

காக்கியும் காதலும்
‘கனா’, ‘க/பெ. ரணசிங்கம்’ படங்களில் அமைந்தது போல் கதாநாயகியின் போராட்டக் களமாக, கதைக்களம் அமைவது அபூர்வம். அப்படியொரு களம் ‘திட்டம் இரண்டு’ படத்தின் மூலம் தனக்கு மீண்டும் அமைந்துவிட்டதாகக் கூறுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இன்று சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தில், திருமணத்துக்குப்பின் காணாமல் போன தோழியை கண்டுபிடிக்க முயலும் புலன் விசாரணை காவல் அதிகாரியாக நடித்திருக்கிறாராம். “பெண் போலீஸ் காக்கி அணிந்துவிட்டால், காதல் மனதைக் கழற்றி வைத்துவிட வேண்டும் என்று சமூகம் நினைக்கிறது. ஆனால், எல்லா பெண்களையும் போல் எல்லா உணர்வுகளும் கொண்ட பெண் தானே அவளும். ஆதிரா என்கிற பெயரில் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறேன். காதலுக்கும் எனக்குமான மல்லுக்கட்டுதான் கதை. நிச்சயமாக இது ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் காதல் அல்ல” என்று புதிர் போடுகிறார்.
மீண்டும் துஷாரா
‘சார்பட்டா பரம்பரை’ படத்தைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. நாயகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்க, நாயகியாக துஷாரா நடிக்கிறார். 'சார்பட்டா பரம்பரை' படத்தில் கபிலனாக நடித்த ஆர்யாவின் மனைவி மாரியம்மா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். படத்தில், முதலிரவுக் காட்சியில் இவர் போட்டக் குத்தாட்டம் குறித்து சமூக வலைதளத்தில் இன்னும் விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன் ஜோடியாக ராஷ்மிகா
‘ஜதி ரத்னாலு’ என்கிற பிளாக் பஸ்டர் தெலுங்கு ரொமாண்டிக் காமெடிப் படத்தை இயக்கியவர் அனுதீப். அவரது இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் மூலம் டோலிவுட்டில் நுழைகிறார்.. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார் ராஷ்மிகா மந்தனா. இது வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படம்.
பாராட்டும் பார்வதி
இயக்குநர்கள் மணி ரத்னம், ஜெயேந்திரா இருவரும் இணைந்து தயாரித்துள்ள ஆந்தாலஜி திரைப்படம் ‘நவரசா’. வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் இதனை, 190 நாடுகளில் வாழும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இதில், ஒன்பது வகையான மனித உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒன்பது குறும்படங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில், ரதீந்திரன் பிரசாத் இயக்கத்தில் சித்தார்த் - பார்வதி திருவோத்து இணைந்து நடித்திருக்கும் படம் ‘இன்மை’. ‘ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதுவாகவே மாறிவிடும் அபாரத் திறமை கொண்டவர்’ எனக் கொண்டாடப்படும் பார்வதி, இந்தப் படத்தில் தன்னுடன் திரை வெளியைப் பகிர்ந்துகொண்ட நடிகர் சித்தார்த்தைப் பாராட்டித் தள்ளியிருக்கிறார். "சித்தார்த், கண்களைக்கொண்டு உணர்வுகளை வெளிப்படுத்துவதில் திறன் வாய்ந்த நடிகர். படப்பிடிப்பில் கண்களின் வழியே அவர் வெளிப்படுத்தும் உணர்வுகளைத் தெளிவாக உள்வாங்கி நம்மால் தடையின்றி நடிக்க முடியும். படப்பிடிப்புக்கு முன், இணையம் வழியாக நாங்கள் இருவரும் ஒத்திகை செய்து வந்தோம். அப்போதே அவரைக் குறித்து நான் வியந்துபோனேன்” என்று கூறியிருக்கிறார்.