

அலுவலகத்துக்கு அருகே எங்கே படப்பிடிப்பு நடந்தாலும் மதிய உணவு இடைவேளை நேரத்தில் நிச்சயமாக அலுவலகத்துக்கு வருகை தருவார் விவேக். எத்தனை முறை அலுவலகத்துக்கு வந்தாலும் ஒருமுறைகூட இந்தப் படம் பற்றி எழுதுங்கள், அந்தக் கதாபாத்திரம் பற்றி எழுதுங்கள் என்று சொன்னதே இல்லை.
அவரைப் பேட்டி எடுக்கச் செல்லும்போது என்ன தலைப்பு வைக்கலாம் என்ன லீட் கொடுக்கலாம் என்ற யோசனையோடே செல்வோம். ஆனால், விவேக்கைச் சந்திக்கும் போது அதற்கெல்லாம் தேவையே இருக்காது. தலைப்பு தயாராக இருக்கும். லீட் தயாராக இருக்கும். அவ்வளவு ஏன், பேட்டி பத்திரிகையின் எந்தப் பக்கங்களில் வர வேண்டும் என்பதற்கான லே அவுட்கூட யோசனை செய்து வைத்திருப்பார்.
தீபாவளி மலருக்கு மூத்த நகைச்சுவை நடிகர்களைப் பற்றிய விமர்சனக் கண்ணோட்டத்துடன் ஒரு கட்டுரை எழுதும் ஐடியாவுடன் அவரைச் சந்தித்தபோது காரில் புறப்படத் தயாராக இருந்தார். எங்கேயாவது காரில் போய்க்கொண்டே பேசப் போகிறோமா என்றபோது, சீனியர் காமடியன்களைப் பற்றி யோசிப்பதே எவ்வளவு பெரிய பயணம்; அந்த நீண்ட பயணத்தை எப்படி அறைக்குள் உட்கார்ந்து பேசமுடியும் என்று சொல்லிக்கொண்டே காரில் ஏறினார். கார் சேத்துப்பட்டு பாலத்தின் கீழே ரயில்வே டிராக்கை ஒட்டிய சின்ன ரோட்டில் சென்று ஓரிடத்தில் நின்றது.
“இந்த ரயில் பதையில் அமர்ந்திருப்பது போல படம் எடுத்துக்கொள்ளலாமா?” என்றார். புகைப்படக்காரருக்குச் சந்தோஷம். “பயணம் பத்திப் பேசறதுக்குச் சரியான விஷுவல்தான் சார்” என்றபடி சந்தோஷமாக க்ளிக்கினார்.
அவர் எழுதும் கட்டுரைகளுக்குச் சூட்டும் தலைப்புகளும் சுவாரஸ்யமாக இருக்கும்!
காலில் அடிபட்டு Knee cap போட்டிருந்தது பற்றி அவர் கொடுத்த தலைப்பு: முட்டிக்கு ஜட்டி விவேக்குடன் ஒரு நாளைச் செலவிட வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒரு வாசகரை அவருடன் ஒரு நாள் இருக்க வைத்து அதைக் கட்டுரையாக்கியபோது அந்த வாசகருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் நவரசம் கலந்ததாக இருந்தன. அதை அப்படித் திட்டமிட்டிருந்தார் விவேக். அந்த ஒரு வாசகருக்கு மட்டும் சுவாரஸ்யம் தரக்கூடிய அனுபவமாக அது இல்லாமல் எல்லோருக்கும் ஏற்றதாக அது அமைந்தது. விவேக் வழக்கமாகச் செல்லும் டீக்கடை, அவர் புதிதாக வாங்கிய பைஜாரோ கார், அவர் புதிதாக நடிக்கவிருந்த குளிர்பான விளம்பர ஒப்பந்தம் என்று புதிய தகவல்கள் இருந்தன. கூடவே ஒரு ரசிகருக்கு எமோஷனலாக இருக்கக்கூடிய வகையில் பல விஷயங்கள் அந்த நாளில் அமைந்தன. அதையெல்லாம் தாண்டி விவேக்குக்கு ஒரு எமோஷனலான தருணம் அமைந்தது. எல்லா நிகழ்வுகளும் முடிந்து இரவு உணவுக்காக அந்த வாசகரை ஓட்டலுக்கு அழைத்துச் சென்றபோது விவேக் தன் குடும்பத்தோடு வந்திருந்தார். ஒரு ரசிகரின் பரவசத்தை அவர் குடும்பத்தினருக்கு உணரச் செய்தார். நம்ம எதுக்காக ராத்திரி பகல்னு ஓடுறோம்னு குடும்பம் தெரிஞ்சுக்கணும்ல என்று அவர் சொன்னபோது அந்த நியாயத்தை உணரமுடிந்தது.
இத்தனை நெருக்கமாக இருந் தாலும் தன்னைப் பற்றி வரும் செய்திகளில் ஏதாவது தவறு நேர்ந்து விட்டால் தன் தரப்பு நியாயத்தைப் புரியவைப்பதற்காகத் தெளிவாக விவாதிக்கவும் செய்வார்.
“என் பெயர் தாங்கி ஒரு விஷயம் வரும்போது அதில் எனக்கான பொறுப்பு அதிகமாகவே இருக்கிறது. என்ன பெரிய விஷயம்… காமெடியன்தானே என்று சிலர் பேசும்போது வருத்தமாக இருக்கிறது. அவர்களுக்குப் புரிவதில்லை… காமெடி இஸ் எ வெரி சீரியஸ் பிஸினஸ் என்று!” என்பார்.
தொடர்புக்கு: cmbabu2000@gmail.com