Published : 02 Mar 2016 10:18 AM
Last Updated : 02 Mar 2016 10:18 AM

சினிமா எடுத்துப் பார் 48: ரஜினி விக் வைத்து நடித்த ஒரே படம்!

சென்ற வாரம் ‘ரஜினி கீதம் என்ற பாட்டு இடம்பெற்ற படம் எது?’ என்று கேட்டிருந்தேன். அது 8 வருட இடைவெளிக்குப் பிறகு ஏவி.எம். தயாரித்த ‘முரட்டுக்காளை’. இந்தப் படத்தை நான் இயக்குவதற்கு ஒரு வரலாறு இருக்கிறது.

ஒருநாள் நானும் ரஜினியும் வெளிப் புறப் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஏவி.எம் ஸ்டுடியோவில் போட்டிருந்த செட்டில் படப்பிடிப்பை நடத்த வந்தோம். வரும்போது ஏவி.எம். ராஜேஸ்வரி தியேட்டரின் கட்டுமான வேலைகள் நடந்துகொண்டிருந்தன. ஏவி.மெய்யப்ப செட்டியார் அவர்கள் அதனை மேற் பார்வை செய்துகொண்டிருந்தார். அதை பார்த்த நான் ரஜினியிடம், ‘‘செட்டியார் ஸ்டுடியோவில்தான் இருக்கிறார். பார்க்க லாமா?’’ என்று கேட்டேன். ‘‘பார்ப்போம் சார்… பார்ப்போம் சார்’’ என்று துடிப்புடன் சொன்னார். அவரைக் கூட்டிக் கொண்டு செட்டியார் அருகில் சென்று இருவரும் வணக்கம் சொன்னோம்.

செட்டியார் ரஜினியை பார்த்து, ‘‘நீங்க நடித்த படங்களைப் பார்த்தேன். நல்லா நடிக்கிறீங்க. ரொம்ப பெரிய நடிகராக வாங்க’’ என்று வாழ்த்தினார். அவர் வாழ்த்து பலித்தது. நாங்கள் அப்பச்சியிடம், ‘‘உள்ளே ஷூட்டிங் இருக்கு. நாங்க புறப்படுகிறோம்’’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டோம். அப்பச்சி, ‘‘முத்துராமா! கமலையும் ரஜினியும் வைத்து ‘ஆடு புலி ஆட்டம்’னு படம் பண்றே. அதே மாதிரி ஏவி.எம்-க்கும் கமலையும் ரஜினியையும் வைச்சு ஒரு படம் பண்ணு’’ என்றார். பூரித்துப் போய்விட்டேன். ‘‘அப்பச்சி… எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. நிச்சயம் பண்றேன்’’ என்று நன்றியோடு கூறி விட்டு, ஷூட்டிங் போனோம்.

இதையடுத்து ஒரு மாதத்துக்குள் ஏவி.எம் அவர்கள் இயற்கை எய்திவிட் டார். திரையுலகத்துக்கே வழிகாட்டி யாக இருந்த ஏவி.எம் மறைந்தது எல்லோருக்கும் பெரிய இழப்பு. ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலை’என்ற பழமொழிப்படி செட்டியார் சொன்ன வாய்ப்பை இழந்துவிட்டேன் என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாள் ஏவி.எம்.சரவணன் சார் என்னை அழைத்தார். ‘‘அப்பச்சி சொன்னதை மறந்துட்டீங்களா? நானும் என் சகோதரர்களும் சேர்ந்து ரஜினியை யும் கமலையும் வைச்சு படம் எடுக் கிறதுன்னு முடிவு பண்ணிட்டோம்’’ என்றார். மீண்டும் மகிழ்ச்சி.

அந்த செய்தியை ரஜினி அவர்களிடத் தில் சொன்னேன். அவர், ‘‘ஏவி.எம் குளோப்புக்குக் கீழே நின்னு, இந்த ஸ்டுடி யோவுக்கு எப்போ படம் பண்ணு வோம்னு ஏங்கியிருக்கேன். நான் ரொம்ப சந்தோஷத்தோட ஒப்புக்கிறேன். ஏற்பாடு பண்ணுங்க’’ என்றார். எங்க குழந்தையும் இன்றைய உலக நாயகனு மான கமலிடம் போய், ஏவி.எம் படம் பற்றிச் சொன்னேன். ‘‘சார்... சார்…’’ என்று சொன்னார். அதில் ஒரு தயக்கம் தெரிந்தது. ‘‘என்ன கமல் ஏன் தயங்குறே? விஷயத்தை சொல்லு’’ என்றதும், ‘‘சார், நானும் ரஜினியும் ஒண்ணாச் சேர்ந்து படம் பண்ண வேண்டாம்னு நினைக் கிறேன். ரஜினியை வெச்சி ஒரு படம் பண்ணுங்க. என்னை வெச்சி ஒரு படம் பண்ணுங்க’’என்றார். சரவணன் சாரிடம் போய் சொன்னேன். ‘‘அப்போ… முதல்ல ரஜினியை வெச்சி படம் பண்ணலாம். அதுக்கான ஏற்பாடுகளைச் செய்யுங்க’’ என்றார்.

