

திடீரெனப் பேச மறுக்கும் சிறுமியும் அவளைச் சீராக்க முயலும் சிகிச்சையாளரும் பரஸ்பரம் ஆறுதல் சேர்ப்பதே ‘அஷ்வமித்ரா’ திரைப்படம்.
ஐந்து வயது சிறுமி மித்ரா திடீரென பேசுவதை நிறுத்திக்கொள்கிறாள். அவளது ஒரே உறவான தாய் உட்பட அனைவரிடமிருந்தும் தன்னைத் துண்டித்துக்கொள்கிறாள். அறையின் தரையெங்கும் கிறுக்கலாய் வரைந்து தள்ளுவதையும் ஜன்னல் வழியே வேடிக்கை பார்ப்பதையும் தவிர்த்து, சதா ஆமை போல் தனக்குள் ஒடுங்கிக்கொள்கிறாள். இந்த சிறுமியின் உலகுக்குள் குழந்தைகளுக்கான ‘ஸ்பீச் தெரபிஸ்ட்’ அருண் பிரவேசிக்கிறார். அவரது முயற்சிகள் வெற்றி பெற்றனவா அவள் பேசினாளா என்பதுமே அஷ்வமித்ராவின் கதை.
அண்மையில் கணவனை இழந்த இளம் தாய், தனக்காக எஞ்சியிருக்கும் ஒரே உறவான மகளின் புதிரான மாற்றத்தையும் பேச மறுக்கும் வீம்பையும் நினைத்து மறுகுகிறாள். குழந்தை மித்ராவின் உள்வயப்பட்ட குட்டி உலகத்தைக் காட்சிகள் ஆழமாகப் பிரதிபலிக்கின்றன.
பேச்சு சிகிச்சையாளர் ஒருவரை, பொதுவெளியில் சகஜமாகப் பேச மறுப்பவராகவும் அப்படியான அவரின் பேசும் முயற்சிகளும் திக்கல் திணறலாக வெளிப்படுவதுமாகச் சித்தரித்து இருப்பது விசித்திரமாகக் கதைக்குள் பொருந்துகிறது. பதில் பேசாத சிறுமியிடம் அவள் பாவித்திருக்கும் கண்ணுக்குப் புலப்படாத அரணை உடைத்துக்கொண்டு தெரபிஸ்ட் பிரவேசிப்பதை நிதானமான காட்சிகள் விவரிக்கின்றன. எதிர்மறை பாத்திரங்களில் மட்டுமே பரிச்சயமான ஹரிஷ் உத்தமன், அமைதி தவழும் அருண் கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்திருக்கிறார்.
சிறுமி மித்ராவாக தோன்றும் தரீதாவின் இயல்பான தோற்றமும் திரை இருப்பும், ஆரம்பத்தில் புதிராக இருந்தாலும் நேரம் செல்ல நம்மை வாரிக்கொள்கிறது. இன்னொரு முக்கிய பாத்திரத்தில் ‘லிவிங் ஸ்மைல்’ வித்யா வருகிறார். நடிப்பவர் திருநங்கை அல்லது நடிப்பது திருநங்கை பாத்திரம் என்றாலே வழக்கமான காட்சிமொழியில் மாற்றுப்பாலினத்தவர் குறித்த தகவல்களே துறுத்தலாக வெளிப்படும். அப்படியின்றி சக மனிதர்களில் ஒருவராகவே அஷ்வமித்ராவில் வித்யா வளையவருவது இன்னொரு முன்னுதாரணம்.
வெகுஜன எதிர்பார்ப்பு, வணிக சமரசங்கள் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் கைக்கொண்ட கதைக்கு நியாயம் சேர்க்க முயன்றிருக்கிறார் எழுதி இயக்கி இருக்கும் எர்த்லிங் கவுசல்யா. அளவான வசனங்கள், ஆழமான நடிப்பு என தரமான படைப்பாக அஷ்வமித்ரா மிளிர்கிறது. அஷ்வமித்ராவை ‘நீஸ்ட்ரீம்’(Neestream) தளத்தில் காணலாம்.
தொடர்புக்கு: leninsuman4k@gmail.com