

நம்மூர் ஹீரோயின்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் இடையில் பூர்வஜென்ம கெமிஸ்ட்ரி இருக்கக்கூடும். காரணம் உள்நாட்டு விளையாட்டு வீரர், வெளிநாட்டு விளையாட்டு வீரர் என்ற பாகுபாடு இல்லாமல், சந்தர்ப்பம் அமையும்போதெல்லாம் நமது கதாநாயகிகளுக்குக் காதல் கணக்கு சொல்லித்தருவதில் கில்லாடிகளாகப் பலரும் வலம் வருகிறார்கள். கடைசியாக ஆரம்பம் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாகத் தலைகாட்டிய தப்ஸி, தெலுங்குத் திரையுலகின் ஓவர் டோஸ் கவர்ச்சிக் கன்னி.
தற்போது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிவரும் ‘வை ராஜா வை’ படத்தில் ஒரு கதாபாத்திரத்திலும் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் ‘முனி’ மூன்றாம் பாகத்தில் அவரது ஜோடியாகவும் நடித்துவருகிறார். தனது தமிழ்ப்பட கமிட்மெண்டுகளுக்காக தப்ஸி கடந்த மாதத்தின் தொடக்கத்தில் சென்னை வந்திருந்தாராம். அதே நாளில் சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் புதிதாக உருவாகியிருக்கும் ஏழு நட்சத்திர விடுதியில் டென்மார்க்கின் பிரபல பேட்மின்டன் வீரர் மத்தியாஸ் தங்கியிருந்ததாகக் காதைக் கடிக்கிறார்கள்.
தப்ஸிக்கும் மத்தியாஸுக்கும் இடையில் என்ன என்கிறீர்களா? அது கடந்த ஆண்டு ஆரம்பித்த நட்பு; தற்போது உப்பு, புளி, மிளகாய் எல்லாம் கலந்த மசாலா காதலாக மணக்கிறது என்கிறார்கள்.
கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடந்த ஓபன் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் வென்று காட்டினார் மத்தியாஸ். மனதுக்கு நெருக்கமான தோழி அருகிலிருந்து விசிலடித்துக் கை தட்டினால் வெற்றியை யார்தான் தவறவிடுவார்? தப்ஸியின் கடைக்கண் பார்வைக்காகவே , இங்குள்ள தனியார் விளையாட்டு அமைப்புகள் நடத்தும் பேட்மிட்டன் போட்டிகளில் ஆட ஆர்வமாக இந்தியா வந்துவிடுவாராம் மத்தியாஸ். ஆனால் கடந்த ஆண்டின் இறுதியில் ஊடகங்கள் கிளப்பிய பரபரப்புக்குப் பிறகு கொஞ்சம் அடக்கி வாசித்தாராம்.
ஆனால் காதல்தான் இதயத்தில் உருவமில்லாமல் உருளும் பந்தாயிற்றே! தப்ஸி நடித்துவரும் ‘ரன்னிங் ஷாதி டாட் காம்’ இந்திப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தளத்துக்கே வந்துவிட்டாராம் மத்தியாஸ். அதன் தொடர்ச்சியாகவே சென்னைக்கும் விஜயம் செய்தார் என்கிறார்கள். மத்தியாஸ் தனது டுவிட்டர் தளத்தில் தப்ஸியைத் தனது கேர்ள் பிரெண்ட் என்று டிக்ளேர் செய்து விட்டாலும், தப்ஸி இன்னும் பிடிகொடுக்காமல் நழுவுகிறார். மேலே பறக்கும் பந்து தரைக்கு வராமலா போகும்?