மும்பை மசாலா: சோனாக் ஷியின் கின்னஸ் சாதனை!

மும்பை மசாலா: சோனாக் ஷியின் கின்னஸ் சாதனை!
Updated on
1 min read

பரபரப்புத் தொடர்

பாலிவுட்டில் ‘மேரி ஆவாஸ் ஹி பெஹ்சான் ஹெ' என்ற புதிய தொலைக்காட்சித் தொடரால் ஒரே பரபரப்பு. இசைக் குயில்கள் லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே இருவரின் வாழ்க்கையை இந்தத் தொடர் பிரதிபலிக்கிறது என்று பாலிவுட் ரசிகர்கள் டி.வி. பெட்டி முன் உட்கார்ந்திருக்கிறார்களாம்.

பாடகிகளாக ஜெயித்த இரண்டு சகோதரிகளிடையே சின்ன வயதிலிருந்து ஏற்படும் அன்பு, பாசம், போட்டி, பொறாமை திரையுலகமே ஒரு கட்டத்தில் அவர்களை எதிரிகளாக்கி ரசிப்பது எனச் சுவையும் சூடுமாகத் தயாராகியிருக்கிறதாம் இந்தத் தொடர். இதில் அக்காவாக நடிப்பவர் நேற்றைய புதிய அலைப் பட நாயகி தீப்தி நவல். தங்கையாக நடிப்பவர் முன்னாள் நாயகி ஜரினா வகாப்.

“இந்த தொடரின் கதைக்கும் லதா மங்கேஷ்கர் - ஆஷா போஸ்லே வாழ்க்கைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, எங்காவது ஒன்றிரண்டு ஒற்றுமை இருக்கலாம்” என்று மறுத்திருக்கிறார் தீப்தி. என்ன மறுத்து என்ன? நடிகையரின் தோற்றங்களும் நடிப்பு பாணியும் பிரபலப் பாடகிகளை நம் கண்முன் நிறுத்துகின்றன என்கிறார்கள் பாலிவுட் ரசிகர்கள்.

கதைக்காகக் கொடுக்கலாம் முத்தம்!

சைஃப் அலி கான் கரீனா கபூர் காதல், திருமணத்தில் முடிந்தது. திருமணத்துக்குப் பிறகு, கரீனா வேறு கதாநாயகர்களுடன் நடித்தாலும், பிரச்சினை ஏதும் உருவாகவில்லை. ஆனால் அர்ஜுன் கபூருடன் கரீனா தற்போது நடித்துவரும் 'கி அண்ட் கா' என்ற படத்தால் செம மூட் அவுட்! படத்தில் கரீனா - அர்ஜுன் ஜோடிப் பொருத்தம் பற்றி பாலிவுட் ஊடகங்கள் ஒரு பக்கம் புகழ்ந்து தள்ள, இந்தப் படத்தின் கதையை முன்னிட்டு “சக நடிகருடன் முத்தக் காட்சிகளில் நடிப்பதில்லை” என்ற கொள்கையை கரீனா திடீரென்று தளர்த்திக்கொண்டிருக்கிறார்.

அர்ஜுனுக்கு முத்தமும் கொடுத்திருக்கிறார். போதாக்குறைக்கு “அர்ஜுன் ஒழுங்காக முத்தம் கொடுக்கத் தெரிந்தவர்” என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கவும் செய்துவிட்டார். சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் “என் மனைவி கதையை நேசிப்பவள்” என்று சமாளிக்கிறார் சைஃப்.

சோனாக்ஷியின் கின்னஸ் சாதனை

தன் கைவிரல் நகங்களுக்கு வண்ணம் பூசியதால் சோனாக் ஷிக்கு கின்னஸ் புத்தகத்தில் இடம் கிடைத்திருக்கிறது. இது என்ன கூத்து என்கிறீர்களா?

சர்வதேசப் பெண்கள் தினத்தை ஒட்டி பிரபல அழகுசாதன நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் தன் அம்மாவுடன் கலந்துகொண்டார் சோனாக்ஷி. இவர்களோடு நிகழ்ச்சிக்கு வந்திருந்த 1,328 பெண்களும் ஒரே சமயத்தில் தங்கள் நகங்களுக்கு வண்ணம் பூசிக்கொண்டனர். இது ஒரு கின்னஸ் சாதனையாகிவிட்டது. “கின்னஸ் புத்தகத்தில் என் பெயரும் இடம்பெற வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. அது இன்று நிறைவேறியுள்ளது” என்று பேட்டி வேறு கொடுத்திருக்கிறார் சோனாக்ஷி சின்ஹா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in