

கலைநயம் மிக்க கிராமத்து அரண் மனை. அதில் தனது மூத்த மகன், மருமகள், பேரன் மற்றும் வேலைக் காரர்களுடன் வசிக்கிறார் ஜமீன்தார் ராதாரவி. ஊரிலுள்ள அம்மன் கோயிலில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடப்பதால் ஒரு வாரம் பூஜை, புனஸ்காரங்கள் கிடையாது. இந்தச் சமயத்தில் அம்மனின் சக்தி வெளிப்படாது என்பது ஐதீகம். அந்தச் சமயம் பார்த்து அமானுஷ்ய சக்தி ஒன்று தன் இருப்பிடத்திலிருந்து வெளிப்பட்டு அரண்மனை வீட்டுக்குள் புகுந்துகொள்கிறது.
அந்த ஆவியின் தாக்குதலால் ராதாரவி படுத்த படுக்கை யாகிறார். தகவல் அறிந்து ஓடோடி வருகிறார் வெளிநாட்டில் வசிக்கும் அவரது இளைய மகன் முரளி (சித்தார்த்). கூடவே தனது காதலி அனிதாவையும் (த்ரிஷா) அழைத்து வருகிறார். வீட்டிலுள்ள வர்கள் அடுத்தடுத்து பலியாக, அரண்மனையை அச்சம் ஆக்கிரமிக்கிறது. த்ரிஷாவின் அண்ணன் சுந்தர்சி. சித்தார்த் தைக் காப்பாற்றக் களம் இறங்குகிறார். ஆவியின் கொலை வெறிக்குக் காரணம் என்ன? அதன் அடுத்த இலக்கு யார்? அதை எப்படிக் கட்டுப்படுத்துவது?
முதல் பாகத்தின் பழிவாங்கும் ஆவிக் கதையின் வார்ப்பிலிருந்து துளிக்கூட விலகாமல் திரைக்கதை அமைத்திருக் கிறார் சுந்தர் சி. படத்தின் திரைக்கதை எதிர்பார்த்த விதத்திலேயே நகர்வதால் விறுவிறுப்பு குறைகிறது.
பேய்க்கு இணையாக நகைச்சுவைக் கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். சூரி, கோவை சரளா, மனோபாலா காட்சிகள் அவ்வப்போது கிச்சுகிச்சு மூட்டுகின்றன. யார் பேய் என்ற குழப்பத் தால் ஏற்படும் ரகளைகளும் த்ரிஷா வேன் ஓட்டிக்கொண்டு போகும் காட்சியில் அவரிடமிருந்து தப்ப குடும்பத்தினர் எடுக்கும் முயற்சிகளும் சிரிப்பில் ஆழ்த்துகின்றன.
அரண்மனை 1 படத் தின் நடிகர்களான ஹன்சிகா, மனோபாலா, கோவை சரளா, சுந்தர் சி ஆகியோர் தொடர, சித்தார்த், த்ரிஷா, பூனம் பாஜ்வா, சூரி புதிதாக இணைந்திருக் கிறார்கள். த்ரிஷாவை க்ளாமர் கூட்டி அழகாகக் காட்ட வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் இயக்குநர், திரைக் கதையில் அவருக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. முதல் பாதியில் கிளாமரையும் பீதியையும் வெளிப்படுத்தும் த்ரிஷா இரண்டாம் பாதியில் பேயாக மாறி மிரட்டுகிறார். ஆனால், அவரைப் பார்த்தால் யாருக்கும் பயமே வரமாட்டேன் என்கிறது. ஹன்ஸிகா வுக்குச் சிறிய பாத்திரம்தான் என்றாலும் ஃப்ளாஷ்பேக் காட்சியில் அவருக்கு நடிக்க நல்ல வாய்ப்பு. இதே காட்சியில் ராதாரவியின் நடிப்பும் குறிப்பிடத்தக்கது. படம் முழுவதும் வந்தாலும், சித்தார்த் துக்கு சவாலாக எதுவும் இல்லை. மூன்றாவது கதாநாயகியாக வந்துபோகும் பூனம் பாஜ்வாவை வைத்து பூச்சாண்டி காட்டுவதோடு சரி. சுந்தர் சி-க்கு வழக் கம்போலவே நடிப்பதற்கு மெனக் கெட வேண்டியிராத பாத்திரம். அலட்டிக் கொள்ளாமல் புஜ பலம் காட்டுகிறார்.
பேய் வரும் காட்சிகளைத் தரமான கிராஃபிக்ஸில் கொண்டுவர வேண்டும் என்ற மெனக்கெடல் தெரிகிறது. ஆனால் ரசிகர்கள் திடுக்கிட்டு பயப்படும் விதமாகக் காட்சியமைப்பு இல்லை. கிராஃபிக்ஸுக்கு இணையான உழைப்பைத் தந்திருக்கிறார் கலை இயக்குநர். பிரம்மாண்ட அம்மன் சிலை, கலையழகு மிக்க அரண்மனை, பூஜை அலங்காரம், அம்மன் பாடல் எனக் கலை இயக்கம் படத்துக்குப் பெரிய பலம்!
இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதியின் இரைச்சலான இசையில் பாடல் எதுவும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையும் சுமார் ரகம்தான்.
அம்மன் அருளால் பேய் விடைபெற்றுச் சென்ற பிறகு, பேயின் இருப்பிடமாக இருந்த பொம்மை எழுந்து நடந்து மீண்டும் அரண்மனைக்குள் நுழைகிறது. இந்த இடத்தில் படம் முடிவதைப் பார்க் கும் போது இது 3-ம் பாகத்துக்கான அச்சாரமாக தோன்று கிறது.
அதிலாவது புதிய கதையை எதிர்பார்க்கலாமா இயக்குநரே?