

சர்வதேசத் திரைப்படங்களை அதிகார பூர்வமாகவே ரீமேக் செய்யும் போக்குக்கு கோலிவுட் மாறியிருக் கிறது. ‘தூங்காவனம்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களைத் தொடர்ந்து ‘தோழா’. ‘தி இன்டச்சபிள்ஸ்’ என்னும் பிரஞ்சுத் திரைப்படத்தைத் தழுவி, ‘தோழா’வை இயக்கியிருக்கிறார் டோலிவுட் இயக்குநர் வம்சி பைடிபள்ளி.
அக்கினேனி நாகார்ஜுனா குவாட்ரி பிளேஜியாவால் (கழுத்துக்குக் கீழே உடலியக்கம் இல்லா நிலை) பாதிக்கப் பட்ட கோடீஸ்வரத் தொழிலதிபர். அவரைக் கவனித்துக்கொள்ளும் காப் பாளர் பணி நேர்காணலுக்குச் செல்கிறார் சிறையிலிருந்து பரோ லில் வெளியே வரும் கார்த்தி. கார்த்தியின் இயல்பான, கலகலப்பான சுபாவம் பிடித்துப்போக அவரையே காப்பாளராக நியமிக்கிறார் நாகார்ஜுனா. நாகார்ஜுனாவின் அழகான செகரட்ரியால் (தமன்னா) ஈர்க்கப்பட்டே கார்த்தி அந்த வேலைக்குச் செல்கிறார் என்றாலும் போகப் போக நாகார்ஜுனாவின் நிலையைப் புரிந்துகொண்டு அவரை நன்றாகக் கவனித்துக்கொள்கிறார்.
தன்னைச் சுற்றி இரக்கவுணர்வையும் விசுவாசத்தையுமே அனுபவித்துச் சலித் துப்போன நாகார்ஜுனாவின் அன் றாடத்தை வண்ணமயமாக்குகிறார் கார்த்தி. இருவருக்கும் இடையில் சகோதர பாசத்துடன் கூடிய தோழமை உருவாகிறது. இந்த நட்பு இருவரின் வாழ்க்கையையும் எப்படி அர்த்த முள்ளதாக மாற்றுகிறது? இதுதான் ‘தோழா’.
நடிகர்களின் தேர்வைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார் இயக்குநர். கழுத் துக்குக் கீழே உடலியக்கம் இல்லாத கோடிஸ்வரத் தொழிலதிபர் கதா பாத்திரத்தில் நாகார்ஜுனா தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வயது ஏற ஏற வசீகரம் கூடுகிறது.
கார்த்தியின் பாத்திரம் அவருக்குப் பழக்கமான வார்ப்புக்குள்தான் இருக் கிறது என்றாலும் ஒவ்வொரு காட்சி யையும் துடிப்போடு செய்திருக்கிறார். நகைச்சுவைக் காட்சிகளில் இயல் பாகவே ரசிக்கச் செய்துவிடுகிறார். நாகர்ஜுனாவின் மனநிலையை அவர் சொல்லாமலேயே புரிந்துகொள்வது, தமன்னாவிடம் காதலைச் சொல்வது, ஓவியத்தைப் பற்றி பிரகாஷ் ராஜிடம் பேசுவது ஆகிய இடங்களில் கார்த்தி யின் நடிப்பு குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.
நாகார்ஜுனாவின் உதவியாளர் கதா பாத்திரத்தில் தமன்னா கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். வழக்கறிஞராக வரும் பிரகாஷ் ராஜ் கதாபாத்திரமும் மனதில் நிற்கிறது. கார்த்திக்கும் பிரகாஷ் ராஜுக்கும் இடையிலான நகைச்சுவைக் காட்சிகள் படம் மெலோ டிராமாவாக மாறுவதைத் தடுக்கின்றன. ஜெயசுதா, விவேக் போன்றவர்களுக்குப் பெரிய வேலை இல்லை. அப்பாவித்தனமான சமையல்காரராக வரும் கல்பனாவின் இறுதிப் படமாக இந்தப் படம் அமைந்துவிட்டது.
ராஜு முருகன், முருகேஷ் பாபுவின் வசனங்கள் பல இடங்களில் பளிச் சிடுகின்றன. ‘மனுஷன் போகும் இடத்துக்கு மனசும் போகணும்’, ‘ நேசம் இருக்கும் இடத்தில் பயம் இருக்கும்’ போன்ற வசனங்கள் பார்ப்பவர்கள் மனதிலிருந்து நீங்காமல் இருக்கும்.
பி.எஸ். வினோத்தின் கேமரா பாரிஸை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. ஆடை வடிவமைப்பாளர் ரவிக்குமார் பில்லாவின் கைவண்ணம் தமன்னா, நாகார்ஜுனாவின் உடைகளில் தெரிகிறது.
நீளமான திரைக்கதையில் பெரிய திருப்பங்களோ புதுமையான சூழ் நிலைகளோ இல்லை. கோபி சுந்தரின் பின்னணி இசை, பாடல்கள், கே.எல். பிரவீனின் படத்தொகுப்பு போன்றவை படத்தின் பலவீனங்கள். ஐட்டம் பாட லைத் தவிர்த்திருக்கலாம்.
வசதி, வறுமை, உடல்நலம், நோய், மகிழ்ச்சி, துயரம், ஆகிய துருவங்களை அருகருகே வைத்துக் காட்டுகிறது ‘தோழா’. உணர்வுகள், வாழ்நிலைகளில் மட்டுமல்லாமல் வாழ்க்கை குறித்த பார்வைகளிலும் இந்த வித்தியாசம் படம் முழுவதும் காணப்படுகிறது. வாழ்க்கை பற்றிய நமது கண்ணோட்டத்தின் மீது சலனத்தை ஏற்படுத்தும் இந்தச் சித்தரிப்பு பாராட்டத்தக்கது.
கார்த்தி, நாகார்ஜுனாவுக்கு இடை யிலான உறவில் மேலும் ஆழம் இருந் திருக்கலாம். சில நிகழ்வுகள் திரும்பத் திரும்ப நடப்பதுபோன்ற உணர்வு ஏற்படு வதைத் தவிர்த்திருக்கலாம். நீளத்தைக் குறைத்திருக்கலாம். எனினும், பணத்தை வைத்து மட்டும் வாழ்வில் மகிழ்ச்சியுடன் இருக்க முடியாது என்பதையும், நம்பிக்கையுடன் வாழ உறவுகளும் நேசமும்தான் அவசியம் என்பதையும் அழகாகப் பதிவுசெய்கிறது ‘தோழா’.