ஹவ் டு ட்ரைன் யுவர் ட்ராகன் 2: டிராகன்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை

ஹவ் டு ட்ரைன் யுவர் ட்ராகன் 2: டிராகன்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை
Updated on
1 min read

2010ல் வெளிவந்து சூப்பர் ஹிட்டான அனிமேஷன் திரைப்படங்களில் ‘ஹவ் டு ட்ரைன் யுவர் ட்ராகன்’ (How to train your Dragon) படமும் ஒன்று. அதன் இரண்டாம் பாகமான ‘ஹவ் டு ட்ரைன் யுவர் ட்ராகன் 2’ ஜூன் 13-ம் தேதி 3டியில் வெளிவர இருக்கிறது. க்ரெசிடா கோவெல் புத்தக வரிசையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தை டீன் டிப்ளோவா இயக்கியிருக்கிறார். ட்ரீம் வர்க்ஸ் அனிமேஷன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் இந்தப்படத்திற்கு தொடர்ச்சியாக மூன்றாவது பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

ஹவ் டு ட்ரைன் யுவர் ட்ராகன் படத்தின் தொடர்ச்சியாகக் கதை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்குகிறது. பெர்க் தீவில் பல ஆண்டுகள் நீடித்த போருக்குப்பிறகு, மனிதர்களும் ட்ராகன்களும் வைக்கிங் கிராமத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். படத்தின் ஹீரோ ஹைக்கப் (ஜே பருச்செல்), ஹீரோயின் ஆஸ்ட்ரிட் (அமெரிக்கா ஃபெரெரா) இருவரிடமும் கிராமத்தின் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று ஹைக்கப்பின் தந்தை ஸ்டோய்க்கிடம் (ஜெரார்ட் பட்லர்) விரும்புகிறார். ஆனால் ஹைக்கப்பிற்கு தனது ட்ராகன் டூத்லெசுடன் உலகை சுற்றி வருவதில்தான் ஆர்வம். அப்படியொரு பயணம்தான் ஹைக்கப்பிற்குத் திருப்புமுனையாக அமைகிறது.

ட்ராகன்களைப் பிடித்து அவற்றை முரட்டுத்தனமாக மாற்றும் எரட் (கிட் ஹாரிங்டன்) என்பவன், வில்லன் ட்ராகோ ப்ளுட்விஸ்டுக்காக (டிஜ்மோன்) ஒரு ட்ராகன் படையை உருவாக்கி வருகிறான் என்பதை அந்த பயணத்தின்போது ஹைக்கப், கண்டுபிடிக்கிறான். படத்தின் மற்றொரு திருப்புமுனையாக ஹைக்கப் இறந்துபோன தன் தாய் வால்காவையும் (கேட் ப்ளாச்செட்) சந்திக்கிறான். புதிதாக உருவாகியிருக்கும் எதிரிகளை ஹைக்கப்பும் டூத்லெசும் சமாளித்து எப்படி கிராமத்தில் அமைதியை நிலைநாட்டுகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

இந்தப் படத்தின் சுவையே டிராகன்களும் மனிதர்களும் ஒன்றாக வாழமுடியுமா என்ற பிரமாண்ட கற்பனையில் உருவான திரைக்கதையிலும் அதைக் காட்சிகளில் சாத்தியப்படுத்திய ட்ரீம் வர்க்ஸ் அனிமேஷன் நிறுவனத்தின் அபாரமான உழைப்பிலும்தான் அடங்கியிருக்கிறது.

2014 கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ‘ஹவ் டு ட்ரைன் யுவர் ட்ராகன் 3’ ஜூன் 17, 2016ல் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்களும் இந்த அற்புத அனுபவத்துக்குத் தயாராகுங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in