மலையாளக் கரையோரம்: அந்த மூன்று பேர்!

மலையாளக் கரையோரம்: அந்த மூன்று பேர்!

Published on

‘பிரேமம்’ படத்தில் அறிமுகமான மூன்று நாயகிகளில் இருவர் தற்போது தென்னிந்தியாவின் மோஸ்ட் வாண்டெட். மடோனா, சாய் பல்லவி இருவரும் தமிழ், மலையாளம் இரண்டிலுமே பிசியாக இருக்கிறார்கள். பொதுவாக கோலிவுட்டுக்கு மலையாளப் பெண்கள் அதிகமாய் அறிமுகப்படுத்தப்பட்டுவரும் நிலையில், தமிழகத்திலிருந்து மலையாளத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர் சாய் பல்லவி. தற்போது துல்கர் சல்மானுடன் ‘கலி’ படத்தில் நடித்து முடித்துவிட்டார்.

மார்ச் 26-ல் படம் வெளியாகிறது. ‘கலி’ படத்தில் சாய் பல்லவியின் தோற்றத்தைப் பார்த்து மணிரத்னம் அவரைத் தேர்வு செய்திருக்கிறார். அதில் கார்த்திக்குடன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ‘பிரேமம்’ படத்துக்குப் பிறகு சாய் பல்லவி மருத்துவப் படிப்புக்காக ஜியார்ஜியாவில் நீண்ட நாட்கள் தங்க வேண்டிய கட்டாயம். அங்கே சாய் ஆடிய நடனம் இன்றைக்கும் இணையத்தில் வைரல்.

‘பிரேமம்’ படத்தின் முதல் நாயகியாகப் பள்ளி மாணவி தோற்றத்தில் வந்து கேரளத்தில் காய்ச்சலை உண்டு பண்ணிய அனுபமா பரமேஸ்வரன் தனது அடர்ந்த சுருண்ட கூந்தலால் கேரளத்தின், தமிழகத்தின் இளசுகளைச் சுருட்டிக் கொண்டவர் . ‘பிரேமம்’ படத்தின் மூன்று நாயகிகளில், அனுபமா கேரளத்தில் கலக்குவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஒரு மலையாளப் படத்தில் நடிக்கக்கூட வாய்ப்பு வரவில்லை. ஆனால் தெலுங்குத் திரையுலகம் அவரைக் கொத்திக் கொண்டுபோய்விட்டது. தெலுங்கு நடிகர் ராஜ் தருணுடன் அனுபமா ஜோடியாக நடிக்கிறார். ஆனால் அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

ஆணாக நடிக்கும் சர்ச்சை மேனன்...!

முன்னாள் மும்பை மாடல் ஸ்வேதா மேனனுக்கு மலையாளத் திரையில் இன்னும் மவுசு குறையவில்லை. கடந்த 2013-ல் நடித்த ‘களிமண்ணு’ என்ற மலையாளப் படத்துக்காகத் தனது தலைப் பிரசவத்தைப் படமெடுக்கச் செய்து சர்ச்சையில் சிக்கியவர், தற்போது அடுத்த அதிரடியில் இறங்கியிருக்கிறார்.

‘நாவல் என்ன ஜுவல்’ என்ற மலையாளப் படத்தில் ஆண் வேடத்தில் நடிக்கிறார். இந்தியத் தாய்க்குப் பிறந்த ஈரானியப் பெண்ணின் கதையாம். எந்த மாதியான சூழலில் அவர் ஆணாக நடிக்கிறார் என்பதை ரகசியமாக வைத்திருக்கிறது படக் குழு. மலையாளம், ஈரான் ஆகிய இரண்டு மொழிகளில் இந்தப் படம் தயாராகிறது.

அப்பாவை விஞ்சிய மகன்!

ஐந்து முறை கேரளா மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருது பெற்றிருக்கும் அப்பா மம்மூட்டி. தற்போது விருதுப் போட்டியில் மகன் துல்கர் சல்மானுடன் போட்டியிட்டார். விருது தற்போது மகனுக்குக் கிடைத்துவிட்டது. கடந்த ஆண்டு வெளியான ‘சார்லி’ படத்தில் நடித்ததற்காக துல்கருக்குச் சிறந்த நடிகருக்கான மாநில விருது கிடைத்துள்ளது. ‘பத்தேமாரி’ படத்தில் நடித்ததற்காக இந்தப் படத்தில் மம்மூட்டி ரொம்ப அடக்கி வாசித்துவிட்டார்; அதற்கே விருது கிடைக்கும் என்றார்கள். ஆனால் சில மாதங்களுக்கு முன் சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா, “எப்படி நடிக்க வேண்டும் என்று மம்மூட்டி, தனது மகன் துல்கரிடம் பாடம் படிக்க வேண்டும்” என்று கூறி நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார். ஆனால் தற்போது அப்பாவை முந்திக்கொண்டுவிட்டார் மகன்!

பரபரப்பு ஜோடி!

மலையாள திரை உலகில் கிசுகிசுவுக்குப் பேர்போன ஜோடி திலீப் - காவ்யா மாதவன். இந்த ஜோடி இணைந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தது. ராசிக் கூட்டணியாகவும் கருதப்பட்டதால் பல படங்கள் இவர்களைத் தேடி வந்தன; அதே போல கிசுகிசுக்களும் பெருகின. திலீப் - மஞ்சு வாரியர் தம்பதியின் பிரிவுக்கும் இதுவும் ஒரு காரணம் என்பதாக ஒரு பேச்சுண்டு. அதுபோல காவ்யாவும் தன் கணவரை, திலீப் - வாரியர் ஜோடி பிரியும் முன்பே விவாகரத்து பெற்றுப் பிரிந்துவிட்டார்.

2010-ல் வெளிவந்த ‘பாப்பி அப்பச்சா’ படம்தான் திலிப் -காவ்யா இணைந்து நடித்த கடைசி படம். தற்போது 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கும் படத்தில் இவர்கள் மீண்டும் இணைகிறார்கள் என்பது அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in