

‘இடியட்’ ஜோடி
பயமுறுத்திய பேய்களுக்கு பதிலாக தற்போது சிரிக்க வைக்கும் பேய்களின் நடமாட்டம் தமிழ் சினிமாவில் அதிகரித்திருக்கிறது. மிர்ச்சி சிவா - நிக்கி கல்ராணி இருவரும் பேய்களை பயமுறுத்தி அழவும் சிரிக்கவும் வைக்கும் ஜோடியாக ‘இடியட்’ படத்தில் நடித்திருக்கிறார்களாம். “ ஒரு ‘இடியட்’ ஜோடியிடம் சிக்கும் சில பேய்களின் பரிதாப நிலை என்னவாகிறது என்பதுதான் கதை” என்கிறார் படத்தை இயக்கியிருக்கும் ராம்பாலா. ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிப்பில், உருவாகியிருக்கும் இப்படம் வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது.
ரஜினியுடன் மோதும் ஆரி!
ரஜினியின் ‘அண்ணாத்த’, சிம்புவின் ‘மாநாடு’ ஆகிய படங்கள், நவம்பர் 4 தீபாவளி பண்டிகையன்று வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். அவர்களுடன் ‘பகவான்’ படத்தின் மூலம் போட்டியில் களமிறங்குகிறார் ஆரி ஆர்ஜுனன். காளிங்கன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பகவா’னில் முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார் ஆரி. தன்னுடைய தோற்றத்துக்காக மட்டும் ஒராண்டு காலம் காத்திருந்து நடித்திருக்கிறாராம். ஆங்கில நடிகர் ஜேம்ஸ் பாரட் வில்லனாக நடிக்கும் இப்படத்தில், கதாநாயகியாக தமிழுக்கு அறிமுகமாகிறார், தெலுங்கில் ஹிட்டடித்த ‘ரங்கஸ்தலம்’ படத்தின் நாயகியான பூஜிதா பொன்னாடா.
சர்ச்சை உண்டு!
முதல் அலை கரோனாவுக்கு முன்னர் வெளியாகி, சர்ச்சைகளைச் சந்தித்தாலும் வசூல் வெற்றியைப் பெற்ற படம் ‘திரௌபதி’. அந்தப் படத்தின் இயக்குநர் மோகன்.ஜி எழுதி, இயக்கித் தயாரித்திருக்கும் புதிய படமான ‘ருத்ர தாண்டவம்’ அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அஜித்தின் மைத்துனர் ரிஷி ரிச்சர்டு நாயகனாகவும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாகவும் தர்ஷா குப்தா நாயகியாகவும் நடித்திருக்கும் இந்தப் படத்திலும் சர்ச்சை உண்டு எனக் கூறியிருக்கிறார் இயக்குநர்.
மென்பொருள் நாயகன்!
கிராமத்து அதிரடி நாயகன் வேடங்களில் கலக்கிப் பெயர் பெற்றவர் சசிகுமார். கிராமம், பெரிய கூட்டுக் குடும்பம் எனத் தனக்கு ராசியான சென்டிமென்ட் விஷயங்களோடு, தற்போது முதல் முறையாக மென்பொருள் பொறியாளராக நடித்திருக்கிறார். அதனால் என்ன! கழுத்தில் கட்டிய டையும் ஐடி நிறுவன அடையாள அட்டையும் சிதற, அங்கேயும் ஹை-பை வில்லன்களை புரட்டியெடுக்கும் ஆக்ஷன் நாயகனாக நடித்திருக்கிறாராம் ‘ராஜவம்சம்’ படத்தில். அதில் அவருக்கு ஜோடி நிக்கி கல்ராணி. அக்டோபர் 1-ம் தேதி வெளியாகும் இப்படத்தை, இயக்குநர் சுந்தர்.சியின் உதவியாளர் கதிர்வேலு இயக்கியிருக்கிறார்.
கதாநாயகியை காணோம்!
“‘பேய காணோம்’ என்று படத்துக்கு வித்தியாசமாகத் தலைப்பு வைக்கப்போய், படத்தின் கதாநாயகியைக் காணோம் என்று தேடிக்கொண்டிருக்கிறோம். 90 சதவீத படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், சர்ச்சைக் காணொலி விவகாரத்தில் சிக்கி சிறையில் இருக்கிறார் எங்கள் படத்தின் கதாநாயகி. அவரைச் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு வந்தோம். இப்போது ஜாமீன் கிடைத்துவிட்டதால் மீதமுள்ள 10 சதவீதத்தையும் முடித்து வெளியிட்டுவிடுவோம்.” என்று மிரட்சியுடன் சொல்கிறார் இப்படத்தின் இயக்குநர் செல்வ அன்பரசன். அந்தக் கதாநாயகி மீரா மிதுன்!