

“எம்.ஏ. ஆங்கில இலக்கியம் ரிசல்ட் வந்து இரண்டு வாரம்தான் ஆச்சு. ரெகுலர் காலேஜுக்கு இடையில நடிப்பைத் தொடர்வது திரில்லான விஷயம்தான். காலேஜ், ஷூட்டிங்னு மாறி மாறி நகர்ந்த கால்கள் இனி படப்பிடிப்புக்கு மட்டும்தான் செல்லும். முழு நேர நடிகையாக ஃபுரோமோஷன் கிடைச்சிருக்கும் இந்த நேரத்துல இன்னும் எக்ஸ்ட்ரா எனர்ஜியோடு கதைகளைக் கேட்டுட்டுவர்றேன்” என்கிறார், மியா ஜார்ஜ். தமிழில் அவரது அறிமுகப்படம் படுதோல்வி என்றாலும் ‘வெற்றிவேல்’, ‘ஒருநாள் கூத்து’, ‘எமன்’, ‘ரம்’ என்று படு மிடுக்காகத் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். அவரிடம் பேசியதிலிருந்து...
பள்ளிப்படிப்பை முடித்ததும் மலையாளத்தில் முகம் காட்டத் தொடங்கிய நீங்கள். தமிழுக்கு வர ஏன் தாமதம்?
தமிழ் பேசக் கத்துக்காம இருந்ததுதான் முதல் காரணம். தமிழ் சினிமா மாதிரி பெரிய இண்டஸ்ட்ரிக்குள்ள வரும்போது தமிழைப் புரிஞ்சிக்கிற அளவுக்காவது பேச தெரிஞ்சிக் கிட்டாத்தான் சரியா இருக்கும். அதோட தொடர்ந்து மலையாள சினிமாவில் கவனம் செலுத்திக் கிட்டிருந்ததால அப்போ எல்லாம் யாரும் இங்கே பெரிதா பழக்கமும் இல்லை. ‘அமர காவியம்’ படத்தோட வாய்ப்பு வந்தப்போ ஆரம்பத்தில் கொஞ்சம் யோசித்தேன். ஆனா, ஜீவா சங்கர் கதை சொன்னப்போ இந்தப் படத்தை மிஸ் பண்ணக் கூடாதுன்னு மனசு சொன்னது. நல்ல படம். ஆனா ஏன் பிளாப் ஆச்சுன்னு புரிஞ்சுக்க முடியல. இன்னைக்கு தமிழும் நல்லாவே பேசக் கற்றுக்கொண்டேன்.
முதல் படம் தோல்வி என்றால் அடுத்தடுத்த பேட்டிகளில் அதைப் பற்றிப் பேசவே மாட்டார்கள். நீங்கள் அதுபற்றி பேசி ஆச்சரியப்படுத்துகிறீர்களே?
பொதுவாக கேரக்டர் பிடித்திருந்தால் அந்தக் கதையை மிஸ் பண்ணக் கூடாது என்பதுதான் என் திட்டம். ஹீரோவுக்கு இணையான நல்ல ரோல். நல்ல படத்தில் நம்மோட பங்களிப்பும் இருக்க வேண்டும்னுதான் அதில் நடித்தேன். படம் ஓடுச்சா என்ற விஷயத்துக்குள் போகாமல் நல்ல விஷயத்துல நாமும் இருந்தோம் என்ற சந்தோஷம் இருக்கு. அந்தப் படத்துக்கு எனக்குச் சில விருதுகளும் கிடைத்தன. ‘அமர காவியம்’ மாதிரியான ஒரு படத்தோட அறிமுகத்தாலத்தான் இன்னைக்கு வரிசையா நல்ல நல்ல கதைகள் தேடி வருகின்றன. அதனால என்னோட கேரியரில் ரொம்பவும் ஸ்பெஷலான படம் அது. ..
அதனாலதான் ஜீவா சங்கர் இயக்கத்தில் மறுபடியும் நடிக்க ஒத்துக்கிட்டீங்களா?
