

“இருபத்தைந்துக்குள் எல்லாம் முடிந்து விட்டது என நினைக்கும் ஒரு இளைஞன், காலண்டர் ஒருபோதும் மனதின் வயதை தீர்மானிக்க முடியாது என வாழ்க்கையை உற்சாக ஊற்றாக வைத்திருக்கும் அறுபத்தைந்து வயது மூதாட்டியிடம் ஞானம் பெறுவதுதான் இந்தப் படத்தின் கதைக் களம்” என்று தொடங்கினார் ‘கதிர்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் தினேஷ் பழனிவேல். பல குறும்படங்களை இயக்கிய அனுபவத்துடன் முழுநீளத் திரைப்படம் இயக்க வந்திருக்கும் அவரிடம் உரையாடியதிலிருந்து…
ஒரு புதுமுகம் கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கு கதாபாத்திரத்தின் பெயரையே தலைப்பாக வைக்கும் தைரியம் எப்படி?
கதை கொடுத்த தன்னம்பிக்கைதான் காரணம். பயணங்கள், புதிய மனிதர்கள், புதிய இடங்கள், இயற்கை யுடனான தரிசனம் ஆகியவை வாழ்க்கையில் பற்றுதலை உண்டாக்கக் கூடியவை. இந்தப் படத்தின் கதாநாயகன் கதிர், ஒரு கிராமத்து இளைஞன். பொறியியல் கல்லூரியில் படிக்கும்போது எதிர்கொண்ட சில சம்பவங்களால் மனமொடிந்து போகிறான். படிப்பு முடிந்ததும், தன்னிலை மறந்து ஊர் சுற்றிக்கொண்டிருந்தவனை அப்பா கண்டிக்கிறார். அவரிடம் கோபித்துக்கொண்டு சென்னை மாநகரத்துக்கு வருகிறான். அங்கே தன்னுடைய கல்லூரி நண்பன் செந்திலின் அறையில் தங்குகிறான். அந்த அறையை வாடகைக்கு விட்டிருக்கும் வீட்டின் உரிமையாளர் சாவித்திரி அம்மாவின் கண்டிப்பும் ஒழுங்கும் கதிரை எரிச்சலூட்டுகிறது. இதனால் சாவித்திரி அம்மாவுடன் அடிக்கடிச் சண்டையிடுகிறான் கதிர். ஒரு கட்டத்தில் சாவித்திரி அம்மாவின் நல்ல குணங்களைத் தெரிந்து ராசியாகிறான். பாட்டியின் கடந்த காலக் கதையைக் கேட்டு, அடியோடு மாறிப்போகும் கதிர், ஒரு முக்கியமான முடிவெடுக்கிறான். பொறியியல் கல்வி தந்த அறிவைத் தன்னுடைய கிராம மக்களின் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்த சொந்த கிராமத்துக்கே திரும்புகிறான். இதில் வாழ்க்கையில் பற்றற்றுத் திரியும் இளைஞர்களின் பிரதியாக கதாநாயகன் வருகிறார். மூத்தவர்களின் அனுபவம்தான் இளைய தலைமுறைக்கான வரம் என்பதை திரைக்கதை எப்படி வெளிக்கொண்டுவருகிறது என்பதுதான் படம்.
ஒரு குறும்படத்துக்கான கதைபோல் தோன்றுகிறதே?
கதிரின் கல்லூரி வாழ்க்கையில் நடக்கும் சம்பவங் களும் சாவித்திரிப் பாட்டியின் ‘பிளாஷ் -பேக்’ கதையும் பார்வையாளர்களுக்கு இரண்டு மாறுபட்ட உணர்வுகளைக் கொடுக்கும். சென்னையில் நகரும் கதையில் அமைக்கப் பட்டுள்ள சம்பவங்களுடன் பார்வையாளர்கள் மேலும் ஒன்றிப்போவார்கள். இது அனைத்து வயதினருக்குமான வாழ்க்கை உணர்த்த வரும் கதை.
கதிராகவும் சாவித்திரியாகவும் யார் நடிக்கிறார்கள்?
கதாபாத்திரத்தில் கதாநாயகனாக வெங்கடேஷ் அறிமுகமாகிறார். சாவித்திரி பாட்டியாக நடித்து வருபவர் ‘ஒரு முத்தசி கதா’ மலையாளப் படத்தின் மூலம் புகழ்பெற்றிருக்கும் ரஜினி சாண்டி. கதையைக் கேட்டதுமே துள்ளிக் குதித்தார். அவரைத் தமிழுக்குக் கொண்டுவருவது எங்களுக்குக் கிடைத்த கௌரவம். இந்த இரண்டு பேருடன் சந்தோஷ் பிரதாப், பவ்யா ஆகியோர் நடித்து வருகிறார்கள். ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ராமன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர்தான் சந்தோஷ் பிரதாப்.
படக்குழுவைப் பற்றிக் கூறுங்கள்?
தேசிய விருதுபெற்ற ‘பாரம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன்தான் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அதேபோல் ‘அங்கமாலி டைரீஸ்’, ‘ஜல்லிக்கட்டு’ உட்பட 50-க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களுக்கு இசையமைத்துவிட்ட முன்னணி இசையமைப்பாளர் பிரசாந்த் பிள்ளை இசையமைக்கிறார். ஏற்கெனவே இரண்டு தமிழ்ப் படங்களுக்கு இவர் இசையமைத்திருந்தாலும் இந்தப் படத்தில் கதையை நகர்த்திச் செல்லும் 5 பாடல்களை கொடுத்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு புஷ்பவனம் குப்புசாமி ஒரு பாடலைப் பாடிக் கொடுத்திருக்கிறார்.