

நீண்ட நாளுக்குப் பின் இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் வரவிருக்கும் படம் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம். இந்தப் படத்தில் ஐந்து பேர் இசையமைத்திருக்கிறார்கள். படத்தில் இடம்பெற்றுள்ள 4 + 1 பாடல்களுக்கும் வெவ்வேறு இசையமைப்பாளர்கள். நா. முத்துக்குமார் எழுதிய ஒரு பாடலைத் தவிர, மற்ற அனைத்தும் மதன் கார்க்கி.
‘காத்தில் கதையிருக்கு’ படத்தின் டைட்டில் பாடலாக இருக்க வேண்டும். மேற்கத்திய பாணியில் அமைந்த ரசிக்கத்தக்க பாடல். அல்போன்ஸ் ஜோசப் இசையமைத்து, ரீட்டாவுடன் பாடியிருக்கிறார். ‘ஆரோமலே’ பாடலுக்காக ஏற்கெனவே புகழ்பெற்றவர்தான் இந்த அல்போன்ஸ்.
எஸ்.எஸ். தமன் இசையில் பாடகர் ஹரிசரணுடன் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, நகுல், சாந்தனு, சுஜித், நிவாஸ், சந்தோஷ் என பெரிய நட்சத்திரப் பட்டாளம் பாடியுள்ள ‘லிவ் த மொமன்ட்', தன்னம்பிக்கைக்குக் குரல் கொடுக்கும் அதிரடிப் பாடல். ஹிட் ஆக வாய்ப்பு அதிகம். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ள ‘ஏ ஃபார் அழகிருக்கு’ பாடலில் கவரக்கூடிய அம்சம் எதுவும் பெரிதாக இல்லை.
இசை வாழ்க்கைத் துணைவர்களான பிரகாஷ்-சைந்தவியைப் பாட வைத்துள்ளார் 180 பட இசைக்காகப் புகழ்பெற்ற ஷரத். இந்த ஆடியோவின் அடையாள ஹிட் பாடல் இதுவாகவே இருக்கும். கர்னாடக இசைப் பாணியில் அமைந்த மனதை மயக்கும் இனிமையான மெட்டு, புத்துணர்வூட்டும் இசை, பிரகாஷ்-சைந்தவியின் குரல்கள் அனைத்தும் சரியாகக் கூடிவந்திருக்கும் இந்தப் பாடல், மென் மெலடியாக மனதில் மறுபடி மறுபடி ரீங்கரித்துக்கொண்டே இருக்கிறது.