

சந்தானம் ஒரு மின்வாரிய ஊழியர். அவருடைய பால்ய நண்பர் யோகிபாபு. கால இயந்திரத்தை உருவாக்க முயலும் விஞ்ஞானிகள் குழுவில் எதிர்பாராமல் இடம்பெறும் யோகிபாபு மூலம், சந்தானம் தன்னுடைய கடந்த காலத்துக்குப் பயணித்து, ஏழு ஆண்டுகளுக்குமுன் நடந்தேறிய தன்னுடைய திருமணத்தை நிறுத்த விரும்புகிறார். இந்த ஊடாட்டத்தில், காலத்தால் வேறுபட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட சந்தானங்கள் காலவெளியில் உலவுகிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டால் என்னவாகும்? சந்தானத்தின் முயற்சி வென்றதா, இல்லையா என்பது படம்.
சந்தானத்தின் பிரத்யேக நகைச்சுவை பாணியை ரசிக்க விரும்புவோருக்கு ‘ஜீ5’ ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் ‘டிக்கிலோனா’ முழுமையான விருந்து. தனது உடனடி-பதிலடி வசனங்களை நம்பியே இதிலும் களமிறங்கியிருக்கிறார். அதற்கேற்ப ஒரு சில குபீர் சிரிப்புகளுக்கும் உத்தரவாதம் உண்டு. பாலியல் தோய்த்த பகடிகள், உருவக்கேலி, மாற்றுத் திறனாளி, பெண்கள் குறித்து வரம்பு மீறும் வசனங்கள் ஆகியவற்றை நகைச்சுவையின் பெயரில் கடக்கும் படங்களில் ‘டிக்கிலோனா’வும் சேர்கிறது.
காலப் பயணம் எனும் அறிவியல் புனைவில், வாழ்க்கைத் துணை, திருமண வாழ்வின் பிணக்குகள் என உணர்வுக் குவியலை இணைத்து திரைக்கதை வழியே இயக்குநர் கார்த்திக் யோகி கபடி ஆடிய விதம் ஈர்க்கிறது. 2020 - 2027 இடையிலான குறுகிய காலப்பயணம் என்பதால் காட்சிகள் பெரியளவில் மாற்றங்கள் இல்லாது வருகின்றன. ஆனபோதும் சந்தானத்தின் ஆஸ்தான பகடிக்கு ஆளாகும் ’டாஸ்மாக்’கை முன்னிறுத்திய சாடல்கள் ரசிக்க வைக்கின்றன.
பெரும்பாலான காட்சிகளில் வாயளப்பையே நடிப்பாகச் சமாளிக்கிறார் சந்தானம். லொள்ளு சபா தாக்கத்திலிருந்து அவ்வப்போது தன்னை விடுவித்துக் கொள்வது அவருக்கும் ரசிகர்களும் நலம் பயக்கும். சந்தானத்தின் தோழனாக வரும் யோகிபாபுவுக்கான இடம் குறைவு. மாறாக கிளைமாக்ஸில் தோள் சேரும் ‘லொள்ளு சபா’ மாறனுடனான சந்தானத்தின் காமெடி களைகட்டுகிறது. அனகா, ஷிரின் என்று இரண்டு நாயகிகளும் பதுமைகளாக வந்து போகின்றனர். ஆனந்த் ராஜ், முனீஸ்காந்த், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இருந்தபோதும் அவர்கள் இடம்பெற்றுள்ள காட்சிகளில் அநியாய நகைச்சுவை வறட்சி.
‘கே.ஜி.எஃப்’ பாணியில் அறிமுகமாகி திருப்பத்தோடு முடியும் நிழல்கள் ரவி கதாபாத்திரத்தில் தொனித்த வித்தியாசத்தைப்போல் இதர முக்கிய பாத்திரங்களுக்கும் மெனக்கெட்டிருக்கலாம். ‘மைக்கேல் மதன காமராஜன்’ திரைப்படத்தின் ‘பேர் வச்சாலும்..’ ரீமிக்ஸ் பாடல் ஆறுதல். திரைக்கதைக்காகப் பார்க்கலாம்.