ஓடிடி உலகம்: கற்பிதங்களை நொறுக்கும் சாரா’ஸ்

ஓடிடி உலகம்: கற்பிதங்களை நொறுக்கும் சாரா’ஸ்
Updated on
2 min read

‘விரும்பிய தேதியில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக சிசேரியன் அறுவைசிகிச்சை செய்து கொள்வது தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்தானது. தங்கள் நம்பிக்கையையொட்டி மகப்பேற்றினை மாற்றியமைக்க முயல்வது தவறானது, அவசியமான காரணங்கள் இருந்தால் மட்டுமே சிசேரியன் செய்யப்பட வேண்டும்’ என்கிற கருத்தினை அண்மையில் தெரிவித்திருந்தார், தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரான மா.சுப்பிரமணியம். இக்கருத்து பொதுவெளியில் விவாதத்துக்கு உள்ளானது. ‘பெண்ணுடல்-பெண்ணுரிமை’யை வலியுறுத்தும் ‘சாரா’ஸ்’ என்கிற மலையாள திரைப்படமும் தற்போது விவாதங்களை எழுப்பி வருகிறது.

கர்ப்பம் தரிப்பது, குழந்தைப் பேறு ஆகியவற்றை அடியோடு நிராகரிக்கும் பெண்ணாக வளர்கிறாள் சாரா. அவளை நெருங்கும் ஆண்களும் அதனாலேயே விலகுகிறார்கள். திரைத்துறையில் இயக்குநராகும் கனவோடு வளர்ந்த பிறகும் திருமணம், குழந்தைப்பேறு பற்றிய அவளுடைய முடிவில் மாற்றமில்லை. அந்த வகையில் தன்னையொத்த சிந்தனைகொண்ட ஜீவன் என்கிற இளைஞனைக் கண்டதும் சாராவுக்கு பிடித்துப் போகிறது. திருமணம் முடித்து உதாரணத் தம்பதியராகப் பரஸ்பரம் வளர்ச்சிக்கு ஆதரவாக இருவரும் வாழத் தொடங்குகிறார்கள்.

ஜீவன் அலுவலகத்தில் பதவி உயர்வு பெறுகிறான். உதவி இயக்குநராக இருந்தபடி வாய்ப்புகளைத் துரத்தி வந்த சாராவுக்கும் முதல் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், விபத்துக்கு ஒப்பான நிகழ்வாகக் கருதி, தான் திட்டமிடாத கருவுறலை சாரா எதிர்கொள்கிறாள். அவள் கணவனோ குழந்தை என்றதும் தான் கொண்ட முடிவிலிருந்து மாறுகிறான். தன்னுடைய கனவைக் கலைத்துவிடக்கூடும் என குழந்தைப்பேற்றை தவிர்ப்பதில் சாரா உறுதியாக இருக்கிறாள்.

குழந்தையா, லட்சியமா என்கிற ஊசலாட்டத்தில் சாரா என்ன முடிவெடுக்கிறாள், சக மனிதர் உணரும் வகையில் அது எந்தளவுக்கு வலுவாகச் சொல்லப்படுகிறது என்பதே சாரா’ஸ் இப்படம். பெண்ணை ஒடுக்கும் திருமணம், குழந்தைப் பேறு, குழந்தை வளர்ப்பினைக் கடமையாகத் திணிக்கும் நமது குடும்ப அமைப்பு ஆகியவை பரவலாகக் கேள்விக்குள்ளாகி வருவதை சாரா வழியாகப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது இந்தப் படம். தாய்மை, புனிதம், தியாகம் இன்னபிற கற்பிதத் தளவாடங்களை எல்லாம் சரியான தருணங்களில் வைத்து உடைத்துப் போடுகிறார்கள். போலி பெண்ணியம், ஆண்கள் ‘அனுமதிக்கும்’ பெண் சுதந்திரம், குடும்ப வாழ்க்கை முழுமை பெறுவதற்கு குழந்தை அவசியம் என்பது உள்ளிட்ட இத்யாதிகளை போகிற போக்கில் உடைத்து நொறுக்கியிருக்கிறார் இயக்குநர் ஜூடு ஆன்டனி ஜோசப். அதற்கு கூரான வசனங்கள் துணை நின்றுள்ளன.

சாராவாக வரும் அன்னா பென்னின் கண்களே தனி வசனங்களைப் பேசிவிடுகின்றன. அதிலும் காதலனின் கேள்விகளுக்கு இல்லை என்பதையே வெவ்வேறு தொனிகளில் சொல்வது, முத்தாய்ப்பாகப் பத்திரிகையாளரின் கேள்விக்கு விரியும் விழிகளில் பதில் பொதித்திருப்பது என வியப்பூட்டும் நடிப்பை வெளிப்படுத்துகிறார். மாஜி ஆண் நண்பர்கள் குறித்த ஆட்டோகிராஃப் நினைவுகூரல், விபத்தாய் கருவுற்றதை எதிர்கொள்ளும் பெண்ணின் தவிப்பு போன்ற காட்சிகளில் ரசிக்கவும் வைக்கிறார்.

சக மனுஷியை உள்ளார்ந்து புரிந்துகொள்வதும், தோள் தருவதுமான காதல் கணவனாக வரும் சன்னி வேய்ன், சகலத்திலும் மகளை அரவணைத்து வழிகாட்டும் தந்தையாக தோன்றும் பென்னி, மாமியாராக மல்லிகா சுகுமாரன், மருத்துவராக சித்திக் எனப் பிரதான கதாபாத்திரங்கள் அனைத்துமே நிறைவான தேர்வு. லேசான பிரச்சார நெடி, அநாவசிய பாடல்களின் இடைச்செருகல் உள்ளிட்ட சில தொய்வுகளை ஒதுக்கிவிட்டால், அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் சாரா’ஸ், பெண்களின் கொண்டாட்டத்துக்குரிய, ஆண்களும் காணவேண்டிய ஒரு திரைப்படம். அனிமேஷனில் முல்லைப் பெரியாறு அணை உடைப்பின் திணிப்பு போன்ற விஷமத்தனமான காட்சிகளைத் தொடர்வதன் மர்மம் மட்டும் பிடிபடவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in