

கடந்த பத்து நாட்களாகவே சமூக வலைதளங்களில் ‘நீரஜா’ என்ற பெயர் தொடர்ந்து அடிபட்டுக்கொண்டிருக்கிறது. நீரஜாவின் குரல் பதிவுகள், புகைப்படங்கள், வீடியோ பதிவுகளை நெட்டிசன்கள் தொடர்ந்து பகிர்ந்தபடி இருக்கிறார்கள். இவையெல்லாம் கடந்த வாரம் வெளியான ‘நீரஜா’ படத்தின் தாக்கம். யார் இந்த நீரஜா?
நீரஜா பனோட், இந்தியாவின் ‘அசோக் சக்ரா’ விருது பெற்ற முதல் இளம் பெண். அமெரிக்கா, பாகிஸ்தான், இந்தியா மூன்று நாடுகளும் இவருக்கு விருதுகள் வழங்கி கவுரவித்திருக்கின்றன. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்குமுன், ‘பான் அம்’ விமானம் 73 பாலஸ்தீன தீவிரவாதிகளால் கராச்சியில் கடத்தப்பட்டபோது, நூற்றுக்கணக்கான பயணிகளைக் காப்பாற்றும் போராட்டத்தில் தன் உயிரை விட்ட விமானப் பணிப்பெண். இவரது அர்த்தமுள்ள வாழ்க்கையை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ராம் மாதவானி.
பாலிவுட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே ‘பயோபிக்’வகைத் திரைப்படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுவருகிறது. இப்படி வெளிவந்த திரைப்படங்களில், சிலரின் வாழ்க்கைக் கதைகள் திரைமொழியில் எடுபட்டன. பலரின் வாழ்க்கைக் கதைகள் எடுபடவில்லை. ஆனால், இந்தப் போக்கின் மற்றொரு திரைப்படம் என்று கடந்துவிட முடியாதபடி உருவாகியிருக்கிறது ‘நீரஜா’.
இந்தப் படத்தில் 1986-ல் நடந்த ஒரு தீவிரவாத விமானக் கடத்தலையும், அதன் பின்னணியையும் மனிதத்தை முன்வைத்துப் பேசியிருக்கிறார் இயக்குநர் ராம் மாதவானி. நீரஜாவாக சோனம் கபூர், நீரஜாவின் தாய் ரமாவாக ஷபானா ஆஸ்மி, தந்தை ஹரிஷ்ஷாக யோகேந்திர டிக்கு நடித்திருக்கின்றனர்.
தீவிரவாதிகளின் பிடியில் 17 மணிநேரம் சிக்கிக்கொண்டிருக்கும் பயணிகள், அவர்களைக் காப்பாற்றுவதற்காக நடக்கும் போராட்டம் போன்றவற்றை மட்டும் இந்தத் திரைப்படம் பேசவில்லை. நீரஜாவுக்கும் அவருடைய பெற்றோருக்குமான உணர்வுபூர்வமான உறவையும் அழுத்தமாகப் பேசியிருக்கிறது.
திருமணமான இரண்டே மாதங்களில், வரதட்சணைக் கொடுமையால் பெற்றோர் வீட்டுக்கு வந்துவிடுகிறார் நீரஜா. அதற்குப் பிறகு, தன் கனவான விமானப் பணிப்பெண் வேலையையும், ‘மாடலிங்’கையும் தொடர்கிறார். விமானக் கடத்தலையும், நீரஜாவின் வாழ்க்கைச் சம்பவங்களையும் திரைக்கதையில் இணைத்த விதம் படத்தை வலுவானதாக மாற்றியிருக்கிறது.
படம் முடிந்த பிறகும் மனதை விட்டு நீங்க முடியாதபடி சில காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குநர் மாதவானி. விமானம் கடத்தப்பட்ட செய்தியை ஹரிஷ் மனைவியிடம் தொலைபேசியில் சொல்லும் காட்சி, ஜெய்தீப், நீரஜாவின் விளம்பர பேனரைப் பார்க்கும் காட்சி, கடைசியாக நீரஜா கிரீம் பிஸ்கட் சாப்பிடும் காட்சி; இந்த மூன்று காட்சிகளும் நாடகத்தன்மையில்லாமல் மிக இயல்பாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. நீரஜாவுக்கும் ஜெயதீப்புக்குமான காதல் இரண்டே காட்சிகளில் சொல்லப்படுகிறது. காதலின் இனிமையையும் சோகத்தையும் அழகாகப் பதிவுசெய்கிறது படம். ஆனால், கடத்தல் காட்சிகளில் பாலிவுட்டுக்கே உரிய மிகைப்படுத்துதலை இயக்குநர் தவிர்த்திருக்கலாம்.
நீரஜாவாகத் திரையில் வாழ்வதற்கு சோனம் நிறைய முயற்சிசெய்திருக்கிறார். ஷபானா ஆஸ்மியின் நடிப்பு, கடைசிப் பதினைந்து நிமிடங்கள் படத்தைத் தாங்கிப்பிடிக்கிறது. இவர்கள் இருவரின் நடிப்பும் திரையில் அம்மா-பெண் உறவை உணர்வுபூர்வமாகப் பதிவுசெய்கிறது. அதையும் மீறிச் சில காட்சிகளில் சோனம் கபூரின் பழைய கதாபாத்திரங்களின் சாயல் வெளிப்படவே செய்கின்றன. யோகேந்திர டிக்குவின் நடிப்பு மனதில் நிற்கிறது. ஒருசில காட்சிகளில் வந்தாலும், ஜெயதீப்பாக நடித்திருக்கும் இசையமைப்பாளர் சேகர் ரவ்ஜானி தனக்கு நடிக்கவரும் என்பதை முதல் படத்திலேயே நிரூபித்திருக்கிறார்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கேமரா விமானத்துக்குள்தான் பயணிக்கிறது. நிறைய ‘குளோஸ் அப்’ காட்சிகள். ஆனால், கொஞ்சமும் சலிப்பை ஏற்படுத்தாத வகையில் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மித்தேஷ் மிர்ச்சந்தானி. மோனிஷாவின் படத்தொகுப்பும் படத்துக்கு வலுசேர்க்கிறது.
ராஜேஷ் கன்னாவின் விசிறியான நீரஜாவுக்கு, ‘ஆனந்த்’ படத்தில் வரும் ‘ஜிந்தகி படி ஹோனி சாஹியே! லம்பி நஹி!’ (வாழ்க்கை பெரியதாக இருக்க வேண்டும், நீளமானதாக அல்ல) என்ற வசனத்தின் மூலமே அஞ்சலி செலுத்தியிருக்கிறார் இயக்குநர் ராம் மாதவானி. தீவிரவாதம் கொடூரமானது. ஆனால், மனிதத்தை எதனாலும் வீழ்த்த முடியாது என்பதைத் தன் வாழ்க்கையின் மூலம் நிரூபித்திக்கிறார் நீரஜா.
பாலிவுட்டில் ஹீரோக்கள் இல்லாமலும் படங்கள் சூப்பர் ஹிட்டாகும் என்பதை நிரூபிக்கும் மற்றுமொரு படமாக ‘நீரஜா’ இருக்கிறது.