சோனாக்‌ஷிக்கு முதலிடம்

சோனாக்‌ஷிக்கு முதலிடம்
Updated on
1 min read

நான்கு நாட்களுக்கு முன் (ஜூன் 2) தனது பிறந்த நாளைக் கொண்டாடிய சோனாக் ஷி சின்ஹாவுக்கு இன்று முக்கியமான நாள். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - காஜல் அகர்வால் நடித்த ‘துப்பாக்கி’ படத்தின் இந்தி மறு ஆக்கப் படமான ‘ஹாலிடே’ இன்று வெளியாகிறது. முருகதாஸ் இயக்கத்தில் அக் ஷய் குமார் நடித்திருக்கும் இந்தப் படத்தில் சோனாக் ஷிதான் கதாநாயகி.

அறிமுகப் படத்திலேயே சல்மானுக்கு ஜோடியானதும், ‘தபாங்’ திரைப்படத்தின் மெகா வெற்றியும் சோனாக் ஷியை பாலிவுட்டின் சக்தி வாய்ந்த ஹீரோயின்களில் ஒருவராகப் பார்க்க வைத்தது. பிரபுதேவா இயக்கத்தில் அக் ஷய் குமாருக்கு ஜோடியாக இவர் நடித்த இரண்டாவது படம் ‘ரௌடி ரத்தோர்’. அந்தப் படத்தின் எக்குத்தப்பான வெற்றிக்குப் பிறகு நிற்கக்கூட நேரமில்லாமல் ஓட வைத்த சோனாக் ஷியின் வசீகரம் அவரை ரஜினிக்கு ஜோடியாக்கியிருக்கிறது.

இந்திப் பட உலகில் தனிமுத்திரை பதித்த சத்ருஹன் சின்ஹாவின் மகளான சோனாக்‌ஷி படித்தது ஃபேஷன் டிஸைன். ஆனால் பள்ளி கல்லூரி நாட்களில் டென்னிஸ், பேஸ்கட்பால், வாலிபால் ஆகிய விளையாட்டுகளில் கில்லாடியாக இருந்திருக்கிறார். “ ஒரு விளையாட்டு வீராங்கனைக்குரிய உடல்மொழி இயல்பிலேயே என்னிடம் உண்டு. அதனால் ஹாலிடே படத்தில் ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்ததில் சிரமம் இருக்கவில்லை” என்று கூறியிருக்கும் சோனாக் ஷி, ஹாலிடே படத்தில் ஒரு நிஜ பாக்ஸராகத் தெரிய வேண்டும் என்பதற்காக ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற விஜேந்தர் சிங்கிடம் பாக்சிங் பயிற்சி எடுத்துக்கொண்டு நடித்திருக்கிறார்.

லிங்கா படத்தில் சோனாக் ஷி சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத் தின் ராயல் அழகியாக நடிக்கிறார். சோனாக் ஷி தவிர அனுஷ்கா இங்கிலாந்து நட்சத்திரம் லாரன் ஜெ. இர்வின் என்று மேலும் இரண்டு நாயகிகள் படத்தில் இருக்கிறார்கள். கதைப்படி இவர்களும் 1940-ம் ஆண்டு சுதந்திரப் போராட்டம் சூடுபிடித்திருந்த காலகட்டத் தமிழகத்தில் நடக்கும் ப்ளாஷ்பேக்கில் வரும் கதாபாத்திரங்களாக வருகிறார்கள். இந்த மூன்று ஹீரோயின்களில் சோனாக் ஷியின் கையே லிங்காவில் ஓங்கியிருக்கும் என்கிறது இயக்குநர் கே.எஸ். ரவிகுமாரின் உதவியாளர்கள் வட்டாரம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in