதாநாயகிகள் அணுகும் விதம் எப்படியிருக்கிறது என்று கேட்டதற்கும் ஒரு சம்பவத்தைச் சொன்னார்.
“ ‘சூர்ப்பனகை’ படத்து அனுபவம். அந்தப் படத்தோட ஹீரோயின் ரெஜினா மேடம் பெர்ஃபெக் ஷன் பாக்குறதுல கில்லி. ‘சூர்ப்பனகை’ல டபுள் ரோல். சவாலான நேரத்துலயும் கன்டினியூட்டியில எங்களுக்குள்ள ஒரு போட்டியே நடக்கும். சின்னதா முடி சார்ந்த விஷயமா இருந்தாலும்கூட என்னைவிட கவனமா இருப்பாங்க. என்னைத் தோற்கடிக்கணும்னு குறியா இருப்பாங்க. தமிழ், தெலுங்கு இரு மொழிப் படம்கிறதால காஸ்டியூம் சில சமயம் மாறும்.
வசனம் மொத்தமா மாறும். சேறு, மழை, வெயில் எல்லாத்துலயும் கன்டினியூட்டி, காஸ்டியூம், ஆக் ஷன்னு எல்லா பக்கமும் கத்துக்க முடிஞ்சது.” என்கிற விவேகாவால், ஒரு பெண்ணுக்குரியப் பிரச்சினைகளைக் கடக்க முடிந்ததா? “ஒரு பொண்ணுங்கிறதால எந்த விதத்துலயும் திட்டு வாங்கக் கூடாதுன்னு ஓட ஆரம்பிச்சேன். வெளிப்புறப் படப்பிடிப்பா இருந்தால் இயற்கை உபாதைகள், மாதாந்திரப் பிரச்சினைகள் என எதுவாக இருந்தாலும் அந்த அவஸ்தைகளைத் தாண்டி நிக்காம ஓடிக்கிட்டே இருக்க பழகினேன்.
அதுதான் ’ இவகிட்ட எந்த வேலையைக் கொடுத்தாலும் சரியா செய்து முடிப்பா’ன்னு மத்தவங்களை நம்ப வெச்சிருக்கு. அந்த நம்பிக்கையோட அடையாளம்தான் இதோ என் முகத்துல தெரியுற என்னோட தன்னம்பிக்கை. இனி, நான் பேச வேண்டியதில்ல. அந்தத் தன்னம்பிக்கையிலேர்ந்து பிறந்த என்னோட திரைக்கதைகள் பேசும். இதோ ரெண்டு படங்களுக்கான ஸ்கிரிப்ட் ரெடி. ஹாரர், ரொமான்ஸ் ஜானர்ல என்னோட பயணத்தை தொடங்க விரும்புறேன்” என்று உதவி இயக்குநருக்குரிய எந்தப் புகார்களும் இல்லாமல் முடிக்கிறார் விவேகா.