வழக்கம்போல எங்கள் குழுவின் கதாசிரியர் பஞ்சு அருணாசலம் அவர்களி டம் கேட்டோம். அவர், ‘வித்தியாசமான கிராமச் சூழ்நிலையில் நடக்கிற கதை ஒண்ணு வெச்சிருக்கேன்’’ என்றார். எல் லோரும் கேட்டோம். ரஜினியும் கேட்டார். ரஜினிக்குப் பிடித்திருந்தது. அதன் பிறகு பஞ்சு அவர்கள் திரைக்கதை - வசனம் எழுத, ஸ்க்ரிப்ட் தயாரானது. ஏவி.எம் மெய்யப்ப செட்டியார் காலத்தில் இருந்து கதை முழுவதும் தயாரான பிறகுதான் படத்தின் தொடக்க விழாவை வைப்பார் கள். ஏவி.எம் நிறுவனம் எப்போதும் தொடக்க விழாவை ஆடம்பரமாக கொண் டாட மாட்டார்கள். தொடக்க விழாவைப் பற்றி ஏவி.எம் லெட்டர் பேடில் எழுதி கடிதம் அனுப்புவார்கள். இதை இங்கே ஏன் சொல்கிறேன் என்றால், இப்போ தைய தொடக்க விழாக்களைப் பார்த்து அசந்துபோகிறேன். ஒரு அழைப்பிதழின் மதிப்பு ஆயிரம் ரூபாய். சென்னை முழுக்க போஸ்டர் , பேனர் மற்றும் விழா நிகழ்ச்சியை ஆடம்பரமாக நடத்த பல பல லட்ச ரூபாய். படம் எடுப்பதற்கான தொகையில் பல பல லட்சங்களை இதற்கே செலவு செய்துவிட்டால் பட் ஜெட்டில் துண்டு விழாதா? ஏவி.எம்மின் இலக்கணப்படியே ‘முரட்டுக் காளை’ தொடக்க விழா ஆடம்பரம் இல்லாமல் அமைதியாக நடந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர் களுக்கு தலையில் விவசாயியை போல் விக் வைத்து, ஒரு வேட்டி, ஒரு பனியன், ஒரு துண்டு என அவரை கிராமத்து ஆளாக்கினோம். படம் முழுக்க அவர் விக் வைத்து நடித்த ஒரே படம் ‘முரட்டுக் காளை’தான். படத்தின் தலைப்புக்கு ஏற்ற மாதிரி ‘முரட்டுக்காளை’யாகவே ரஜினி நடித்தார்.

படத்தின் வெற்றிக்கு இதன் கதா பாத்திரங்களுக்கான நடிகர்களின் தேர் வும் ஒரு காரணம். இந்தப் படத்தின் கதாநாயகி ரதி. அழகோ அழகு. ஆனால், அவருக்குத் தமிழ் தெரியாது. அவ ருக்கு துணை இயக்குநர் லட்சுமி நாரா யணனும், நகைச்சுவை நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனும் தமிழ் சொல்லிக் கொடுத் ததே ஒரு வேடிக்கை. இப்படத்தில் ரஜினிக்கு சகோதரர்கள் நாலு பேர். எங்கள் குழுவின் ஆஸ்தான நகைச் சுவை நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் இதில் ரஜினிக்கு முதல் தம்பி. அவருடைய தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி, அவருடைய தாய் ஒய்.ஜி.பி.ராஷ்மி, ஒய்.ஜி.மகேந்திர னின் மனைவி சுதா ஆகியோர் கலைக்காக வும், கல்விக்காகவும் தங்களையே அர்ப் பணித்துக் கொண்டவர்கள். அவர்களால் நாடக உலகில் அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்தாளர்கள், இயக்குநர்கள், நடிகர் கள், நடிகைகள் ஏராளம். அவர்களுக்கு இங்கே நாம் நன்றி சொல்வோம்.

படத்தில் ரஜினிக்கு இரண்டாவது தம்பி ராஜப்பா, மூணாவது தம்பி ராமு, நாலாவது தம்பி அர்ஜூனன். இந்தக் கதாபாத்திர தேர்வில் ரஜினிக்கு சமமான முக்கியத்துவம் கொண்டதாக ஒரு கதாபாத்திரம்... யாரைப் போடுவது என்று தலையைப் பிய்த்துக் கொண்டோம். ஒரு வழியாக ஒரு நடிகர் எங்களுக்கு பிடிபட்டு விட்டார். அவரிடம் எப்படி கேட்பது?

- இன்னும் படம் பார்ப்போம்...

படம் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x