

இயக்குநர் சற்குணத்தின் உதவியாளரும் சிறுகதை எழுத்தாளருமான ஈஸ்வர் கொற்றவை இயக்கியிருக்கும் படம் ‘சூ மந்திரகாளி’. ‘நான் கண் கூடாகப் பார்த்து அறிந்த ஒரு ஏடாகூடமான கிராமத்தின் கதை’யைப் படமாக்கியிருப்பதாகக் கூறும் அவருடன் ஒரு சிறு உரையாடல்..
இது மூடநம்பிக்கைக்கு ஆதரவான படமா, எதிரான படமா?
நூறு சதவீதம் எதிரான படம்தான். எனக்குச் சொந்த ஊர் சேலம். இந்த மாவட்டத்தில் சில வித்தியாசமான கிராமங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று பாரப்பட்டி. இங்கே பில்லி, சூன்யம் வைப்பது எடுப்பது என்று கூறிக்கொண்டு, பரம்பரைத் தொழிலாக அதைச் செய்துவரும் பல பழங்குடிக் குடும்பங்கள் வசித்து வருகின்றன. ‘அது வெறும் ஏமாற்றுப் பிழைப்பு’ என்பதை உணராமல் படித்தவர்கள் கூட வருவதைப் பார்த்திருக்கிறேன். மனிதனுடைய ‘பயம்’தான் இதைத் தொழிலாகச் செய்பவர்களுக்கு அனுகூலம். ஆனால், இத்தொழிலைச் செய்யும் குடும்பங்களிலிருந்து பலர் படித்து முன்னேறி, அந்த ஊரிலிருந்தே குடிபெயர்ந்துபோவதையும் கண் கூடாகப் பார்த்தேன். அந்த கிராமத்தின் பாதிப்பில் எழுதிய சிறுகதையை எனது குருவான இயக்குநர் சற்குணத்திடம் சொன்னேன். அதைப் படமாக்க உதவியதுடன் படத்தையும் அவரே ரிலீஸ் செய்கிறார்.
என்ன கதை?
பங்காளியூர் என்கிற கிராமம். ஒரு காலத்தின் மின்சாரம்கூட இல்லாத அந்த கிராமம் நவீனமாக மாறும்போது மக்களுக்குள் பொறாமை தீ பற்றிக்கொள்கிறது. ஒருவரை ஒருவர் கெடுக்க நினைத்து பில்லி சூன்யத்தை நம்பி, அதில் பணத்தை இழக்கிறார்கள். இதே ஊரில் பிறந்து வளர்ந்த பட்டதாரியான நாயகன், அவர்கள் பாணியிலேயே அவர்களைத் திருத்த ஒரு திட்டம் போடுகிறான். ஆனால், அழகான பெண்ணைக் காதலிக்கும் அவன் மீதும் பொறாமை கொண்டு, காதலர்களைப் பிரிக்க பில்லி சூன்யத்தை நாடுகிறார்கள். இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்ட அந்த காதலர்கள், அந்த கிராமத்தை எப்படித் திருத்தினார்கள் என்பதை, இயல்பான நகைச்சுவையுடன் ‘ சூ மந்திரகாளி’ படத்தில் சொல்லியிருக்கிறேன்.
முழுவதும் அறிமுக நடிகர்களா?
ஆமாம்! மூடநம்பிக்கையை ஆரோக்கியமான நகைச்சுவை கொண்டு சாடியிருக்கிறோம். இக்கதைக்களனுக்கு ‘இமேஜ்; இல்லாத அறிமுக நடிகர்கள் மிக அவசியம். நாயகன், நாயகி உட்பட மொத்தம் 27 கதாபாத்திரங்கள். அத்தனை பேரும் புதியவர்கள். கார்த்திகேயன் வேலு கதாநாயகனாக அறிமுகமாகிறார். மென்பொருள் பொறியாளரான அவர், விஜய்சேதுபதியுடன் ‘றெக்க’ படத்தில் நடித்தவர். கடந்த 8 வருடமாக சினிமா வாய்ப்புக்காகச் சுற்றிக்கொண்டிருந்தவரிடம் திறமை இருந்ததால் தேர்வு செய்தேன். கதாநாயகியாக மூன்று கன்னடப் படங்களில் நடித்துள்ள சஞ்சனா புர்லி தமிழில் அறிமுகமாகிறார். அன்னம் மீடியாஸ் சார்பாக திருமதி அன்னக்கிளி தயாரித்துள்ளார்.