

அஜித் - கௌதம் மேனன் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பைச் சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் இரவு நேரங்களில் இடைவிடாமல் நடத்திவருகிறார் கௌதம் மேனன். அஜித் வீடு இருப்பது கொட்டிவாக்கம் அருகிலுள்ள நீலாங்கரையில். அஜித்தின் வசதிக்காக இயக்குநர் இங்கே படப்பிடிப்பை நடத்தவில்லை. கிழக்குக் கடற்கரை சாலையில் நிகழும் ஒரு குற்றம் படத்தின் முக்கியக் காட்சியாக இடம்பெறுகிறதாம். இதைத் துப்புத் துலக்க வருகிறார் அஜித். இந்தப் படத்தில் இருவேறு தோற்றங்களில் நடிக்கும் அஜித்தின் இரண்டாவது தோற்றம் எப்படியிருக்கும் என்பதுதான் தற்போது அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
இந்தப் படம் பற்றிய தகவல்களை ஒரே நேரத்தில் அள்ளித் தெளித்துவிடாமல் ஒவ்வொன்றாக வெளிப்படுத்திவரும் கௌதம் மேனன், முதன்மைக் கதாநாயகியாக நடித்துவரும் அனுஷ்காவை இந்த படத்தில் சொந்தக்குரலில் பேசவைப்பது என்று முடிவு செய்திருக்கும் தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
அனுஷ்கா இதுவரை நடித்துள்ள படங்களில் இருந்து இந்தப் படத்தில் ஏற்றி ருக்கும் கதாபாத்திரம் முற்றிலும் வேறுபட்டது என்று சொல்லும் கௌதம் மேனன், அந்தக் கதாபாத்திரத்தின் தனித்தன்மையை மேலும் மெருகேற்றும் வண்ணம் அனுஷ்காவையே சொந்தக் குரலில் டப்பிங் பேசும்படி சொல்லி யிருக்கிறார். முதலில் பயந்து பின்வாங்கிய அனுஷ்காவின் குரலை, லைவ் ஒலிப்பதிவு மூலம் பதிவுசெய்து போட்டுக் காட்ட, அதன்பிறகே அனுஷ்காவுக்கு நம்பிக்கை வந்து ஏற்றுக்கொண்டிருக்கிறார். 2005-ல் தொடங்கி தமிழ், தெலுங்கில் 35 படங்களில் அனுஷ்கா நடித்து முடித்துவிட்டாலும், தமிழில் சொந்தக் குரல் கொடுக்க இருப்பது இதுவே முதல் முறை.