

‘சின்னத் தம்பி’ இல்லை!
சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர், தன்னுடைய உடல் எடையை அதிரடியாகக் குறைத்து ஸ்லிம் ஆகியிருக்கிறார் குஷ்பு. ஆனால் அவருக்கு முன்பாகவே இளைய திலகம் பிரபு உடல் எடையைக் குறைத்து பல வயது குறைந்த இளமைத் தோற்றத்தை எட்டியிருக்கிறார். இதனால் ‘சின்னத் தம்பி-2’ படத்துக்காக இருவரும் எடைக்குறைப்பு செய்துவிட்டதாக ‘போலி’ செய்திகள் பரபரத்தன. இது பற்றி பிரபுவிடம் கேட்டபோது, “படிப்படியாக 10 மாதங்கள் முயன்று எடையைக் குறைத்திருக்கிறேன். எடைக்குறைப்புக்கும் திரைப்படங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ‘சின்னத் தம்பி’ படம்தான் என்னை ரசிகர்களிடம் கொண்டுசென்றது. ஆனால், அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பே இல்லை” என்று கூறிவிட்டார். ‘பொன்னியின் செல்வன்’, ‘மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ உட்பட இருபதுக்கும் அதிகமான படங்களில் பிசியாக நடித்துகொண்டிருக்கிறார் பிரபு.
என் வழி சினிமா!
பொது வாழ்க்கையில் முன்னாள் அமைச்சர், சென்னையின் முன்னாள் மேயர், இயற்கை ஆர்வலர் எனப் பல அடையாளங்களைக் கொண்டவர் சைதை துரைசாமி. தன்னுடைய மனிதநேயம் அறக்கட்டளை மூலம் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகள், மத்திய, மாநில அரசுகள் நடத்தும் குரூப் தேர்வுகளுக்கு இலவச உணவு, உறைவிட வசதியுடன் கட்டணமில்லாப் பயிற்சி அளித்து ஏழை, எளிய குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களைக் கைதூக்கிவிட்டு வருகிறார். அப்பாவின் அரசியல் பாதையிலிருந்து விலகி, தமிழ் சினிமாவில் சாதித்திருக்கிறார் அவருடைய மகன் வெற்றி துரைசாமி. விதார்த் - ரம்யா நம்பீசன் நடிப்பில் இவர் முதல் முறையாக இயக்கியுள்ள ‘என்றாவது ஒருநாள்’, பல சர்வதேசப் படவிழாக்களில் கலந்துகொண்டு, சிறந்த படம், சிறந்த இயக்குநர் உட்பட 43 விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது. இப்படம் நாளை மறுநாள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரீமியராக ஒளிப்பரப்பாகிறது. அதன் பின்னர் அக்டோபர் 8-முதல் ஜீ5 ஓடிடியில் காணலாம்.
நடிப்பிலும் ஒரு கை!
சேரனின் ‘தவமாய் தவமிருந்து’ தொடங்கி கடந்த 15 ஆண்டுகளாக 500-க்கும் அதிகமான படங்களில் மண் சார்ந்த பாடல்களைப் பாடிவருபவர் வேல்முருகன். ‘மதுர குலுங்க குலுங்க’, ‘ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா’, ‘வேணாம் மச்சான் வேணாம்’, ‘கத்திரிப் பூவழகி’, ‘ஒத்தச் சொல்லால..’, ‘அட கருப்பு நிறத்தழகி’ என்று இவர் பாடி ஹிட்டான பாடல்களின் பட்டியல் நீளமானது. சமீபத்தில் ஐயாயிரம் நாட்டுப்புறக் கலைஞர்களை வைத்து கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சி ஒன்றை நடத்திக்காட்டினார். தற்போது, நடிப்பிலும் ஒரு கை பார்த்துவிடுவது என்று இறங்கிவிட்டார். ப்ரஜின் நாயகனாக நடிக்கும் ‘சைக்கிள் வண்டி’, மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகிவரும் ‘சலூன்’ உட்பட பத்துக்கும் அதிகமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துகொண்டிருக்கிறார்.
தொடரும் கூட்டணி!
அஜித் நடிப்பில் ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, ‘விஸ்வாசம்’ என்று வரிசையாக நான்கு படங்களை இயக்கியவர் சிவா. தற்போது, அஜித்தை வரிசையாக இயக்கி வருபவர் ஹெச்.வினோத். ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக அஜித் நடிப்பில் வினோத் இயக்கும் படத்தைத் தயாரிக்க இருப்பதாக கூறியிருக்கிறார் இவ்விரு படங்களின் தயாரிப்பாளர் போனி கபூர்.
நலனின் கண்டுபிடிப்பு!
நலன் குமாரசாமியின் ‘சூது கவ்வும்’ படத்தை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை. அந்தப் படத்தின் பாதிப்பில், ‘பிளாக் ஹுயூமர்’ துரத்தல் கதை ஒன்றை எழுதி, அதற்கு ஒரு ட்ரைலரையும் தயார் செய்துகொண்டு வந்து தன்னை சந்தித்த பாலா அரன் என்கிற அறிமுக இயக்குநரை ஆதரித்துள்ளார் நலன் குமாரசாமி. 10-ஆம் நூற்றாண்டில் காணாமல்போன, பல கோடி மதிப்புள்ள பன்றி சிலையுடன் கூடிய புதையலை, நாயகனும் அவருடைய நண்பர்களும் தேடுவதுதான் கதை. படம் முழுவதும் தயாராகிவிட்ட நிலையில், சமீபத்தில் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில், குறும்படம் வழியாக சினிமாவில் ஜெயித்த இயக்குநர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. படத்தை கே.இ.ஞானவேல்ராஜா, அபினேஷ் இளங்கோவன், நலன் குமாரசாமி இணைந்து வெளியிடுகிறார்கள்.
எம்.ஐ.டியிலிருந்து…
ஐ.ஐ.டி, எம்.ஐ.டிகளில் படிக்க இடம் கிடைக்காதா எனப் பலர் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். கோழிக்கோடு எம்.ஐ.டியில் இன்ஜினியரிங் முடித்து ‘கேம்பஸ் இண்டர்வியூ’ மூலம் தேர்வாகி ரூ.1 லட்சம் மாத ஊதியம் பெற்று வந்த அனகா, ஐடி வேலையை உதறிவிட்டு வந்து மலையாள, தமிழ் சினிமாவில் விறுவிறுவென முன்னேறிக்கொண்டிருக்கிறார். நன்கு தமிழ் பேசத் தெரிந்த இவர், தமிழில் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக ‘நட்பே துணை’ படத்தில் அறிமுகமானார். தற்போது, சந்தானம் நடிப்பில் வெளியான டைம் ட்ராவால் படமான ‘டிக்லோனோ’வில் மூன்று வேடங்களில் வரும் கதாநாயகனை எதிர்கொள்ளும் நாயகியாக கவனிக்க வைத்திருக்கிறார். மலையாளத்திலோ, மம்மூட்டி நடித்து வரும் ‘பீஷ்ம பர்வம்’ படத்தில் லேட்டஸ்ட்டாக இணைந் திருக்கிறார்.அனகா