கண்டிப்பா. ஜீவா சங்கர் இயக்கத்துல விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக நடிக்கிறேன். படத்துக்குத் தலைப்பு ‘எமன்’. என்ன இப்படியொரு தலைப்பு… ‘பக்’குன்னு இருக்குன்னாங்க. கதைக்கு இந்தத் தலைப்பைவிடப் பொருத்தமா வேற எதுவும் இருக்காது. 40 சதவீத படப்பிடிப்பு முடிந்திருக்கு. ‘அமர காவியம்’ படம் நடித்தப்போ எனக்குத் தமிழ் தெரியாது. வசனம் முழுக்க மலையாளத்தில் எழுதி நடித்தேன்.
இப்போ ‘எமன்’ படத்தோட கதையை ஜீவா போன்லதான் சொன்னார். எனக்கு படத்துல நிறைய இம்பார்ட்டன்ஸ் இருக்கு. அரசியல் பின்னணிக் கதை. படத்தில் நிறைய கேரக்டர்கள் உண்டு. ஒரு சீன்ல இருந்து மற்றொரு சீனுக்கு கனெக்ஷன் இருக்கும். ஒரு சீன் மிஸ் ஆனாலும் லிங்க் போய்டும். அப்படித் திரைக்கதை அமைத்திருக்கார். முதன்முறையாக விஜய் ஆன்டனி கூட்டணி வேற. ஓ.கே.ன்னு ஷூட்டிங் கிளம்பிட்டேன்.
கிராமப் பின்னணி, கமர்ஷியல் களம் என்று சசிகுமார் அசத்துவார். ‘வெற்றிவேல்’ படத்தில் அவருக்கு ஜோடியா நடித்த அனுபவம் எப்படி?
திறமையான இயக்குநர். சசி சாரோட படங்களுக்கு என்னோட அம்மா மிகப் பெரிய ரசிகை. இந்தப் படத்தோட இயக்குநர் வசந்தமணி, கேமராமேன் கதிர், சசிகுமார்ன்னு நல்ல கிரியேட்டர்ஸ் இணைந்து ‘வெற்றிவேல்’ படத்தை உருவாக்கியிருக்காங்க. ஒரு சீன் நல்லா வரணும்னு மூணு பேரும் நிதானமா ஆலோசித்து முடிவு பண்ணுவாங்க. தஞ்சாவூர் பின்னணியில் கதை நகரும். காதல், ரிலேஷன்ஷிப்னு குடும்பப் பின்னணிதான் களம். ஆனா செம மசாலா.
மியாவுக்கு பேஷன் வீக், மாடலிங், விளம்பரப் படங்களில் நடிப்பதெல்லாம் பிடிக்காதா?
அப்படியில்லையே. கேரள ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் சமீபத்தில்கூடக் கலந்துகொண்டேன். மாடலிங், விளம்பரப் படங்கள் எல்லாம் வேலை பார்ப்பது ஈஸி. படம்ன்னு இறங்கும்போது அங்கே புதுமையாக, ஃபேஷனாக நிறைய விஷயங்கள் இருக்கும். அதனால்தான் முதல்ல நடிப்புக்கு டிக் அடிச்சேன். அதுக்கு அப்புறம்தான் இதெல்லாம்.
தமிழுக்கு வந்ததும் மலையாளத்தில் படங்கள் குறைந்துவிட்டது மாதிரி தெரிகிறதே?
இல்லை. அங்கே கடந்த மூணு வருஷத்துல மூணு படம் நடித்தேன். அத்தனையுமே ஹிட். ‘அனார்கலி’ 125 நாட்கள். அடுத்து ‘பாவாடா’ 80 நாட்கள் கடந்து திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்து இப்போ ‘ஹலோ நமஸ்தே’ திரைப்படம் 50 நாட்கள் நெருங்கிட்டிருக்கே. என்னை அங்க ராசியான பொண்ணுன்னு சொல்றாங்க. இங்கயும் அதேபேர் எனக்குக் கிடைக்கனும்ன்னு ஆசைப்படுகிறேன். தமிழ், மலையாளம் இரண்டு படங்கள்லயும் மாறி மாறி நடிச்சு அசத்துவேன்.