

கயல் படத்தில் அறிமுகமான ஆனந்திக்கு அந்தப் படத்தில் கிடைத்த பெயரை விட சர்ச்சைக்குள்ளான ‘ த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தின் மூலம் சற்று அதிகமாகவே கிடைத்திருக்கிறது. அந்தப் படத்தின் நாயகன் ஜி.வி. பிரகாஷுடன் மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கும் அவரை நேரில் சந்தித்தபோது எல்லாக் கேள்விகளுக்கு பளிச்சென்று பதில் வந்து விழுந்தது.
‘விசாரணை’ படத்துல இரண்டே இரண்டு காட்சியில மட்டும் வர்றீங்களே?
சர்வதேச அளவுல ஒரு மரியாதை இந்தப் படத்துக்குக் கிடைச்சிருக்கு. இதுல, வீட்டு வேலை செய்யுற சாதாரண குடும்பத்து பொண்ணு. இரண்டு காட்சின்னாலும் என் கேரக்டரை ரொம்ப பெயினா உணருவீங்க. மறுபடியும் நான் எப்போ வருவேன்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஆனா வரவே மாட்டேன். அது இன்னும் பெயினா இருக்கும். வெற்றிமாறன் சாரோட படத்துல நடிக்கணுங்கிற என்னோட ஆசை. இதுல நிறைவேறிடுச்சு. இந்தப் படத்துல நடிச்சத பெருமையா நினைக்கிறேன்.
மறுபடியும் ஜி.வி. பிரகாஷ் கூட நடிக்கிறீங்களே?
அது தப்பா என்ன!? சாம் ஆண்டன் இயக்கத்துல ஜி.வி.பிரகாஷ் ஹீரோ. நான் ஹீரோயின். படத்துக்கு ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ன்னு தலைப்பு வெச்சிருக்காங்க. இது, ஜி.வி.க்கு ஹேட்ரிக் வெற்றிப் படமா இருக்கும். அடுத்து அன்பழகன் இயக்கத்துல பிரபு சாலமன் தயாரிப்புல ‘ஃபைசல்’ன்னு ஒரு படம். அதுல கிராமத்துப் பெண்ணா நடிச்சிருக்கேன். இந்த ரெண்டு படமும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும்.
திரையில் உங்களுக்கு பெஸ்ட் ஜோடின்னு யாரை நினைக்கிறீங்க?
எனக்கு பெஸ்ட் ஜோடின்னா அது ஜி.வி.தான். அவர் என்னொட நல்ல ஃப்ரெண்டு. நிறையக் கத்துக் கொடுப்பார். ரொம்ப பொறுமையானவர். பலவகையான திறமைகளும் கொண்டவர்.
எந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்கணும்னு ஆசைப்படுறீங்க?
அமைதியான பொண்ணா என்னப் பார்க்கத்தான் ஆடியன்ஸ் ஆசைப்படுறாங்கன்னு நினைக்கிறேன். எனக்கு அந்த மாதிரி கேரக்டர்தான் சூட் ஆகும்னு தோணுது. அதனால அது மாதிரி கேரக்டர் செய்யத்தான் ஆசைப்படுறேன்.
ஒரு படம் கமிட் ஆகும் முன்னர் கதை கேப்பீங்களா?
இதற்கு முன்பு நடிச்ச இரண்டு படங்களுக்கும் கதையே கேக்காம நடிச்சேன். அதனால சில பிரச்சினைகள் வந்துட்டுது. அதனால நான் இப்ப நடிக்குற படங்களுக்கெல்லாம் ஸ்கிரிப்ட் கேட்டுட்டுத்தான் நடிக்கிறதுக்கு சம்மதிக்கிறேன்.
த்ரிஷா இல்லன்னா நயன்தாராவுக்கு ஒழுங்கா கதை கேட்டிருந்தா அதுலேர்ந்து தப்பிச்சிருக்கலாம்ல?
நான்தான் சொன்னேனே.. அதைப்பத்தி இப்போ பேசினா சர்ச்சையாயிடும். படம் வெளியாகி ஓடியும் முடிஞ்சுடுச்சு. அதைப்பத்தி இனிமே பேச வேண்டாமே.
எப்படி இவ்ளோ நல்லா தமிழ் பேசுறீங்க?
பிரபு சாலமன் சார்க்குத் தான் நன்றி சொல்லனும். அவருதான் கயல் படத்துல நடிக்கும்போது என்ன தமிழ் கத்துக்க வெச்சாரு. தமிழ் கத்துக்கிட்டது எனக்கு நிறைய வாய்ப்புகளை கொண்டு வருது.
தமிழ், தெலுங்கு தவிர வேற மொழிப் படத்துல நடிக்க ஆசை இருக்கா?
ஆசை இருக்கு. எனக்கு மலையாள நடிகர் நிவின் பாலிகூட நடிக்க வாய்ப்பு வந்துச்சு. ஆன டேட்ஸ் இல்லாததால அந்த வாய்ப்பு போய்டுச்சி. மலையாளத்துல மறுபடியும் வாய்ப்புகள் வந்தால் நடிப்பேன்.
உங்களுக்குப் பிடிச்ச ஹீரோ யாரு? ஹீரோயின் யாரு?
ஹீரோன்னா, பவன் கல்யாண், இளையதளபதி விஜய். ஹீரோயின், காஜல்.
ஒரு நடிகைக்குத் தேவையான முக்கியத் தகுதி என்னன்னு நினைக்கிறீங்க?
திறமைதான். நான் நடிச்ச ‘கயல்’ படத்துல நான் மேக்கப் போடல. என்ன ஸ்பெஷலா அழகுபடுத்திக்கிடல. ஆனா அந்தப் படம் ஜெயிச்சுது. அதனால என்ன பொறுத்தவரைக்கும் ஒரு நடிகைக்கு அழகைவிடத் திறமையும் அறிவும்தான் முக்கியம்.
படங்கள்: சாதிக் பாஷா