

உதவி இயக்குநராகச் சிலருக்கு ஒருசில படங்களில் பணியாற்றுவதே பெரும் படிப்பினை. கண்ணன் சுந்தரத்துக்கோ அது பெரும் பட்டியல். அவரது ஆற்றலுக்காக அழைத்து அழைத்துத் தரப்பட்ட பணி வாய்ப்புகள் அவை. ‘சத்தம் போடாதே’, ‘மூன்று பேர் மூன்று காதல்’,‘சிந்து சமவெளி’, ‘கங்காரு’,‘மனிதன்’,‘தேவ்’, ‘மிக மிக அவசரம்’, ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’, ‘சேதுபதி ’, ‘ஜன கண மன’, ‘அனபெல் சேதுபதி’ ஆகிய படங்களின் மூலம் வஸந்த், அஹமத், சாமி, அவினாஷ் ஹரிஹரன் , சுரேஷ் காமாட்சி, ரஜத் ரவிசங்கர், தீபக் சுந்தர்ராஜன் என ஏழு இயக்குநர்களுடன் பணியாற்றி பல்வேறு அனுபவங்களைக் குவித்திருக்கிறார்.
‘‘நான் கோயம்புத்தூர்க்காரன். என் அண்ணன் மூலமா 2003-ம் ஆண்டில் ராடன் மீடியாவின் சீரியல்களில் வேலை செய்ய வாய்ப்பு கிடைச்சது. ‘ருத்ரவீணை’, ‘சிவமயம்’, ‘திருவிளையாடல்' ‘செந்தூர பூவே’, ‘என் தோழி என் காதலி என் மனைவி’ உள்ளிட்ட சீரியல்களில் என்னைப் பட்டை தீட்டிக்கொண்டேன். இலங்கையில் ராடன் புரொடக்ஷன் ஹவுஸ் தொடங்குவதற்கான வேலைகளில் பரபரப்பாக இயங்கியபோதுதான் சினிமாவுக்குள் ஐக்கியமானேன். அந்த மடைமாற்றத்துக்குக் காரணம் வஸந்த் சார் தான். அப்போதான் எனக்கான பாதை தெளிவாச்சு.
எதை நான் தேடிக்கொண்டிருந்தேனோ அது என்னைத் தேடிக் கொண்டிருந்தது. வஸந்த் சார் ‘சத்தம் போடாதே’ படத்துல வேலை செய்யக் கூப்பிட்டார். அப்போ தொடங்கின சினிமா பயணம், இப்போ 13 வருஷங்களுக்கு மேல் தொடருது’’ என்று மூச்சு விடாமல் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட கண்ணன் சுந்தரம் தற்போது ‘ஜன கண மன’ படத்தில் இணை இயக்குநராக சுற்றிச் சுழன்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
‘‘இணை இயக்குநர்னா ரொம்ப அக்கறை, அர்ப்பணிப்போட இருக்கணும். நடிகர்களுக்கு புரோகிராம் சொல்றது, ஷெட்யூல் பண்றது இது இரண்டுமே ரொம்ப ரொம்ப முக்கியம். பட்ஜெட்டைத் தீர்மானிப்பதும் இவைதான். அதில் அனுபவம் அதிகம். அசோசியேட் டைரக்டர்கிட்ட பொறுப்பை ஒப்படைச்சாலும் காஸ்டியூம், டிசைனிங், ஆர்ட் டிபார்ட்மென்ட் என எல்லாம் சரியா இருக்கா, இல்லையான்னு மூன்றாவது கண் கொண்டு ‘செக் லிஸ்ட்’டைக் கண்காணிச்சுக்கிட்டே இருக்கணும். அப்போதான் சிக்கல்களைக் களைஞ்சு படப்பிடிப்புத் தளத்துல சூழ்நிலையைச் சரியாக் கையாள முடியும்’’ என்று கூறும் கண்ணன் சுந்தரம், படப்பிடிப்புத் தளத்தில் நடந்த எதிர்பாராத சம்பவத்தைக் கையாண்ட அனுபவத்தைப் பகிர்ந்தார்.
‘‘ ‘தேவ்’ படப்பிடிப்பு குலுமணாலியில் நடந்தது. அப்போ திடீர் வெள்ளம், நிலச்சரிவால் படக்குழ மத்தியில பதற்றம் தொத்திகிச்சு. பாறைகள் உருள, கார், பேருந்துகள் அடிச்சிட்டுப் போக, மொத்தமா ஸ்தம்பிச்சுப் போயிட்டோம். பாலம் உடைஞ்சு போனதால் கார்த்தி சார் ஒரு நாள் இரவு முழுக்க கார்ல இருக்க வேண்டிய சூழல். ஆனா, இதுமாதிரியான தருணங்கள்தான் நம்ம பலத்தைக் கூட்டும்னு உணர்ந்து பொறுமை காத்தோம். ஒரு அசோசியேட்டா நான் அந்த சமயத்துல முன்னால் நின்னேன். அப்புறம் கூலா படப்பிடிப்பை முடிச்சோம்.
அதே படப்பிடிப்புல, ஒரு நாள் ரகுல் ப்ரீத் சிங் - ரம்யா கிருஷ்ணன் நடித்த வசனக் காட்சியை வீடு ஒன்றில் ஷூட் பண்ணோம். அப்போ ரகுலால் வசனத்தை சரியாகச் சொல்ல முடியலை. பெரிய சீன் என்பதால் கொஞ்சம் சிரமப்பட்டாங்க. ரகுல் - ரம்யா கிருஷ்ணன் ரெண்டு பேருக்கும் ஒரே சமயத்தில் நான்தான் ப்ராம்ப்டிங் செஞ்சேன். நம்ம டைமிங்குக்கு அவங்க வரமாட்டாங்க. அவங்க டைமிங்குக்கு நாம போகணும். எந்த இடத்துல கேப் விடுறாங்களோ, அவங்க ரியாக்ஷனுக்குப் பிறகு நாம சொல்ல ஆரம்பிக்கணும். அப்போதான் சரியா வரும். அந்த நுட்பம் அனுபவத்தால கை வந்ததால் ரொம்ப சுலபமா அந்த சீன் முடிஞ்சது. ப்ராம்ப்டிங்னு தெரியாத அளவுக்கு நேர்த்தியா இயல்பா காட்சி இருக்கும். இதை ஞாபகம் வைச்சிருந்து அந்தப் படத்தோட பிரஸ்மீட்ல ஹீரோயின் என்னைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொன்னதை மறக்கமுடியாது” எனும் கண்ணன் சுந்தரத்தை விரைவில் இயக்குநர் அஹமத்தின் ஆதரவில் அறிமுக இயக்குநராகச் சந்திக்கலாம்.